Salem Spartan Vs Chepauk Super Gillies - Abhishek Tanwar - TNPL 2023 Tamil News: தமிழத்தில் 7-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில், நேற்று இரவு கோவையில் நடைபெற்ற போட்டியில் சேலம் ஸ்பார்ட்டன்ஸ் - சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் மோதின. டாஸ் வென்று பேட்டிங் செய்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 217 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக அதிரடியாக விளையாடிய தொடக்க வீரர் பிரதோஷ் ரஞ்சன் 88 (55 பந்துகளில் - 12 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர்) ரன்கள் எடுத்தார். சேலம் அணியில் அதிகபட்சமாக சன்னி சந்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
தொடர்ந்து 218 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய சேலம் அணியினர் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து வெளியேறினர். முடிவில் சேலம் அணி 20 ஒவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் மட்டுமே எடுத்தது. சேலம் அணியின் சார்பில் அதிகபட்சமாக ஆத்னன் கான் 47 ரன்கள் எடுத்தார்.
சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியில் பாபா அபராஜித், விஜு அருள் மற்றும் ராக்கி பாஸ்கர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் ஹரிஷ் குமார், ரகில் ஷா, மற்றும் சிலம்பரசன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதன்மூலம் சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 52 ரன்கள் வித்தியாசத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அபார வெற்றிபெற்றது.
வாரிக்கொடுத்த கேப்டன்
இந்த ஆட்டத்தில் சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணியின் கேப்டன் அபிஷேக் தன்வார் போட்டியின் கடைசி ஓவரை வீசினார். 5 பந்துகளை வீசி முடித்த அவர் கடைசி பந்தை ஸ்ட்ரைக்கில் இருந்த சஞ்சய் யாதவுக்கு யார்க்காராக வீசினார். அவர் நினைத்தது போல் பந்தும் சஞ்சய் யாதவுக்கு பின்புறம் லெக் ஸ்டம்ப்பை பதம் பார்த்தது. ஆனால், அந்த பந்து நோ-பால் என நடுவர் அறிவித்தார். அதனால் அபிஷேக் தன்வார் மீண்டும் கடைசி பந்தை வீச அதை சிக்சருக்கு பறக்கவிட்டார் சஞ்சய் யாதவ்.
ரீ-பால் வீசப்பட்ட பந்தும் நோ-பால் என அறிவிக்கப்படவே, அபிஷேக் தன்வார் வீசிய அடுத்த ரீ-பாலும் நோ-பால் என அறிவிக்கப்பட்டது. அந்த பந்தில் சஞ்சய் யாதவ் 2 ரன்கள் எடுத்தார். அதன்பிறகு, வீசப்பட்ட ரீ-பால் ஒயிடு பால் என அறிவிக்கப்பட்டது. அதனால் அதற்காக வீசப்பட்ட ரீ-பாலில் சஞ்சய் யாதவ் சிக்ஸர் பறக்கவிட்டார். முடிவில், அந்த ஒரு பந்தில் மட்டும் கேப்டன் அபிஷேக் தன்வார் 18 ரன்களை விட்டுக் கொடுத்தார். இதன்மூலம் டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடர் வரலாற்றில் ஒரே பந்தில் அதிக ரன்களை விட்டுக்கொடுத்த வீரர் ஆனார் சேலம் ஸ்பார்டன்ஸ் அணியின் அபிஷேக் தன்வார். மேலும், அந்த ஓவரில் மட்டும் 1 4 0 1 N 1 N N6 N2 Wd 6 என 26 ரன்களை வாரிக்கொடுத்து இருந்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil