tokyo paralympics 2021 Tamil News: மாற்றுத்திறனாளிகளுக்கான 16வது பாராஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா சார்பில் 54 வீரர், வீராங்கனைகள் 9 விளையாட்டுகளில் பங்கேற்றுள்ளனர். சுவாரஷ்யங்களுக்கு பஞ்சமில்லாமல் நடந்து வரும் இந்த போட்டிகளில் இந்திய அணியினர் பதக்க வேட்டை நடத்தி பட்டியலில் முன்னேற்றி வருகின்றனர்.
இந்த போட்டியின் 5-வது நாளான்று இந்தியாவுக்கான முதல் பதக்கத்தை வென்று அசத்தினார் இந்திய வீராங்கனை பவினாபென் பட்டேல். டேபிள் டென்னிஸ் போட்டியின் பெண்கள் ஒற்றையர் ‘சி4’ பிரிவு (காலில் பாதிப்பு அடைந்தவர்கள்) இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இவர் உலகின் ‘நம்பர் ஒன்’ வீராங்கனையான சீனாவின் ஜோவ் யிங்கை எதிர்கொண்டார்.
பரபரப்பாக அரங்கேறிய இந்த ஆட்டத்தில் சீன வீராங்கனை ஜோவ் யிங்கிடம் 3-0 என்ற செட் கணக்க்கில் பவினாபென் பட்டேல் போராடி தோல்வியடைந்தார். இதன் மூலம் பவினாபென் படேல் வெள்ளிப் பதக்கம் வென்று வரலாறு படைத்தார்.
இதே நாளில் உயரம் தாண்டுதலில் இந்திய வீரர் நிஷாத் குமார் வெள்ளி பதக்கம் வென்று அசத்தினார்.
போட்டியின் 6-வது நாளான நேற்று வட்டு எறிதல் எப்52 பிரிவில் களம் கண்ட இந்திய வீரர் வினோத்குமார் வெண்கல பதக்கம் வென்றார்.
பதக்க வேட்டை
இந்நிலையில், போட்டியின் 7-வது நாளான இன்று இந்திய அணிக்கு 4 பதக்கங்கள் கிடைத்துள்ளது. இந்த 4 பதக்கங்களையும் (ஒரு தங்கம், இரண்டு வெள்ளி, ஒரு வெண்கலம்) இரண்டே மணிநேரத்தில் குவித்து இந்திய வீரர்கள் சாதனை படைத்து உள்ளனர். மேலும் ஒரு தங்கம், நான்கு வெள்ளி, ஒரு வெண்கலம் வென்றுள்ள இந்திய அணி பதக்க பட்டியலில் 34 வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
இன்று காலை, மகளிர் துப்பாக்கி சுடுதல் 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டியில் களமிறங்கிய இந்திய வீராங்கனை அவனி லெகாரா ( 19) அதிரடியாக விளையாடி தங்கம் வென்றார். ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் நகரை சேர்ந்த இவர் போட்டியில் எஸ்எச் பிரிவில் 249.6 புள்ளிகள் பெற்று உலக சாதனையை சமன் செய்துள்ளார். மேலும், இந்தியாவுக்கு முதல் தங்க பதக்கம் பெற்று தந்து வரலாறு படைத்து உள்ளார்.
தொடர்ந்து நடந்த ஆண்களுக்கான எப்56 வட்டு எறிதலில் இந்திய வீரர் யோகேஷ் கதூனியா வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தினார். 24 வயதாகும் யோகேஷ் இன்று நடந்த இறுதிப்போட்டியில் 44.38 மீட்டர் எறிந்தார்.
இரட்டை பதக்கம்:
ஆண்களுக்கான எப்46 ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் தேவேந்திரா 64.35 மீ, சுந்தர் சிங் குர்ஜார் 64.01 மீ தொலைவுக்கு ஈட்டி எறிந்து முறையே வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்களை தட்டி சென்றனர்.
ஈட்டி எறிதலில் வெள்ளி வென்ற தேவேந்திர ஜஜாரியாவுக்கு இது மூன்றாவது பதக்கம் ஆகும். 40 வயதாகும் தேவேந்திர ஜஜாரியா ஏதென்ஸ் பாரா ஒலிம்பிக் போட்டியில் முதல் முறையாக தங்கப் பதக்கம் வென்றார். அப்போது அவருக்கு வயது 23. அதன் பிறகு 12 ஆண்டுகள் கழித்து 2016 ரியோ ஒலிம்பிக்கில் மீண்டும் தங்கப் பதக்கம் வென்றார். இன்று வெள்ளி வென்று அசத்தியுள்ளார். மேலும் இன்று அவர் வீசிய 64.35 மீட்டர் தூரமே அவரின் அதிகபட்ச தூரமாகும்.
தலைவர்கள் வாழ்த்து
பாரா ஒலிம்பிக் போட்டியில் பதக்கங்களை குவித்துள்ள இந்த வீரர், வீராங்கனைகளுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி, மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். மேலும், பல்வேறு கட்சியைச் சேர்த்த அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
பதக்கம் வென்ற வீரர்களுக்கு ராஜஸ்தான் அரசு பரிசு அறிவிப்பு
பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற வீராங்கனை அவனி லெகராவுக்கு ராஜஸ்தான் அரசு ரூ3 கோடி பரிசு அறிவிதுள்ளது. வெள்ளி வென்ற தேவேந்திர ஜாஜாரியாவுக்கு ரூ2 கோடியும், வெண்கலம் வென்ற சுந்தர் சிங்கிற்கு ரூ1 கோடி பரிசு தொகை வழங்க உள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.