தமிழக கிரிக்கெட் வீரர் ராஜகோபால் சதீஷ், இணையதளம் வாயிலாக மேட்ச் பிக்சிங் செய்திட ரூ40 லட்சம் பேரம் பேசப்பட்டதாக பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
41 வயதாகும் இவர், ஐபிஎல் தொடரில் மும்பை, பஞ்சாப், கொல்கத்தா அணிக்களுக்காக விளையாடியுள்ளார். தமிழ்நாட்டில் நடைபெறும் டிஎன்பிஎல் தொடரில் கடந்த சீசனில் சென்னை சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அணிக்காக விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேட்ச் பிக்சிங் தொடர்பாக டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழிடம் பேசிய சதீஷ், " இந்த மாதத்தின் தொடகத்தில் இன்ஸ்டாகிராம் வலைதளத்தில் Bunny Anand என்ற கணக்கில் இருந்து, மேட்ச் பிக்சிங் செய்திட ரூ40 லட்சம் தருவதாக மெசேஜ் வந்தது. உடனடியாக அந்த ஆஃபரை மறுத்துவிட்டேன்.
இதை பற்றி புகாரளிப்பது எனது கடமையாகும். உடனடியாக, பிசிசிஐ ஊழல் தடுப்பு பிரிவுக்கு (ஏசியு) தகவல் தெரிவித்தேன். அவர்களின் ஆலோசனையின் பேரில் சில வாரங்களுக்கு முன்பு போலீசில் புகார் அளிக்கச் சென்றேன்.
அதே சமயம், டிஎன்பிஎஸ் தொடரில் தான் மேட்ச் பிக்சிங் செய்ய வேண்டும் என என்னிடம் குறிப்பிடவில்லை" என்றார்.
ஸ்பாட் பிக்சிங் மற்றும் மேட்ச் பிக்சிங் குற்றச்சாட்டுகள் வெளிவந்தபோது TNPL சில ஆண்டுகளுக்கு முன்பு சர்ச்சையில் சிக்கியது. ஆனால், தகுந்த ஆதாரம் இல்லாதது காரணமாக, பிசிசிஐ அந்த குற்றச்சாட்டை நிராகரித்தது.
பிசிசிஐ ஊழல் தடுப்பு தலைவர் ஷபீர் கந்த்வாவாலா கூறுகையில், "இணையதளம் வழியாக பிக்சிங் செய்ய நடந்த முயற்சி குறித்து சதீஷ் எங்களிடம் தெரிவித்தார். இம்மாத துவக்கத்தில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் தெரிவித்துள்ளோம்.
இதுகுறித்து போலீசில் புகார் தருமாறு அவருக்கு அறிவுறுத்தினோம். தற்போது காவல் துறையினர் இச்சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்" என்றார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil