டோக்கியொ பாராலிம்பிக்ஸ் போட்டிகளில் திங்கள்கிழமை நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஈட்டி எறிதலில் இந்திய விரர் சுமித் அன்டில் 3 முறை உலக சாதனையை முறியடித்து தங்கப் பதக்கம் வென்றார்.
இதன் மூலம், F64 பிரிவில் உலக நம்பர் 1 வீரர் என்பதோடு டோக்யோ பாராலிம்பிக்கில் சுமித் ஆன்டில் இந்தியாவுக்கு 2வது தங்கம் மற்றும் தடகளத்தில் முதல் தங்கம் வென்றுள்ளார்.
ஹரியானாவில் உள்ள சோனேபாட்டைச் சேர்ந்த 23 வயதான இவர், 2015ம் ஆண்டு மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கி தனது இடது காலை முழங்காலுக்குக் கீழே இழந்தார். சுமித் அன்டில் தனது ஐந்தாவது முயற்சியில் 68.55 மீட்டருக்கு ஈட்டியை எரிந்தார். இந்த தூரம் புதிய உலக சாதனையாக அமைந்துள்ளது.
உண்மையில், அவர் முந்தைய உலக சாதனையான 62.88 மீட்டர் தூரம் என்பதை சுமித் அன்டில் செய்திருந்தார். இன்று ஒரே நாளில் சுமித் அன்டில் ஐந்து முறை ஈட்டி எறிந்தார். அவரது கடைசி ஈட்டி எறிதல் உலக சாதனையாக அமைந்தது. சுமித் அன்டில் 5 முறை ஈட்டி எறிந்ததில் முறையே 66.95, 68.08, 65.27, 66.71, 68.55 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்தார்.
சுமித் அன்டிலைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவின் மைக்கல் புரியன் 66.29 மீ தூரமும் இலங்கையின் துலன் கொடித்துவக்கு 65.61 மீ தூரமும் ஈட்டி எறிந்து முறையே வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கம் வென்றனர்.
எஃப் 64 வகை கால் துண்டிக்கப்பட்ட விளையாட்டு வீரர்களுக்கானது. சுமித் ஆரம்பத்தில் மல்யுத்த வீரராக இருந்தார். ஆனால், 2015ல் நடந்த ஒரு விபத்து அவரது வாழ்க்கையை ஸ்தம்பிக்கச் செய்தது. சுமித் தான் ஒரு மல்யுத்த வீரராக வேண்டும் என்ற கனவை கைவிட்டாலும் தனது விளையாட்டு பாதையில் தொடர்ந்தார்.
பாராலிம்பிக்ஸ் விளையாட்டில் சுமித் அன்டில் பெற்ற பதக்கம் இந்தியாவின் 7வது பதக்கம் ஆகும். துப்பாக்கி சுடும் போட்டியில் ஆவணி லேகாரா மற்றும் சுமித் தங்கப் பதக்கங்களை வென்றுள்ளனர். இந்தியா தடகளத்தில் மேலும் 3 வெள்ளி, மற்றும் டேபிள் டென்னிஸில் ஒரு வெள்ளி பதக்கம் வென்றுள்ளது.. தடகளத்தில் இந்தியா ஒரு வெண்கலப் பதக்கமும் வென்றுள்ளது.
மார்ச் 5 அன்று பாட்டியாலாவில் நடைபெற்ற இந்திய கிராண்ட் பிரிக்ஸ் தொடர் 3ல் ஒலிம்பிக் சாம்பியன் நீரஜ் சோப்ராவுக்கு எதிராக சுமித் போட்டியிட்டார். அப்போது அவர் 66.43 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து ஏழாவது இடத்தை பிடித்தார். அதே நேரத்தில், சோப்ரா ஈட்டி எறிதலில் 88.07 மீட்டர் தூரம் என்ற தனது தேசிய சாதனையை முறியடித்தார்.
சுமித் அன்டில் துபாயில் 2019ல் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியில் எஃப் 64 பிரிவில் ஈட்டி எறிதலில் வெள்ளி பதக்கம் வென்றார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.