Tokyo Olympic golf Tamil News: ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் 32-வது ஒலிம்பிக் போட்டிகள் நாளையுடன் நிறைவு பெற உள்ளன. இந்நிலையில் இன்று நடந்த மகளிருக்கான கோல்ஃப் தனிநபர் ஸ்ட்ரோக் பிளே பிரிவில் 4-வது இடத்தை நிறைவு செய்த இந்திய வீராங்கனை அதிதி அசோக் தோல்வியை தழுவினார்.

4 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் 3-வது சுற்று நிறைவில் அதிதி அசோக் 201 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் இருந்தார். தொடர்ந்து இன்று காலை நடைபெற்ற 4-வது சுற்றின் போது மழை குறுக்கீட்டது. இதனால் போட்டி பாதிக்கப்பட்டது. இந்த மோசமான வானிலை நிலவும் முன்னர் அதிதி அசோக் 3-வது இடத்தில் இருந்தார்.

இந்தநிலையில், தனிநபர் ஸ்ட்ரோக் ப்ளே பிரிவு போட்டியில் அதிதி அசோக் 4வது இடம் பிடித்து தோல்வியடைந்தார். இப்போட்டியில் அமெரிக்க வீராங்கனை நெல்லி கோர்டா முதலிடம் பிடித்து தங்கம் வென்றார். இந்தியாவின் அதிதி அசோக்குக்கு பதக்கம் கிடைக்கும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் தோல்வியடைந்தது ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து பேசிய கோல்ஃப் வீராங்கனை அதிதி அசோக், ‘டோக்கியோ ஒலிம்பிக் கோல்ஃப் போட்டியில் பதக்கத்தை தவற விட்டது வருத்தமளிக்கிறது. நன்றாக விளையாடி என்னுடைய 100 சதவிகித உழைப்பை கொடுத்தேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் பேசுகையில், “நான் கோல்ஃப் தொடங்கியபோது, கோல்ஃப் ஒரு ஒலிம்பிக் விளையாட்டு இல்லை. இந்த விளையாட்டில் நான் ஒலிம்பிக்கில் போட்டியிடுவேன் என கனவு கூட கண்டது இல்லை.
நீங்கள் கடினமாக உழைத்துக்கொண்டே இருங்கள். ஒரு நாள் இந்த இடத்தை அடைவீர்கள். விளையாடும் போது உங்களுக்கு நல்ல முடிவு கிடைக்காவிட்டாலும் அதில் இருந்து நிறைய கற்றுக் கொள்ளலாம். அது விளையாட்டில் மேம்பட உதவும். இப்போது நிறைய குழந்தைகைள் கோல்ஃப் விளையட ஆரம்பித்து விட்டார்கள்.

பதக்கத்தை தவற விட்டது எனக்கு சற்று வருத்தத்தை அளிக்கிறது. நான் நன்றாக விளையாடி என்னுடைய 100 சதவிகித உழைப்பை கொடுத்தேன். 4வது இடத்தோடு நிறைவு செய்தது குறித்து மகிழ்ச்சியாக இருப்பது கடினம்.
இருப்பினும், இந்த இடம் வரை நான் வந்ததற்கு அனைவரும் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என நம்புகிறேன். டிவியில் மக்கள் நான் விளையாடுவதை பார்ப்பார்கள் என என்னால் நம்ப முடியவில்லை” என்று அதிதி அசோக் கூறியுள்ளார்.
ஒலிம்பிக் கோல்ஃப்பில் இந்தியர்கள் யாரும் இதுவரை பதக்கத்தை பெறவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்க ஒன்று.
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறt.me/ietamil“