தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் நடத்தப்படும் டி.என்.பி.எல் டி 20 கிரிக்கெட் தொடரின் 7-வது சீசன் போட்டிகள் வரும் 12-ம் தேதி தொடங்கி ஜூலை 12-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தத் தொடரில் பால்சி திருச்சி, சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ், லைகா கோவை கிங்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ், சேலம் ஸ்பார்ட்டன்ஸ் மற்றும் சீகம் மதுரை பேந்தர்ஸ் உள்ளிட்ட 8 அணிகள் களமாடுகின்றன.
இந்த தொடர் கோவை, திண்டுக்கல் சேலம் திருநெல்வேலி ஆகிய நான்கு நகரங்களில் இறுதிப்போட்டி உட்பட 32 போட்டிகள் நடைபெறுகிறது. தொடரின் குவாலிஃபையர் – 1 மற்றும் எலிமினேட்டர் போட்டிகள் சேலத்திலும், குவாலிஃபையர் -2 மற்றும் இறுதிப்போட்டி திருநெல்வேலியிலும் நடைபெறவுள்ளது. பிளே ஆஃப் ஆட்டத்தில் மழை பெய்தால் ‘ரிசர்வ் டே’-வும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிக விலைக்கு வாங்கப்பட்ட சாய் சுதர்சன்
தமிழக வீரரான சாய் சுதர்சனை லைகா கோவை கிங்ஸ் 21.60 லட்சத்துக்கு வாங்கியது. இதன்மூலம் டி.என்.பி.எல்-ல் அதிக தொகைக்கு வாங்கப்பட்ட வீரரானார். இதுவரை 26 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 859 ரன்களை எடுத்துள்ளார். ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடி வரும் சாய் சுதர்சன் நடப்பு சீசனில் 51.71 சராசரியுடன் 362 ரன்கள் எடுத்தார். சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் அவர் 96 ரன்களை குவித்து மிரட்டி இருந்தார். எனினும், இறுதிப் போட்டியில் குஜராத் அணியை சென்னை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.
டி.என்.பி.எல் போட்டிகளில் முன்பு சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியில் களமாடி விளையாடிய சாய் சுதர்சன் இம்முறை லைகா கோவை கிங்ஸ் அணியில் விளையாட தயாராகி வருகிறார். ஐபிஎல் தொடரில் விளையாடியது போல் தனது ஃபார்மை அவர் தொடர்வார் என நம்பலாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil