இரண்டாவது முறையாக சேம்பியன் பட்டத்தை பெற வேண்டும் என்ற முனைப்பில் ஆல்பர்ட் டூட்டி பேட்ரியாட்ஸ் அணி உள்ளது. தகுதி சுற்று ஆட்டத்தில் வெற்றி பெற முடியாமல் போனதற்கு பழிவாங்க சேப்பாக் கில்லீஸ் காத்திருக்கிறது. இவர்கள் இருவருக்கும் இடையேயான நாளைய மோதலில் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாடு பிரிமியர் லீக் (டிஎன்பிஎல்) கிரிக்கெட் போட்டியின் இறுதியாட்டம் நாளை (20ம் தேதி) சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறுகிறது. இறுதி போட்டியில் ஆல்பட் டூட்டி பேட்ரியாட்ஸ் அணியுடன் சேப்பாக் கில்லீஸ் அணி மோதுகிறது.
ஆல்பர்ட் டூட்டி பேட்ரியாட்ஸ் அணி லீக் போட்டிகள் அனைத்திலும் வெற்றி பெற்று, தகுதி சுற்று போட்டியிலும் வெற்றி பெற்று, தோல்வியை சந்திக்காமல் இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது. சேப்பாக் கில்லீஸ் அணி, லீக் போட்டியிலும், தகுதி சுற்று போட்டியிலும் ஆல்பர்ட் டூட்டி பேட்ரியாட்ஸ் அணியிடம் வெற்றி பெற முடியாமல் போனது. கடந்த சீசனிலும் சேப்பாக் கில்லீஸ் அணியால் ஆல்பர்ட் டூட்டி பேட்ரியாட்ஸ் அணியை ஜெயிக்க முடியவில்லை. கடந்த இரண்டு சீசன்களிலும் இரு அணிகளும் நான்கு முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அனைத்து போட்டியிலும் ஆல்பர்ட் டூட்டி அணியே ஜெயித்துள்ளது.
ஆல்பர்ட் டூட்டி அணியில் சர்வதேச போட்டிகளில் விளையாடி அனுபவம் பெற்ற தினேஷ் கார்த்திக், அபினவ் முகுந்த் உள்ளனர். இவர்கள் இருவரையும் விட அதிக கவனத்தைப் பெற்றவர் வாஷிங்டன் சுந்தர். 16 வயதான இவர், இந்த சீசனில் அதிக ரன் குவித்த வீரராக இருக்கிறார். பந்து வீச்சிலும் 14 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார். கடைசியாக நடந்த தகுதி சுற்று போட்டியில் முதல் இரண்டு ஓவர்களில் 50 ரன்களுக்கு மேல் சேர்த்து, கில்லீசுக்கு கிலியை கொடுத்தவர்.
ஓப்பனிங் பேட்ஸ் மேனான கவுசிக் காந்தி, வாஷிங்டன் சுந்தருக்கு நல்ல கம்பெனி கொடுக்கக் கூடியவர். அபினவ் முகுந்த், எஸ்.பி.நாதன், ஆகாஷ் சும்ரா ஆகியோரும் வலுவான பேட்ஸ்மேன்கள் அணியில் உள்ளனர்.
சேப்பாக்கம் அணிக்கு எதிரான போட்டியில் பந்துவீச்சாளர் அதிசயராஜ், கணேஷ் மூர்த்தியுடன் இணைந்து மிகச்சிறப்பாக பந்துவீசி அந்த அணியை நிலைகுலைய வைத்தனர். அஸ்வின் கிறிஸ்ட் சிக்கனமாக ரன் விட்டுக்கொடுத்து பந்துவீசுவது சிறப்பு. அவுசிக் ஸ்ரீனிவாஸ், சுந்தர் ஆகியோர் பந்துவீச்சில் நெருக்கடி கொடுக்கக் கூடியவர்கள்.
