‘இந்தியாவின் தோல்விக்கு இவர் தான் காரணம்’, வரலாற்று சாதனை படைத்த ஜெய்ஸ்வால்… இன்றைய டாப் 5 ஸ்போர்ட்ஸ் நியூஸ்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்தூர் டெஸ்ட் போட்டியின் தோல்விக்கு ரவீந்திர ஜடேஜா தான் காரணம் என்று கூறி விளாசியுள்ளர் இந்திய ஜாம்பவான் வீரர் சுனில் கவாஸ்கர்.

Top 5 Cricket News In Tamil, 04 march 2023
Sports – Cricket News in tamil

Top 5 Cricket News Of The Day in tamil: ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்’ விளையாட்டு செய்திகள் பக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். இன்றைய டாப் 5 கிரிக்கெட் விளையாட்டு செய்திகளை இங்கு பார்க்கலாம்.

  1. ‘இந்தியாவின் தோல்விக்கு இவர் தான் காரணம்’: மூத்த வீரரை கை காட்டும் கவாஸ்கர்

இந்தியா – ஆஸ்திரேலிய அணிகள் மோதும் 4 போட்டிகள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில், நாக்பூர் மற்றும் டெல்லியில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் இந்தியா வென்றது. தொடர்ந்து, இவ்விரு அணிகள் மோதிய 3வது டெஸ்ட் போட்டி இந்தூரில் நடந்தது. இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி 2-1 என்ற கணக்கில் தொடரில் நீடிக்கிறது.

இந்நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்தூர் டெஸ்ட் போட்டியின் தோல்விக்கு ரவீந்திர ஜடேஜா தான் காரணம் என இந்திய ஜாம்பவான் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். மேலும், ஜடேஜா வீசிய நோ-பால் இந்தியாவுக்கு பெரிய பின்னடைவை கொடுத்தது என்றும், மார்னஸ் லாபுசாக்னே மற்றும் உஸ்மான் கவாஜா இடையேயான பார்ட்னர்ஷிப் முதல் நாள் ஆட்டத்தை மாற்றியமைத்தது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணியின் மார்னஸ் லாபுசாக்னே களத்திற்கு வந்ததுமே ஜடேஜாவின் பந்தில் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆனார். ஆனால் அது நோ பால் என்று அறிவிக்கப்படவே, அதைப் பயன்படுத்திக் கொண்ட லாபுசாக்னே, தொடக்க வீரர் உஸ்மான் கவாஜாவுடன் 2வது விக்கெட்டுக்கு முக்கியமான 96 ரன்களைச் சேர்த்தார். அவர்களின் பார்ட்னர்ஷிப்பால் ஆஸ்திரேலியா 100 ரன்களை கடந்து, மொத்தம் 197 ரன்களை எடுத்து 88 ரன்கள் முன்னிலை பெற்றது.

இது தொடர்பாக பேசியுள்ள இந்திய ஜாம்பவான் வீரர் சுனில் கவாஸ்கர், “ஜடேஜா வீசிய நோ பால் காரணமாக லாபுசாக்னேனும் கவாஜாவும் இணைந்து 96 ரன்களை சேர்த்தனர். இந்திய அணி மொத்தமாகவே 109 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. எனவே, ஜடேஜா வீசிய அந்த ஒரு நோ பால் தான் ஆட்டத்தின் திருப்புமுனையாகவும், இந்திய அணியின் தோல்விக்கு காரணமாகவும் அமைந்தது.” என்று கூறியுள்ளார்.

  1. வர்ணனையை பாராட்டிய தோனி: டி.கே நெகிழ்வு

இந்திய கிரிக்கெட் அணி வீரரான தமிழகத்தைச் சேர்ந்த தினேஷ் கார்த்திக், ஐ.பி.எல் தொடருக்கான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடி வருகிறார். அவருக்கான இந்திய அணி வாய்ப்பு தவிர்க்கப்பட்டு வரும் நிலையில், தினேஷ் கார்த்திக் கிரிக்கெட் வர்ணனையாளராக இணைந்துள்ளார். தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடரிலும் அவர் வர்ணனையை செய்து வருகிறார்.

இந்த நிலையில், அவரது கிரிக்கெட் வர்ணனையை இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான எம்.எஸ் தோனி பாராட்டியுள்ளார். இது குறித்து தினேஷ் கார்த்திக் பேசுகையில், “எனது வர்ணனைக்கான மகத்தான பாராட்டு தோனியிடம் இருந்து கிடைத்தது, நான் அதை எதிர்பார்க்கவில்லை. தோனி என்னை போனில் அழைத்து, ‘நான் உங்களது வர்ணனையை மிகவும் ரசித்தேன், நன்றாக இருந்தது, நன்று என்று பாராட்டினார்.” அதற்கு மிக்க நன்றி என்று பதிலளித்ததாகவும் அவர் கூறினார்.

  1. வீடியோ: மஹாகாளேஷ்வர் கோயிலில் கோலி – அனுஷ்கா தம்பதி சாமி தரிசனம்

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டி வரும் 9ஆம் குஜராத்தின் அகமதாபாத்தில் நடைபெறுகிறது. முன்னதாக, விராட் கோலி மற்றும் அவரது மனைவி அனுஷ்கா சர்மா ஆகியோர் மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைனில் உள்ள மஹாகாளேஷ்வர் கோயிலுக்குச் சென்றனர். இருவரும் மற்ற பக்தர்களுடன் கோவிலுக்குள் அமர்ந்திருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இது தொடர்பாக அங்கு குவிந்த செய்தியாளர்களிடம் பேசிய அனுஷ்கா ஷர்மா, “நாங்கள் பிரார்த்தனை செய்ய இங்கு வந்தோம். மஹாகாலேஷ்வர் கோவிலில் நல்ல தரிசனம் செய்தோம்.” என்று கூறியுள்ளார்.

