TNPL Final: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் நடத்தப்படும் ‘டிஎன்பிஎல்’ எனப்படும் தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 தொடரின் மூன்றாவது சீசன் கடந்த ஜூலை 11ம் தேதி தொடங்கியது.
சென்னை, நெல்லை, நத்தம் ஆகிய மூன்று இடங்களில் நடைபெற்ற இந்தத் தொடரில், நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், டூட்டி பேட்ரியாட்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், விபி காஞ்சி வீரன்ஸ், லைக்கா கோவை கிங்ஸ், ஐடீரீம் காரைக்குடி காளை, சீச்செம் மதுரை பேந்தர்ஸ், ரூபி திருச்சி வாரியர்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்று விளையாடின.
இதன் முடிவில் திண்டுக்கல் டிராகன்ஸ், மதுரை பாந்தர்ஸ், கோவை கிங்ஸ், காரைக்குடி காளை ஆகிய அணிகள் முதல் 4 இடங்களை பிடித்து ‘பிளேஆப்’ சுற்றுக்கு தகுதி பெற்றன.
இந்நிலையில், டிஎன்பிஎல் போட்டியின் இறுதி ஆட்டம் சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்று இரவு 7.15 மணிக்கு நடக்கிறது. இதில் ஜெகதீசன் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும், ரோகித் தலைமையிலான மதுரை பாந்தர்ஸ் அணியும் மோதுகின்றன.
இரு அணிகளும் இந்தப் போட்டித் தொடரில் 3-வது முறையாக மோதுகின்றன. இதில் திண்டுக்கல் அணியே 2 முறை வென்றுள்ளது. இதனால் அந்த அணி டிஎன்பிஎல் கோப்பையை முதல் முறையாக கைப்பற்றும் முனைப்பில் உள்ளது. அதேசமயம், இறுதிப் போட்டியில் திண்டுக்கல் அணியை வென்றுவிட வேண்டும் என்றும் மதுரை பாந்தர்ஸ் அணி வீரர்கள் தீவிர பயிற்சி மேற்கொண்டுள்ளனர்.