சேப்பாக் கில்லீஸ் அணி கொஞ்சமும் சளைத்த அணி அல்ல. தொடக்க ஆட்டக்காரர்கள் தலைவன் சற்குணம், கோபிநாத் இருவரும் நிலைத்து நின்று பவர் பிளேயில் அதிக ரன் சேர்த்தால், எதிரணிக்கு பெரிய சவாலாக அமையும். தாமதாக பேட்டிங் ஃபார்முக்கு வந்துள்ள அந்தோனி தாஸ், எஸ், கார்த்தி ஆகியோரின் பேட்டிங் சேப்பாக்கம் அணிக்கு பலமாகும். சரவணன், சசிதேவ், கேப்டன் ஆர் சதீஸ் ஆகியோர் சிறப்பாக பேட் செய்வது அணியின் வெற்றிக்கு உதவும்.
அணியின் கேப்டன் சதீஸ் தலைமையில் பந்துவீச்சு அமைந்துள்ளது. சாய் கிஷோர், அலெக்சாண்டர், அருண் குமார் ஆகியோரின் துல்லியத்தன்மையான பந்துவீச்சு, எதிரணிக்கு குடைச்சலைக் கொடுக்கும். இந்த சீசனில் அதிக விக்கெட் வீழ்த்தியவராக சாய்கிஷோர் வலம் வருகிறார். இறுதி போட்டியிலும் அவர் வேகம் அணிக்கு வெற்றியை பெற்று கொடுக்கலாம்.
அந்தோனி தாஸ் பந்துவீச்சு நடுவரிசை ஓவர்களில் எதிரிணியின் ரன்குவிப்பை கட்டுப்படுத்த உதவும். பவர்-ப்ளே ஓவர்களில் டூட்டி பேட்ரியாட்ஸ் அணியின் ரன்குவிப்பை ஓரளவுக்கு கட்டுப்படுத்திவிட்டாலே, போட்டியை சேப்பாக்கம் கட்டுக்குள் கொண்டு வந்துவிடும். ஆதலால், சேப்பாக்கம் அணியின் பந்துவீச்சு முக்கியத் துருப்புசீட்டாகும்.
இரு அணியிலும் தொடக்க வீரர்கள் நல்ல வலிமையுடன் உள்ளனர். பவர் பிளே ஓவர்களை மிகச்சிறப்பாக பயன்படுத்தியுள்ளனர். இவர்கள் தங்கள் அணிக்கு நல்ல தொடக்கத்தை ஏற்படுத்துவார்கள். அதிக ரன்களை குவிக்க இரு ஜோடிகளுக்கு இடையே நடக்கும் ஆட்டம் விறுவிறுப்பாக அமையும்.
இரு அணிகளிலும் அதிக ரன், விக்கெட் எடுத்தவர்களின் விபரம்:
ஆல்பர்ட் டூட்டி பேட்ரியாட்ஸ்:
அதிக ரன் குவித்த பேட்ஸ்மென்கள் :
வாஷிங்டன் சுந்தர் – 445 ரன்கள்
கவுசிக் காந்தி – 273 ரன்கள்
எஸ்.பி. நாதன் – 133 ரன்கள்
அதிக விக்கெட் எடுத்தவர்கள் :
வாஷிங்டன் சுந்தர் – 14 விக்கெட்
அதிசயராஜ் டேவிட்சன் – 13 விக்கெட்
அவுஷிக் ஸ்ரீனிவாஸ் – 8 விக்கெட்
சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ்
அதிக ரன் குவித்த பேட்ஸ்மென்கள் :
தலைவன் சற்குணம் – 213 ரன்கள்
கே.எஸ். கோபிநாத் – 201 ரன்கள்
எஸ். கார்த்திக் – 180 ரன்கள்
அதிக விக்கெட் எடுத்தவர்கள்:
சாய் கிஷோர் – 15 விக்கெட்
ஆர். அலெக்சாண்டர் – 9 விக்கெட்
யோ மகேஷ் – 8 விக்கெட்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.