  1. ‘ஐ மிஸ் யூ ஷேன் வார்னே’: முதலாம் ஆண்டு நினைவை முன்னிட்டு சச்சின் உருக்கமான டிவீட்

சர்வதேச கிரிக்கெட் அரங்கில் ஜாம்பவான் வீரராக திகழ்ந்தவர் ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் ஷேன் வார்னே. அந்த அணிக்காக 1992 அறிமுகமான அவர் 2007ல் ஓய்வு பெற்றார். அவர் 145 டெஸ்ட் மற்றும் 194 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி, மொத்தமாக 1001 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் தொடரிலும் களமாடிய அவர் 2011ம் ஆண்டு வரை விளையாடி 57 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு வர்ணனையாளராக வலம் வந்த ஷேன் வார்னே, தனது 52வது வயதில் திடீரென காலமானார். இந்நிலையில், இன்று அவரது முதலாம் ஆண்டு நினைவு நாளாக அனுசரிக்கப்படுகிறது. இந்த நிலையில், இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், ஜாம்பவான் வீரருமான சச்சின் டெண்டுல்கர் அவர் குறித்த நினைவுகளை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

“களத்தில் சில மறக்கமுடியாத ஆட்டங்களை நாங்கள் விளையாடி இருக்கிறோம். அதிலிருந்து மறக்கமுடியாத தருணங்களைப் பகிர்ந்துகொண்டோம். நான் உங்களை ஒரு சிறந்த கிரிக்கெட் வீரராக மட்டுமன்றி ஒரு சிறந்த நண்பராகவும் இழக்கிறேன். உங்களின் நகைச்சுவை உணர்வு மற்றும் கவர்ச்சியின் மூலம் நீங்கள் சொர்க்கத்தை எப்பொழுதும் இருந்ததை விட அழகான இடமாக மாற்றுகிறீர்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.” என்று குறிப்பிட்டு வார்னே உடன் அமர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்றையும் பகிர்ந்துள்ளார் சச்சின்.

  1. இரானி கோப்பை: வரலாற்று சாதனை படைத்த ஜெய்ஸ்வால்

ரஞ்சி தொடரின் முன்னாள் சாம்பியன் அணியுடன், மற்ற அணிகளை சேர்ந்த வீரர்கள் ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணி என்ற பெயரில் மோதும் போட்டி தான் இரானி கோப்பை. இதில், மத்திய பிரதேசம் – ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணிகளுக்கு இடையேயான போட்டி குவாலியரில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணி பேட்டிங்கை தேர்வு விளையாடியது.

முதல் இன்னிங்ஸ் முடிவில் ரெஸ்ட் ஆஃப் இந்தியா 484 ரன்கள் சேர்த்தது. அந்த அணியில் அதிகபட்சமாக இரட்டை சதம் விளாசிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் 213 ரன்களும், சதம் அடித்த அபிமன்யூ ஈஸ்வரன் 154 ரன்களும், அரைசதம் அடித்த யாஷ் துள் 54 ரன்களும் எடுத்தனர். மத்திய பிரதேச அணியில் அதிகபட்சமாக அவேஷ் கான் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

தொடர்ந்து முதல் இன்னிங்சில் விளையாடிய மத்திய பிரதேச அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 294 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக சதம் விளாசிய யஷ் துபே 109 ரன்களும், அரைசதம் அடித்த சரண்ஷ் ஜெயின் 66 ரன்களும், ஹர்ஷ் கவ்லி 54 ரன்களும் எடுத்தனர். ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணியில் அதிகபட்சமாக புல்கிட் நரங் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதனைத் தொடர்ந்து 2வது இன்னிங்சில் விளையாடிய ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 246 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக சதம் விளாசிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் 144 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து 2வது இன்னிங்சில் விளையாடி வரும் மத்திய பிரதேச அணி 4 ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 81 ரன்கள் எடுத்துள்ளது. கேப்டன் ஹிமான்ஷு மந்திரி 51 ரன்னுடனும், ஹர்ஷ் கவ்லி 15 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். மத்தியப் பிரதேச அணியின் வெற்றிக்கு 356 ரன்கள் தேவை.

வரலாற்று சாதனை படைத்த ஜெய்ஸ்வால்

இந்த ஆட்டத்தில் முதல் இன்னிங்சில் இரட்டை சதம் (213) மற்றும் 2-வது இன்னிங்சில் சதம் (144) அடித்ததன் மூலம், இரானி கோப்பை வரலாற்றில் இரட்டை சதம் மற்றும் சதம் விளாசிய முதல் வீரர் என்ற சாதனையை யஷஸ்வி ஜெய்ஸ்வால் படைத்துள்ளார். மேலும், இரானி கோப்பையின் ஒரு பதிப்பில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற மற்றொரு சாதனையையும் அவர் படைத்துள்ளார். அதோடு, இரானி கோப்பை போட்டியில் 300 ரன்களுக்கு மேல் எடுத்த 2வது வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Tamil App.

Web Title: Top 5 cricket news in tamil 04 march 2023

Exit mobile version