தஞ்சை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் இருந்து நேற்று இரவு விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வந்தார். அவரை அமைச்சர்கள் ரகுபதி, அன்பில் மகேஷ், மெய்யநாதன், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள், தி.மு.க தொண்டர்கள் என பலரும் உற்சாகமாக வரவேற்றனர்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருச்சி விமான நிலையம் வந்தபோது, அவரை தேசிய அளவிலான பளுதூக்கும் போட்டியில் வெற்றி பெற்று, தென் ஆப்ரிக்கா நாட்டில் நடைபெறவுள்ள காமன்வெல்த் பவர்லிஃப்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க தேர்வாகியுள்ள மணப்பாறையைச் சேர்ந்த ராஜேஸ்வரி, விநாயகமூர்த்தி பாலமுருகன், திருச்சியைச் சேர்ந்த ஷேக் அப்துல்லா ஆகிய விளையாட்டு வீரர்கள் ஆகிய மூவரும் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
இதனைத்தொடர்ந்து. 'பளுதூக்கும் போட்டிகளில் வெல்லும் வீரர்களுக்கு மத்திய அரசு துறைகளில் பணி வழங்கப்படுகிறது. அதே போன்று தமிழக அரசின் அரசு துறைகளில் பணி வழங்க வேண்டும்' என கோரிக்கை வைத்தனர்.
இது குறித்து பேசிய விளையாட்டு வீரர்கள் 'நாங்கள் வைத்த கோரிக்கையை நிறைவேற்றுவது குறித்து பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக அமைச்சர் கூறினார். உரிய நடவடிக்கை எடுக்கின்றேன் என்றும் உறுதி அளித்தார்." என்று கூறினார். 3 வீரர்களில் ஷேக் அப்துல்லா ஏற்கனவே காமன்வெல்த் போட்டியில் கலந்து கொண்டு தங்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி: க.சண்முகவடிவேல் - திருச்சி
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“