Advertisment

TNPL 2018: டி.என்.பி.எல். கிரிக்கெட் இன்று தொடக்கம், வெளி மாநில வீரர்களுக்கு தடை

TNPL 2018: உச்சநீதிமன்றம் இது தொடர்பான வழக்கில் இன்று(ஜூலை 11) வெளிமாநில வீரர்கள் பங்கேற்க தடை விதித்தது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
TNPL 2018, டிஎன்பிஎல் 2018, தமிழ்நாடு பிரீமியர் லீக்

TNPL 2018, டிஎன்பிஎல் 2018, தமிழ்நாடு பிரீமியர் லீக்

ஆசைதம்பி

Advertisment

TNPL 2018: டி.என்.பி.எல். கிரிக்கெட் இன்று தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும் திருச்சி வாரியர்ஸ் அணியும் மோதுகின்றன.

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் நடத்தப்படும் 'டிஎன்பிஎல்' எனப்படும் தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 தொடரின் மூன்றாவது சீசன் இன்று (ஜூலை 11) தொடங்குகிறது. கடந்த 2016ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த டி20 கிரிக்கெட் தொடர், வெற்றிகரமாக தற்போது மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

டி.என்.பி.எல். முதல் சீசனில், டூட்டி பாட்ரியாட்ஸ் சாம்பியன் பட்டம் வெல்ல, இரண்டாவது சீசனில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி கோப்பையை கைப்பற்றியது. இதில் என்னவொரு ஆச்சர்யம் எனில், முதல் சீசனில் இறுதிப் போட்டியில் தோற்ற அணி சேப்பாக் சூப்பர் கில்லீஸ். இரண்டாவது சீசனில் இறுதிப் போட்டியில் தோற்ற அணி டூட்டி பாட்ரியாட்ஸ். இரு சீசனிலும் இவ்விரு அணிகளின் ஆதிக்கம் தான் அதிகம்.

இந்நிலையில், இன்று தொடங்கும் மூன்றாவது டிஎன்பிஎல் சீசன் ஆகஸ்டு 12ம் தேதி வரை சென்னை, நெல்லை, நத்தம் ஆகிய மூன்று இடங்களில் நடைபெறுகிறது. இதில், நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், டூட்டி பேட்ரியாட்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், விபி காஞ்சி வீரன்ஸ், லைக்கா கோவை கிங்ஸ், ஐடீரீம் காரைக்குடி காளை, சீச்செம் மதுரை பேந்தர்ஸ், ரூபி திருச்சி வாரியர்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன.

ஒவ்வொரு அணியும் 3 வீரர்களை தக்க வைத்துக் கொண்டுள்ளது. சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி எஸ்.கார்த்திக், ஆர்.அலெக்சாண்டர், சசிதேவ் ஆகிய வீரர்களை தக்க வைத்துக் கொண்டது. டூட்டி பாட்ரியாட்ஸ் அணி சுப்ரமணியன் ஆனந்த், ஆகாஷ் சும்ரா, கணேஷ் மூர்த்தியை தக்க வைத்தது.

கோவை கிங்ஸ் அணி ரோகித், பிரதோஷ் ரஞ்சன் பால், அஜித் ராம் ஆகிய வீரர்களை தக்க வைத்தது. மதுரை பேந்தர்ஸ் அணி அருண்கார்த்திக், ஷிஜித் சந்திரன், கார்த்திகேயன் ஆகிய வீரர்களையும், திருச்சி வாரியர்ஸ் அணி இந்திரஜித், பரத் சங்கர், விக்னேஷ் ஆகிய வீரர்களையும், காஞ்சி வீரன்ஸ் அணி அபராஜித், சிலம்பரசன், சஞ்சய்யாதவ் உள்ளிட்ட வீரர்களையும், திண்டுக்கல் டிராகன்ஸ் அணி ஆர்.அஸ்வின், ஜெகதீசன், விவேக் ஆகிய வீரர்களையும், ஷாஜகான், ராஜ்குமார், மோகன் பிரசாத் உள்ளிட்ட வீரர்களை காரைக்குடி காளை அணியும் தக்க வைத்துக் கொண்டன.

இந்த சீசனில் மொத்தம் 32 ஆட்டங்கள் நடக்க உள்ளன. ஞாயிற்றுக்கிழமையன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெறும் போது, முதல் போட்டி பிற்பகல் 3.15 மணிக்கும், இரண்டாவது போட்டி இரவு 7.15 மணிக்கும் தொடங்குகிறது. மற்ற தினங்களில் நடக்கும் போட்டிகள் அனைத்தும் இரவு 7.15 மணிக்கு தொடங்கும். போட்டிகள் அனைத்தையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் சேனலில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. நெல்லையில் முதல் சீசனில் 8 ஆட்டங்களும், 2-வது சீசனில் 13 போட்டிகளும் நடந்தன. தற்போது 14 போட்டிகள் நடத்தப்படுகிறது.

