தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் நடத்தப்படும் ‘டிஎன்பிஎல்’ எனப்படும் தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 தொடரின் மூன்றாவது சீசன் கடந்த ஜூலை 11ம் தேதி தொடங்கியது. சென்னை, நெல்லை, நத்தம் ஆகிய மூன்று இடங்களில் போட்டிகள் நடைபெற்றது. சேப்பாக் சூப்பர் கில்லீஸ், டூட்டி பேட்ரியாட்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், விபி காஞ்சி வீரன்ஸ், லைக்கா கோவை கிங்ஸ், ஐடீரீம் காரைக்குடி காளை, சீச்செம் மதுரை பேந்தர்ஸ், ரூபி திருச்சி வாரியர்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்றன.
ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோதின. முதல் தகுதி சுற்று ஆட்டம் நெல்லையிலும், வெளியேற்றுதல் சுற்று மற்றும் 2-வது தகுதி சுற்று ஆட்டம் திண்டுக்கல்லிலும், இறுதிப்போட்டி சென்னையிலும் நடந்தது.
இந்நிலையில், டிஎன்பிஎல் போட்டியின் இறுதி ஆட்டம் சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் ஜெகதீசன் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும், ரோகித் தலைமையிலான மதுரை பாந்தர்ஸ் அணியும் மோதின.
முதலில் ஆடிய திண்டுக்கல் அணி 117 ரன்கள் சுருண்டது. தொடர்ந்து ஆடிய மதுரை பாந்தர்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 118 ரன்கள் எடுத்து, 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்று முதன்முறையாக டிஎன்பிஎல் கோப்பையை உச்சிமுகர்ந்தது.
இதைத் தொடர்ந்து, சாம்பியன் பட்டம் வென்ற மதுரை பாந்தர்ஸ் அணிக்கு ஒரு கோடி ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்பட்டது. இரண்டாம் இடம் பிடித்த திண்டுக்கல் அணிக்கு 60 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்பட்டது. அரை இறுதி வரை தேர்வான அணிகளுக்கு 40 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.
ஆட்ட நாயகன், தொடர் நாயகன் (472), அதிக சிக்சர்கள் (23) அடித்த வீரர் விருது ஆகியவை அருண் கார்த்திக்கிற்கு வழங்கப்பட்டது. தொடரில் அதிக விக்கெட் (15) வீழ்த்திய வீரர் அபிஷேக் தன்வருக்கு அளிக்கப்பட்டது. சிறந்த கேட்ச் பிடித்த வீரர் ஷாருக் கானுக்கும், அதிக பவுண்டரிகள் (45) அடித்த வீரர் விருது ஜெகதீசனுக்கும் வழங்கப்பட்டது.