தேவேந்திர பாண்டே
இந்தியாவில் உள்நாட்டு டி 20 கிரிக்கெட் லீக்கில் பெட்டிங் குறித்து தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்ட மறுநாள், தமிழ்நாடு பிரீமியர் லீக் (டி.என்.பி.எல்) விளையாட்டு போட்டியில், ரூ.225 கோடிக்கு பெட்டிங் நடந்திருப்பதாக தெரிய வருகிறது. இதுகுறித்து, இந்தியா கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் முழுமையாக விசாரிக்க வேண்டும் என்று ஒரு டிஎன்பிஎல் அணி விரும்புகிறது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் டூட்டி பாட்ரியாட்ஸ் அணிக்கு எதிராக விளையாடிய மதுரை பாந்தர்ஸ் அணி, டிஎன்பிஎல்-ல் "சந்தேகத்திற்குரிய நடுவர்" குறித்து தமிழக கிரிக்கெட் சங்கம் (டி.என்.சி.ஏ), பி.சி.சி.ஐ மற்றும் அதன் ஊழல் தடுப்பு பிரிவு (ஏ.சி.யூ) ஆகியவற்றிற்கு எழுத்துப்பூர்வமாக புகார் அளித்ததாகக் கூறியுள்ளது.
இதுகுறித்து மதுரை அணியின் உரிமையாளர் பி தாமோதரன் இந்தியன் எக்ஸ்பிரஸிடம் பேசுகையில், "எங்கள் போட்டியின் போது, சில சந்தேகத்திற்குரிய அம்பயர் முடிவுகளை நாங்கள் கண்டோம். அது அப்போது மட்டுமல்ல; நிறைய முறை அப்படி நடந்திருக்கிறது. அம்பயரிங் செய்யப்பட்ட விதம், எங்களுக்கு பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. ஏதோ தவறாக நடக்கிறது என்பதை உணர்ந்தோம். ஆனால் அது என்னவென்று தெரியவில்லை.
பிசிசிஐயின் உயர் குழுவுக்கு ஏஸியூ சமர்ப்பித்த ரகசிய அறிக்கையில், சர்வதேச பெட்டிங் தளமான பெட்ஃபேரில் (Betfair) ஒரு இந்திய உள்ளூர் லீக்கில் வழக்கத்திற்கு மாறாக அதிக தொகை எவ்வாறு செலுத்தப்பட்டது என்று கூறப்பட்டது. ஏ.சி.யு அறிக்கை மதுரை அணியைப் பற்றி சந்தேகத்திற்குரிய சம்பவம் எதையும் கண்டுபிடிக்கவில்லை. ஆனால், டூட்டி பாட்ரியாட்ஸ் அணி மீது அதிக கவனம் செலுத்தப்பட்டது.
டி.என்.பி.எல் மற்றும் டூட்டி பாட்ரியாஸை சர்ச்சைகள் சுற்றுவது இது முதன்முறை அல்ல. முன்னதாக, இந்தியன் எக்ஸ்பிரஸ் நிறுவனம், அணியில் உள்ள பல வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் அதிகாரிகள் எவ்வாறு மேட்ச் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்டனர் என்று செய்தி வெளியிட்ட பிறகு, டி.என்.சி.ஏ விசாரணை ஒன்றை நடத்தியது,
இந்த விசாரணையில் சம்பந்தப்பட்ட வட்டாரங்கள் கூறுகையில், புக்கீஸ் மற்றும் மேட்ச் ஃபிக்ஸர்கள், "அணி உரிமையாளருடனான ஒரு ஒப்பந்தத்தின் மூலம் அந்த அணியை கட்டுக்குள் கொண்டு வந்து, அவர்கள் போட்டியில் வெற்றிப் பெறும் வகையில் அணியை இயக்குகிறார்கள்" என்று கூறியுள்ளனர். ஒரு மாதத்திற்குப் பிறகு, டூட்டி பாட்ரியாட்ஸ் அணியின் இரண்டு இணை உரிமையாளர்களை டி.என்.சி.ஏ வெளியேற்றியது.
தாமோதரன் மேலும் கூறுகையில், "ஒரு உரிமையாளராக, ஊடக அறிக்கைகளில் நாங்கள் படிக்கும் செய்திகளை நினைத்து கவலைப்படுகிறோம். குற்றவாளிகளுக்கு ஆயுள் தடை விதிக்கப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட வேண்டும். இது எங்காவது முடிவுக்கு வர வேண்டும். ஒரு முழுமையான விசாரணை என்பது காலத்தின் தேவை, தேவைப்பட்டால், இந்திய வாரியம் இதில் அரசாங்கத்தின் உதவியை நாட வேண்டும். ” என்றார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.