கடந்த சீசனுடன் ஒப்பிடும் போது, காரைக்குடி, மதுரை, தூத்துக்குடி ஆகிய அணிகளின் உரிமையாளர்கள் மாறி இருக்கிறார்கள். இதே போல் திருவள்ளூர் வீரன்ஸ் அணி, காஞ்சி வீரன்ஸ் என்று பெயரை மாற்றி இருக்கிறது.

ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும். முதல் தகுதி சுற்று ஆட்டம் நெல்லையிலும், வெளியேற்றுதல் சுற்று மற்றும் 2-வது தகுதி சுற்று ஆட்டம் திண்டுக்கல்லிலும், இறுதிப்போட்டி சென்னையிலும் நடத்தப்படுகிறது.

ஒவ்வொரு அணியிலும் முதல்முறையாக வெளிமாநில வீரர்கள் 2 பேர் விளையாட தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அனுமதி அளித்து இருந்தது. ஆனால் இதற்கு இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாக கமிட்டியினர் ஆட்சேபனை தெரிவித்து இருந்தனர். உச்சநீதிமன்றம் இது தொடர்பான வழக்கில் இன்று(ஜூலை 11) வெளிமாநில வீரர்கள் பங்கேற்க தடை விதித்தது.

இங்கிலாந்து தொடரில் இடம் பெற்று இருந்த ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் காயம் காரணமாக நாடு திரும்பிவிட்டார். தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள அவர் முதல் சில ஆட்டங்களில் ஆடுவது சந்தேகம் தான். திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் கேப்டனும், இந்திய முன்னணி சுழற்பந்து வீச்சாளருமான ரவிச்சந்திரன் அஷ்வின், இங்கிலாந்து டெஸ்ட் தொடர் தொடங்கும் வரை டிஎன்பிஎல் தொடரில் விளையாடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காரைக்குடி காளை அணியின் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் இப்போது இந்திய அணியுடன் இங்கிலாந்தில் இருக்கிறார். இதனால் அவரும் தொடக்க கட்ட ஆட்டங்களில் விளையாட முடியாது. டெஸ்ட் அணியிலும் சேர்க்கப்பட்டால் அவர் டி.என்.பி.எல். போட்டியை முழுமையாக விளையாட முடியாமல் போகும்.

நெல்லையில் இன்று மாலை 6 மணியளவில் தொடக்க விழா நடைபெறுகிறது. கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்ட பின்பு, இரவு 7.15 மணிக்கு தொடங்கும் முதலாவது லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும் திருச்சி வாரியர்ஸ் அணியும் மோதுகின்றன. இந்த போட்டி தொடரை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ், ஸ்டார் ஸ்போர்ட்ஸ்-1 சேனல்கள் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

திண்டுக்கல் டிராகன்ஸ் அணி:

ரவிச்சந்திரன் அஷ்வின்(கேப்டன்), சதுர்வேத் என்.எஸ், ஹரி நிஷாந்த் சி, அனிருத் சீதா ராம், மொஹம்மத் எம், ரோஹித் ஆர், ஆதித்யா அருண், அபினவ் எம், சிலம்பரசன், திரிலோக் நாக், யாழ் அருண் மொழி, சுஜேந்திரன் எம், கௌஷிக் ஜே, என் ராமகிருஷ்ணன், ரா அரவிந்த், நிவேதன் ராதாகிருஷ்ணன், வருண் எம் தோத்தாரி.

திருச்சி வாரியர்ஸ் அணி:

பாபா இந்த்ரஜித் (கேப்டன்), சோனு யாதவ், சஞ்சய் எம்எஸ், முரளி விஜய், சி.கணபதி, சுரேஷ் குமார் எஸ், வசந்த் சரவணன், அரவிந்த் எஸ், லக்ஷ்மி நாராயணன் எம், விக்னேஷ் எல், சந்திரசேகர், அஷ்வின் கிரிஸ்ட், மணி பாரதி கே, சரவண குமார் பி, ஏஎஸ் கோவிந்த ராஜன், ஆர்எஸ் திலக், வி ஆகாஷ்.

இத் தொடரில் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.1 கோடியும், 2-வது இடத்தை பிடிக்கும் அணிக்கு ரூ.60 லட்சமும் பரிசாக வழங்கப்படும்.

 

Tnpl Aasai Tambi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment