TNPL 2018: டி.என்.பி.எல். தொடக்க ஆட்டத்தில் திருச்சி வாரியர்ஸ் வெற்றி பெற்றது. ஆர்.அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் அணியை வீழ்த்தியது.
தமிழ்நாடு பிரீமியர் லீக் என அழைக்கப்படும் டி.என்.பி.எல். 3-வது ஆண்டாக நடக்கிறது. இதன் முதல் ஆட்டம் திருநெல்வேலியில் நேற்று(ஜூலை 11) நடைபெற்றது. தொடக்க ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் - ரூபி திருச்சி வாரியர்ஸ் அணிகள் மோதின.
திண்டுக்கல் டிராகன்ஸ் அணி ‘டாஸ்’ வென்று பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணியின் விக்கெட் கீப்பர் என் ஜெகதீசன், ஹரி நிசாந்த் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ஜெகதீசன் 8 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். ஹரி நிஷாந்த் 27 பந்தில் 5 பவுண்டரி, 1 சிக்சருடன் 41 ரன்களும், ரோகித் 30 பந்தில் 3 பவுண்டரி, 3 சிக்சருடன் 46 ரன்களும் சேர்த்து ஆட்டமிழந்தனர். அனிருத் 8 ரன்னில் ஏமாற்றினார்.
கேப்டன் அஸ்வின் 28 பந்தில் 6 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 42 ரன்கள் எடுக்க, திண்டுக்கல் டிராகன்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்துள்ளது. ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியில் சஞ்செய், லட்சுமி நாராயணன், குமரன் தலா இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.
திருச்சி வாரியர்ஸ் வெற்றிக்கு173 ரன்கள் தேவை என்கிற கடின இலக்குடன் களமிறங்கியது. பரத் சங்கர், பாபா இந்திரஜித் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். இந்திரஜித் 14 ரன்களிலும், அரவிந்த் 19 ரன்களிலும், கணபதி 5 ரன்னிலும் மணி பாரதி 3 ரன்னிலும் அவுட்டாகினர். பரத் சங்கர் 39 ரன்னில் வெளியேறினார்.
ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் செல்வம் சுரேஷ்குமார் பொறுப்பாக ஆடினார். அவர் இறுதி வரை போராடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார். இறுதியில், ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி 19.5 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 175 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
டிஎன்பிஎல் 2-வது போட்டியில் இன்று மதுரை பேந்தர்ஸும், திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும் மோதுகின்றன.