Top 5 Cricket News Of The Day in tamil: ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்’ விளையாட்டு செய்திகள் பக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். இன்றைய டாப் 5 கிரிக்கெட் விளையாட்டு செய்திகளை இங்கு பார்க்கலாம்.
- ஜடேஜா, அஸ்வின், அக்சர்… ஐ.சி.சி டெஸ்ட் தரவரிசை பட்டியல் அறிவிப்பு
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) டெஸ்ட் போட்டியில் சிறந்த பேட்ஸ்மேன், பந்துவீச்சாளர், ஆல் ரவுண்டர்களின் தரவரிசையை இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி பந்துவீச்சாளர் பட்டியலில் ஆஸ்திரேலிய அணியின் பேட் கம்மின்ஸை பின்னுக்கு தள்ளி இங்கிலாந்து அணியின் ஜேம்ஸ் ஆண்டர்சன் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார். அவர் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக பந்துவீசியதால் தற்போது முத்லிடத்தைப் பிடித்துள்ளார்.
இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடியதால் அவர் முன்னேறியுள்ளார். இந்தப் பட்டியலில் பேட் கம்மின்ஸ் 3வது இடத்தில் உள்ளார். ஜடேஜா 9வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
ஆல் ரவுண்டர் வீரர்கள் பட்டியலில் இந்திய அணியின் ரவீந்திர ஜடேஜா முதலிடம் பிடித்துள்ளார். 2 வது இடத்தில் அஸ்வின் உள்ளனர். அக்சர் படேல் 5வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்த வீரர்கள் சிறப்பாக விளையாடியதால் பட்டியலில் முன்னேற்றம் கண்டுள்ளனர்.
பேட்ஸ்மேன் தரவரிசை பட்டியலில், ஆஸ்திரேலிய அணியின் மார்னஸ் லபுஸ்சேன் முதலிடத்தில் உள்ளார், இந்திய அணியின் ரிஷாப் பண்ட் 6வது இடத்திலும் ரோகித் சர்மா 7வது இடத்திலும் இடத்திலும் உள்ளனர் .
- நாடு திரும்பிய ஆஸி.,-யின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர்
ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சாளாரான ஆஷ்டன் அகர் சொந்த நாடு திரும்பி உள்ளார். அவர் இந்திய அணிக்கு எதிரான எஞ்சிய டெஸ்ட் போட்டிகளில் ஆட மாட்டார். ஆஸ்திரேலியாவின் சுழற்பந்து வீச்சாளர் ஆஷ்டன் அகர், மேற்கு ஆஸ்திரேலியாவுக்காக உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடுவதற்காக இந்திய சுற்றுப்பயணத்தில் இருந்து நாடு திரும்புகிறார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, எஞ்சிய டெஸ்ட் தொடரில் வேகப்பந்து வீச்சாளர் ஹேஸ்லேவுட் மற்றும் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் ஆகியோர் காயம் காரணமாக விலகியுள்ளனர். இது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
தனது குடும்பத்தில் ஏற்பட்ட தீவிர சுகாதார பிரச்சனைகளை ஒட்டி சொந்த நாடு திரும்பிய ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் மீண்டும் இந்தியா திரும்புவதில் சந்தேகம் எழுந்துள்ளது. இதனால், எஞ்சியுள்ள இரண்டு ஆட்டங்களில் ஆஸ்திரேலியாவை வழிநடத்த ஸ்டீவ் ஸ்மித் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிபிடத்தக்கது.
