கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்த தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டிகள் இன்று தொடங்குகின்றன. இன்றைய முதல் போட்டியில் ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணியும் லைகா கோவை கிங்ஸ் அணியும் மோதுகின்றன.
இதையும் படியுங்கள்: தோனியை பி.ஆர் டீம் ஹீரோ ஆக்கிவிட்டது; 2 உலகக் கோப்பை நிஜ ஹீரோ யுவராஜ் சிங்: கம்பீர் அதிரடி
டி.என்.பி.எல் 2023 சீசனின் முதல் போட்டி இன்று கோவையில் கோலாகலமாக தொடங்குகிறது. முதல் போட்டியில் ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணியும் லைகா கோவை கிங்ஸ் அணியும் மோதுகின்றன. இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்தப் போட்டி கோயம்புத்தூர் எஸ்.என்.ஆர் காலேஜ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.
கோவை அணிக்கு எதிரான இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற திருப்பூர் அணி பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது.
இரு அணிகளின் விளையாடும் வீரர்களின் விவரம்
ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ்: பால்சந்தர் அனிருத், என்.எஸ்.சதுர்வேத், எஸ்.கணேஷ், விஜய் சங்கர், ராஜேந்திரன் விவேக், துஷார் ரஹேஜா (விக்கெட் கீப்பர்), பி.புவனேஸ்வரன், எஸ்.அஜித் ராம், ரவிஸ்ரீனிவாசன் சாய் கிஷோர்(கேப்டன்), ஜி.பெரியசாமி, எஸ்.மணிகண்டன்.
லைகா கோவை கிங்ஸ்: பி சச்சின், ஜே சுரேஷ் குமார் (விக்கெட் கீப்பர்), சாய் சுதர்சன், ராம் அரவிந்த், யு முகிலேஷ், ஷாருக் கான் (கேப்டன்), எம் முகமது, கிரண் ஆகாஷ், மணிமாறன் சித்தார்த், ஜாதவேத் சுப்ரமணியன், கே கவுதம் தாமரை கண்ணன்
கோவை பேட்டிங்
கோவை அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக சச்சின் மற்றும் சுரேஷ்குமார் களமிறங்கினார். சச்சின் 2 ரன்களில் விஜய் சங்கர் பந்தில் சாய் கிஷோரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து களமிறங்கிய சாய் சுதர்சன் தொடக்கம் முதலே அதிரடியாக ஆடினார். இதற்கிடையில் மறுமுனையில் ஆடி வந்த சுரேஷ்குமார் 14 ரன்களில் புவனேஸ்வரன் பந்தில் எல்.பி.டபுள்யூ ஆனார். அடுத்து களமிறங்கிய ராம் அரவிந்த் முதல் பந்திலே டக் அவுட் ஆனார். அடுத்ததாக சாய் சுதர்சனுடன் முகிலேஷ் ஜோடி சேர்ந்தார். இருவரும் சிறப்பாக விளையாடி ரன்களை குவித்தனர்
சிக்சரும் பவுண்டரிகளுமாக விளாசிய சாய் சுதர்சன் அரை சதம் அடித்தார். அணியின் எண்ணிக்கை 14லிருந்து 96 ஆக உயர்ந்த நிலையில், முகிலேஷ் 33 ரன்களில் அவுட் ஆனார். அவர் சாய் கிஷோர் பந்தில் எல்.பி.டபுள்யூ ஆனார். அடுத்து வந்த அதிக் ரஹ்மான் 9 ரன்களில், விஜய் சங்கர் பந்தில் போல்டானார். அடுத்து வந்த ஷாரூக் கான் அதிரடியாக ஆடி ரன் சேர்த்தார். ஒரு சிக்சர் 2 பவுண்டரிகள் அடித்து 25 ரன்களில் சாய்கிஷோர் பந்தில் போல்டானார். அடுத்ததாக முகமது களமிறங்கி 1 பவுண்டரி அடித்தார்.
இந்தநிலையில், கடைசி பந்தில் சாய் சுதர்சன் ரன் அவுட் ஆனார். அவர் 45 பந்துகளில் 86 ரன்கள் விளாசினார். இதில் 4 சிக்சர்கள் மற்றும் 8 பவுண்டரிகள் அடங்கும். இதனையடுத்து கோவை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் சேர்த்தது. திருப்பூர் பந்துவீச்சில் விஜய் சங்கர் 3 விக்கெட்களையும், சாய் கிஷோர் 2 விக்கெட்களையும், புவனேஷ்வரன் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
திருப்பூர் பேட்டிங்
திருப்பூர் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக ரஹேஜா மற்றும் சதுர்வேத் களமிறங்கினர். சதுர்வேத் 4 ரன்களில் தாமரைக்கண்ணன் பந்தில் எல்.பி.டபுள்யூ ஆனார். அடுத்து களமிறங்கிய விஷால் பொறுமையாக விளையாடி ரன் சேர்த்தார். இருப்பினும் அவர் 16 ரன்களில் ஷாரூக் கான் பந்தில் எல்.பி.டபுள்யூ ஆனார். அடுத்து வந்த விஜய் சங்கர் 2 ரன்களிலும், சாய் கிஷோர் 1 ரன்னிலும், முகமது பந்தில் கேட்ச் கொடுத்து அவுட் ஆகினர். அடுத்து களமிறங்கிய கணேஷ் 1 ரன்னில் கிரண் ஆகாஷ் பந்தில் எல்.பி.டபுள்யூ ஆனார். இதனால் 52 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்து திருப்பூர் அணி தடுமாறியது.
அடுத்து களமிறங்கிய அனிருத் 3 ரன்களிலும், விவேக் 6 ரன்களிலும் அவுட் ஆகினர். அடுத்தாக அஜித் ராம் களமிறங்கிய நிலையில், மறுமுனையில் ஆடிவந்த ரஹேஜா 33 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து வந்த புவனேஸ்வரன் களமிறங்கினார். இருவரும் நிதானமாக விளையாடிய நிலையில், அஜித் ராம் 11 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்தாக மணிகண்டன் களமிறங்கி 8 ரன்கள் எடுத்திருந்த நிலையில், புவனேஷ்வரன் 12 ரன்களில் ஆட்டமிழந்தார். இத்துடன் திருப்பூர் அணியின் ஆட்டம் முடிவுக்கு வந்தது. திருப்பூர் 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 109 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் கோவை அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கோவை தரப்பில் ஷாரூக் கான் 3 விக்கெட்களையும், முகமது 2 விக்கெட்களையும், தாமரைக்கண்ணன், ஆகாஷ், முகிலேஷ், சுப்பிரமணியம் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.