7-வது டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் தமிழகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், கோவையில் இன்று இரவு நடைபெற்ற 4வது லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் - பால்சி திருச்சி அணிகள் மோதியது
இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த திருச்சி அணியில், கங்கா ஸ்ரீதர் ராஜூ, ஜாபர் ஜமால் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில் ஜமால் 4 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், அடுத்து வந்த அக்ஷை சீனிவாசன் ரன் கணக்கை தொடங்காமலே பெவிலியன் திரும்பினார்.
தொடர்ந்து களமிறங்கிய பெராரியோ 5 ரன்களிலும், மணிபாரதி 2 ரன்களிலும், ஷாஜகான் 13 ரன்களிலும், அந்தோனி தான் 0 ரன்களுக்கும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும் மறுமுனையில் சிறப்பாக விளையாடிய கேப்டன் கங்கா ஸ்ரீதர் ராஜூ 41 பந்துகளில் 48 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
அதிரடியாக விளையாடிய ராஜ்குமார் 22 பந்துகளில் 1 பவுண்டரி 4 சிக்சருடன் 39 ரன்கள் குவித்தார். 19.1 ஓவர்களில் திருச்சி அணி 120 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. திண்டுக்கல் அணி தரப்பில் சக்ரவர்த்தி 3 விக்கெட்டுகளும், அஸ்வின், சரவணகுமார், பதி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
தொடர்ந்து 121 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய திண்டுக்கல் அணியில், தொடக்க வீரர் விமல் குமார் ரன் கணக்கை தொடங்காமலே ஆட்டமிழந்தாலும், அடுத்து வந்த பாபா இந்திரஜித் தொடக்க வீரர் ஷிவம் சிங்குடன் ஜோடி சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 58 ரன்கள் சேர்த்த நிலையில், ஷிவம் சிங் 46 ரன்களில் வெளியேறினார்.
அதன்பிறகு இந்திரஜித் 22 ரன்களிலும், சரத்குமார் 5 ரன்களிலும் ஆட்டமிழந்தாலும், திண்டுக்கல் அணி 14.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 122 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆதித்யா கனேஷ் 20 ரன்களுடனும், பதி 8 பந்துகளில் 2 சிக்சருடன் 19 ரன்களும் எடுத்து களத்தில் இருந்தனர்.
திருச்சி அணி தரப்பில், நடராஜன், சிலம்பரசன், அலக்சாண்டர், அந்தோனி தாஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil