Chepauk Super Gillies vs IDream Tiruppur Tamizhans TNPL 2023 Tamil News: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் நடத்தப்படும் 7வது டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், கோவையில் இன்று நடைபெற்ற போட்டியில் திருப்பூர் தமிழன்ஸ் - சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் மோதியது. இந்த இரவு 7.00 மணிக்கு தொடங்கியது.
இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த திருப்பூர் தமிழன்ஸ் அணியில், துஷார் ரஹஜா 2 ரன்களிலும், சதுர்வேத் 8 ரன்களிலும் பெவிலியன் திரும்பினர். 3-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய விஷால் வித்யா 7 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். இதனால் 24 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்த திருப்பூர் அணிக்கு 4-வது விக்கெட்டுக்கு இணைந்த ராதாகிருஷ்ணன் விஜய் சங்கர் இருவரும் ரன் குவித்து காப்பாற்றினர்.
இதில் ராதாகிருஷ்ணன் 36 ரன்களும், விஜய் சங்கர் 28 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்த நிலையில், அடுத்து வந்த ராஜேந்திரன் விவேக் 26 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவர்களில் திருப்பூர் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 120 ரன்கள் மட்டுமே எடுத்தது. சேப்பாக் அணி சார்பில் ஹரிஷ்குமார், ரஹில் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், அபாரஜித் ஒரு விக்கெட்டும் வீழ்ததினர்.
தொடர்ந்து 121 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியில் தொடக்க வீரர் பரதோஷ் பவுல் 25 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் கேப்டன் ஜகதீசன் 13 ரன்களில் பெவிலியன் திரும்பினார். 3-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய அபாரஜித் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்த சஞ்சய் யாதவ் 22 ரன்களில் ஆட்டமிழந்தாலும், அடுத்து வந்த ஹரிஷ்குமார் அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார். 15.4 ஓவர்களில் சேப்பாக் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 121 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அபாரஜித் 29 பந்துகளில் 4 பவுண்டரி 3 சிக்சருடன் 46 ரன்கள் குவித்து களத்தில் இருந்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil