Salem Spartans vs Lyca Kovai Kings - TNPL 2023 Tamil News: 7-வது டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டிகள் தமிழகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 8 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடரின் நேற்றைய ஆட்டத்தில் சேலம் ஸ்பார்டன்ஸ் - கோவை கிங்ஸ் அணிகள் மோதின. இதில், கோவை அணி முதலில் பேட்டிங் செய்தது.
கோவை அணியின் தொடக்க வீரர் சுரேஷ் குமார் 4 ரன்னில் ஆட்டமிழந்தார். இதன்பிறகு, களத்தில் இருந்த சுஜயுடன் சாய் சுதர்சன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அணிக்கு வலுவான ரன்களை குவிக்க தொடங்கியது. அப்போது, சேலம் அணி வீரர்கள் தங்களது கவனக் குறைவால் சுஜயின் விக்கெட்டை தவற விட்டனர்.
போட்டியின் 3 வது ஓவரின் முதல் பந்தில் தொடக்க சுரேஷ் குமார் ஆட்டமிழந்த நிலையில், 4வது பந்தில் மற்றொரு தொடக்க வீரரான சுஜய் ரன் எடுக்க ஓடும்போது, கிரீஸ்க்கு அருகில் சென்று பேட்டை தரையில் வைக்காமல், கிரீஸ்க்கு மேல் குதித்தார். அதற்குள் சேலம் அணி வீரர் ரன் -அவுட்டிற்கு வீசிய பந்து ஸ்டெம்பை பதம் பார்த்தது. ரீப்ளேவில் சுஜய் அவுட் என்பது உறுதியாகியது. ஆனால், சேலம் வீரர்கள் யாரும் அப்பீல் செய்யவில்லை. அதனால் சுஜய் தொடர்ந்து விளையாடினார்.
தனது மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் சேலம் அணியின் பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். 32 பந்துகளில் 6 பவுண்டரிகளை விரட்டிய அவர் அரைசதம் விளாசுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 44 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதன்பின்னர், கோவை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 199 ரன்கள் குவித்தது.
200 ரன்கள் இலக்கை துரத்திய சேலம் 19 ஓவர்களில் 120 மட்டும் எடுத்தது அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. இதனால் கோவை அணி 79 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணி பெற்ற 5-வது வெற்றியாகும். இதன் மூலம் 10 புள்ளிகளுடன் கோவை கிங்ஸ் முதல் அணியாக 'பிளேஆஃப்' சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil