TNPL 2023: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நடத்தும் 7-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் நேற்று முதல் தொடங்கியது. கோவையில் நடைபெற்ற முதல் போட்டியில் லைகா கோவை கிங்ஸ் – ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் 70 ரன்கள் வித்தியாசத்தில் கோவை அணி அபார வெற்றியை பதிவு செய்தது. இந்நிலையில், கோவையில் இன்று நடைபெறும் போட்டியில் சேலம் ஸ்பார்ட்டன்ஸ் – சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் மோதுகின்றன. இரவு 7.00 மணிக்கு இந்த போட்டி நடைபெற உள்ளது.
டாப் 10 ஐ.பி.எல் ஸ்டார்ஸ் லிஸ்ட்
ஐபிஎல் 2023ல் இருந்து டி.என்.பி.எல். போட்டியில் பங்கேற்கும் நட்சத்திர வீரர்கள் குறித்து இங்கு பார்க்கலாம்.
- ரவிச்சந்திரன் அஸ்வின்:
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களில் ஒருவரான அஷ்வின், திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்காக விளையாடவுள்ளார். அவர் ஐபிஎல் தொடருக்கான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் விளையாடி வருகிறார். நடப்பு சீசனில் 13 ஆட்டங்களில் விளையாடிய அவர் 7.5 என்ற எகனாமி ரேட்டில்14 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
- வருண் சக்ரவர்த்தி
ஐபிஎல் தொடருக்கான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் விளையாடி வரும் மாயாஜால சுழற்பந்துவீச்சாளரான வருண் சக்ரவர்த்தி தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்காக அஸ்வினுடன் இணைந்து விளையாடுகிறார். ஐபிஎல் 2023ல், அவர் கொல்கத்தா அணிக்காக 14 ஆட்டங்களில் விளையாடி 20 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
- டி நடராஜன்
ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடும் நடராஜன், டி.என்.பி.எல். தொடரில் பால்சி திருச்சி அணிக்காக விளையாடுகிறார். ஐதராபாத் அணிக்காக 12 ஆட்டங்களில் விளையாடிய அவர் 9.11 என்ற எகானமி ரேட்டில் 10 விக்கெட்டுகளை எடுத்தார்.
- வாஷிங்டன் சுந்தர்
இந்திய ஆல்ரவுண்டர் வீரரான வாஷிங்டன் சுந்தர் காயம் காரணமாக அவர் ஐபிஎல் 2023 ல் இருந்து விலகினார். ஆனால் அவர் சீகம் மதுரை பாந்தர்ஸ் அணிக்காக நடப்பு டி.என்.பி.எல் பங்கேற்று விளையாடுகிறார். நடப்பு சீசனில் ஐதராபாத் அணிக்காக சுந்தர் 60 ரன்கள் மற்றும் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
- என் ஜெகதீசன்
ஐபிஎல் 2023ல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக ஐபிஎல் 2023க்காக 6 ஆட்டங்களில் மட்டுமே விளையாடினார் என் ஜெகதீசன். அந்த 6 ஆட்டங்களில் 89 ரன்கள் எடுத்தார். அவர் டி.என்.பி.எல் தொடரில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியில் களமாடுகிறார்.
- முருகன் அஸ்வின்:
ஐபிஎல் 2023ல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் அஸ்வின் ஒரு அங்கமாக இருந்தார். இருப்பினும், அவர் இரண்டு போட்டிகளில் மட்டுமே விளையாடினார், அங்கு அவர் எந்த விக்கெட்டையும் எடுக்கவில்லை.
- சாய் கிஷோர்
ஐபிஎல் 2023ல் குஜராத் டைட்டன்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த ஆர் சாய் கிஷோர் ஒரு ஆட்டம் கூட விளையாடவில்லை. 2022 சீசனில் 5 ஆட்டங்களில் விளையாடி 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவர் டி.என்.பி.எல் தொடரில் ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணியை கேப்டனாக வழிநடத்தி வருகிறார்.
- விஜய் சங்கர்
விஜய் சங்கர் ஐபிஎல் 2023ல் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடினார். அவர் 14 ஆட்டங்களில் விளையாடி 37.63 மற்றும் 160.11 என்ற சராசரியில் 301 ரன்கள் எடுத்தார். அவர் ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணியில் விளையாடி வருகிறார்.
- ஷாரு கான்
ஐபிஎல் 2023ல் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடிய ஷாருக்கான் 165.96 ஸ்ட்ரைக் ரேட்டில் 156 ரன்கள் எடுத்தார். இந்த டி.என்.பி.எல் தொடரில் லைகா கோவை கிங்ஸ் அணியை கேப்டனாக வழிநடத்தி வருகிறார் ஷாரு கான்.
10 .சாய் சுதர்சன்
ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடிய சுதர்சன் 8 இன்னிங்ஸ்களில் 51.71 என்ற சிறந்த சராசரி மற்றும் 141.41 ஸ்ட்ரைக் ரேட்டில் 362 ரன்கள் எடுத்தார். அவர் சிஎஸ்கேக்கு எதிரான இறுதிப் போட்டியில் 47 பந்துகளில் 96 ரன்கள் குவித்து பரபரப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். திருப்பூர் அணிக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் அதிரடியாக விளையாடிய சாய் சுதர்ஷன் 4 சிக்சர்கள், 8 பவுண்டரிகளுடன் 45 பந்துகளில் 86 ரன்கள் குவித்து அசத்தி இருந்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.