Tokyo Olympic hockey Tamil News: 32வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவருக்கான ஹாக்கி போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய அணி பெல்ஜிய அணியுடன் இன்று காலை பலப்பரீட்சை நடத்தியது. முதல் 3 கால் இறுதியில் பெல்ஜிய அணியின் தாக்குதலுக்கு தாக்குப்பிடித்த இந்திய அணி 4வது கால் இறுதியில் துவண்டு போனது. இதனால் போட்டியின் 49வது, 53வது மற்றும் 59வது நிமிடங்களில் பெல்ஜிய அணி அடுத்தடுத்து 3 கோல்கள் அடித்தது. எனவே போட்டி நேர முடிவில் 5-2 என்ற கோல் கணக்கில் பெல்ஜிய அணி வெற்றி பெற்றது.
இருப்பினும், ஒலிம்பிக்கில் 8 முறை தங்கம் வென்ற இந்திய ஹாக்கி அணியின் பதக்க கனவு இன்னும் நீர்த்து போகவில்லை. அரையிறுதியில் வெளியேற்றப்பட்ட இந்திய அணிக்கு வெண்கல பதக்கத்திற்கான ஆட்டம் உள்ளது. இதில் இந்திய அணி வெல்லும் பட்சத்தில் வெண்கல பதக்கத்துடன் நாடு திரும்பலாம். எனவே, இந்திய அணி வீரர்களின் தற்போதைய போக்கஸ் எல்லாம் வெண்கல பதக்கத்தை நோக்கி உள்ளது என குறிப்பிட்டுள்ளனர்.
இது குறித்து 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழிடம் பேசிய இந்திய ஆண்கள் ஹாக்கி அணியின் கேப்டன் மன்பிரீத் சிங் மற்றும் நட்சத்திர கோல் கீப்பர் பி ஆர் ஸ்ரீஜேஷ், வரும் வியாழக்கிழமை நடக்கவிருக்கும் வெண்கலப் பதக்கத்திற்கான ஆட்டத்தில் மீண்டும் கவனம் செலுத்த வேண்டியிருப்பதால், அரையிறுதியில் சந்தித்த தோல்வியை நினைத்து துவல எங்களிடம் நேரமில்லை" என்றுள்ளனர்.
இது குறித்து கேப்டன் மன்பிரீத் சிங் பேசியதாவது:
"நீண்ட காலத்திற்குப் பிறகு அரையிறுதிக்கு வந்தது எங்களுக்கு இது ஒரு பெரிய மரியாதை. இப்போது எங்களுக்கு மிகவும் கடினமாக உள்ளது, ஏனென்றால் நாங்கள் தங்க பதக்கம் வெல்ல வேண்டும் என்ற மனநிலையுடன் வந்தோம். ஆனால் துரதிருஷ்டவசமாக நாங்கள் போட்டியில் வெற்றி பெறவில்லை. இப்போது நாங்கள் அடுத்த வெண்கலப் பதக்கப் போட்டியில் கவனம் செலுத்த வேண்டும், அதற்கு நாங்கள் இன்னும் உழைக்க வேண்டும். இந்த போட்டி எங்களுக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும். குறைந்தபட்சம் நம் தேசத்திற்காக ஒரு வெண்கலப் பதக்கத்தையாவது நாங்கள் வெல்ல வேண்டும்." என்று கூறியுள்ளார்.
நட்சத்திர கோல் கீப்பர் பி ஆர் ஸ்ரீஜேஷ் பேசுகையில்,"ஏமாற்றம் அடைந்து விட்டோம். ஆனால் அதைப் பற்றி கவலைப்பட எங்களுக்கு நேரம் இல்லை. நாங்கள் அதை மறந்து எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்க வேண்டும். இப்போது எங்களுக்கு இன்னும் ஒரு பதக்கம் வெல்லும் வாய்ப்பு உள்ளது, இந்த நேரத்தில் அழுவதை விட அது எங்களுக்கு முக்கியம்.
எதிர்காலத்தைப் பற்றி சிந்திப்பது, போட்டியைப் பார்ப்பது, எங்கு தோற்றோம், எங்கே தவறுகளைச் செய்தோம், அதைச் சரிசெய்து, முன்னேறுவது மிகவும் முக்கியம்" என்று கூறியுள்ளார்.
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறt.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.