Tamil Nadu Premier League (TNPL) Players Auction updates in tamil: 7-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) டி20 கிரிக்கெட் போட்டிகள் வருகிற ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்தத் தொடரில் வழக்கம் போல் 8 அணிகள் களமாடுகின்றன. இதுவரை இந்த போட்டியில் பங்கேற்கும் அணிகளுக்கான வீரர்கள் ஒதுக்கீடு முறையில் தேர்வு செய்யப்பட்ட நிலையில், இந்த ஆண்டு முதல்முறையாக வீரர்கள் ஏலம் விடப்பட இருக்கிறார்கள். இதன்படி, டிஎன்பிஎல் போட்டியில் களமாடும் வீரர்களுக்கான ஏலம் இன்றும் நாளையும் சென்னை மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது.
இந்நிலையில், முதல் நாள் ஏலத்தில், முதலில் ஏ பிரிவு வீரர்கள் ஏலம் நடந்தது. இதில் இந்திய அணிக்காக விளையாடிய 5 வீரர்கள் இடம் பெற்றிருந்தனர். அதில் விஜய் சங்கரை 10.25 லட்சத்துக்கு திருப்பூர் தமிழன்ஸ் அணியும் வாஷிங்டன் சுந்தரை மதுரை பாந்தர்ஸ் அணி ரூ.6.75 லட்சத்துக்கு ஏலம் எடுத்தது. மூன்றாவது வீரராக நடராஜனை 6.25 லட்சத்துக்கு திருச்சி அணி ஏலம் எடுத்தது. சந்தீப் வாரியரை நெல்லை அணி ரூ.8.5 லட்சத்துக்கு விலைக்கு வாங்கியது. சிவி வருணை மதுரை பாந்தர்ஸ் அணி ரூ.6.75 லட்சத்துக்கு வாங்கியது.
இதனை தொடர்ந்து பி பிரிவு வீரர்கள் ஏலம் நடைபெற்றது. ஏ பிரிவு வீரர்களில் ஆர்வம் காட்டாத சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பி பிரிவில் இடம் பெற்ற பாபா அப்ரஜித்தை 10 லட்சத்துக்கு ஏலம் எடுத்தது. தொடர்ந்து நடந்த ஏலத்தில், சஞ்சய் யாதவை ரூ. 17.60 லட்சத்துக்கு, சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி ஏலத்தில் எடுத்தது. சோனு யாதவை நெல்லை ராயல் கிங்ஸ் அணி ரூ.15.20 லட்சத்துக்கு ஏலம் எடுத்தது.
லைகா கோவை கிங்ஸ் சாய் சுதர்சனை ரூ. 21.60 லட்சத்துக்கு ஏலம் எடுத்தது. அருண் கார்த்திக் நெல்லை ராயல் கிங்ஸ் அணியால் ரூ.12 லட்சத்துக்கு வாங்கப்பட்டார். முருகன் அஸ்வினை மதுரை பாந்தர்ஸ் அணி 6.40 லட்சத்துக்கு ஏலம் எடுத்தது. திருப்பூர் தமிழன்ஸ் அணி சாய் கிஷோரை ரூ. 13 லட்சத்துக்கு ஏலம் எடுத்தது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil