பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தமிழ்நாடு ப்ரீமியர் கிரிக்கெட் லீக் போட்டிகள் நேற்று தொடங்கியது. முதல் போட்டியில் ‘சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ்’ மற்றும் ‘திண்டுக்கல் டிராகன்ஸ்’ அணிகள் மோதின். இதில், 10 ரன்கள் வித்தியாசத்தில் சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸை வீழ்த்தி திண்டுக்கல் டிராகன்ஸ் வெற்றி பெற்றது.
இந்நிலையில், இன்று பிற்பகல் 3.30 மணிக்கு திண்டுக்கல் என்பிஆர் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், ஸ்ரீகாந்த் அனிருதா தலைமையிலான காரைக்குடி காளை அணியும், சாய் கிஷோர் தலைமையிலான ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியும் மோதின.
டாஸ் வென்ற திருச்சி அணி முதலில் பவுலிங் செய்தது. காரைக்குடி அணியின் தொடக்க வீரர் ஆதித்யா 1 ரன்னில் ஆட்டமிழந்தாலும், மற்றொரு ஓப்பனர் ஸ்ரீகாந்த் அனிருதா அனாயசமாக கேஷுவல் சிக்ஸர்களையும், பவுண்டரிகளையும் விளாசினார். 36 பந்துகளில் 58 ரன்கள் எடுத்து அனிருதா அவுட்டானார். இதில், 7 பவுண்டரிகளும் 3 சிக்ஸர்களும் அடங்கும். 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 5 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்தது.
பிறகு, களமிறங்கிய திருச்சி அணியில் சென்னைப் பையன் முரளி விஜய் 56 பந்துகளில் 81 ரன்கள் திரட்டினார். இருப்பினும் லோ ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்ப 20 ஓவர்களில் அதே 5 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்ததால் ஆட்டம் டிராவானது.
இதைத் தொடர்ந்து நடைபெற்ற சூப்பர் ஓவரில் முதலில் பேட் செய்த திருச்சி, முரளி விஜய்யின் ஒரேயொரு சிக்ஸ் மூலம், 11 ரன்கள் எடுத்தது. இதில் இரு விக்கெட்டுகள் வேறு. ஆனால், பிறகு களமிறங்கிய காரைக்குடி அணியில், அனிருதா 2 மெகா சிக்ஸர்களை தெறிக்கவிட 2 பந்துகளை மீதம் வைத்து வென்றது.