- 'ஐ.பி.எல் -ல் ஆடவில்லை என்றால் உலகம் அழிந்துவிடாது': பும்ரா பற்றி முன்னாள் இந்திய வீரர்
தனது முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா கடந்த செப்டம்பரில் அணியில் இருந்து வெளியேறினார். ஆஸ்திரேலியாவில் நடந்த 2022 டி20 உலகக் கோப்பையை தவறவிட்டார். வங்கதேசம் நியூசிலாந்து, இலங்கை மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர்களில் இருந்தும் அவர் இந்தியாவுக்காக விளையாடவில்லை. இந்நிலையில், பும்ரா இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக மீண்டும் களத்திற்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், பும்ரா ஐபிஎல் போட்டியில் விளையாடவில்லை என்றால் உலகம் அழிந்துவிடாது என இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பேசுகையில், "நீங்கள் முதலில் இந்திய வீரர். பிறகு உங்கள் பிரான்சைஸிற்கு (franchise) விளையாடுங்கள். எனவே, பும்ரா ஏதேனும் அசௌகரியத்தை உணர்ந்தால் பிசிசிஐ தலையிட்டு அவரை விடுவிக்க மாட்டோம் என்று உரிமையாளரிடம் தெரிவிக்கும். அவர் ஜோஃப்ரா ஆர்ச்சருடன் ஏழு ஆட்டங்களில் விளையாடவில்லை என்றால் உலகம் அழிந்து விடாது. அதே நேரத்தில், நீங்கள் உடற்தகுதியுடன் இருக்கும்போது, நீங்கள் தொடர்ந்து விளையாட வேண்டும். அது உங்களை ஆரோக்யத்துடன் வைத்திருக்கும்" என்று கூறியுள்ளார் .
- கங்குலியின் வாழ்க்கை வரலாறு படத்தில் ரன்பீர் கபூர்
முன்னாள் இந்திய கேப்டனும், முன்னாள் பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலியின் வாழ்க்கை வரலாறு படத்தில் பாலிவுட் பிரபலமான ரன்பீர் கபூர் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. திரைக்கதைக்கு கங்குலி ஒப்புதல் அளித்துள்ளதாகவும், படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது என்றும் நமது கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
முக்கிய ரோலில் ரன்பீர் கபூரை நடிக்க இருப்பதைத் தவிர, மீதமுள்ள நடிகர்கள் குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை. கங்குலி படத்தில் எம்எஸ் தோனி சிறிய ரோலில் நடிக்கிறார் என்ற வதந்திகள் பரவி வருகின்றன. ஆனால் எதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை. தற்போதைய நிலவரப்படி, அந்த கதாபாத்திரத்திற்கு இறுதி செய்யப்பட்ட ஒரே நடிகர் ரன்பீர் மட்டுமே. அவர் விரைவில் அதற்கான தயாரிப்பை தொடங்கவுள்ளார்.
தற்போது, ரன்பீர் கபூர் ஷ்ரத்தா கபூருடன் நடிக்கவிருக்கும் படத்தின் புரமோஷன் பணிகளில் பிஸியாக இருக்கிறார். அதன் பிறகு, கங்குலி வாழ்க்கை வரலாற்று படத்தின் படப்பிடிப்பை ரன்பீர் தொடங்குவார்.
- ஐ.பி.எல் இறுதிக் கட்டத்தில் வெளியேறும் ஸ்டோக்ஸ்; அப்ப சி.எஸ்.கே கேப்டன் இவர் இல்லையா?
லார்ட்ஸில் அயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கு தயாராவதற்காக இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்) இறுதிக் கட்டத்தில் வெளியேறுவார் என்று இங்கிலாந்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
2023 ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடர் மார்ச் 31ம் தேதி முதல் மே 28ம் தேதி வரை நடக்கிறது. இதில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பில் களமாடும் இங்கிலாந்தின் ஆல்ரவுண்டர் வீரரும், டெஸ்ட் அணியின் கேப்டனுமான பென் ஸ்டோக்ஸ் அயர்லாந்துக்கு எதிரான 4 நாள் போட்டியாக நடக்கும் டெஸ்ட் போட்டியில் தயாராவதற்காக தொடரின் இறுதிக் கட்டத்தில் வெளியேறுவார் என்று கூறப்படுகிறது.
ஆஷஸுக்கு முன் இங்கிலாந்தின் கடைசி டெஸ்ட் போட்டி இதுவாக இருக்கும். இது, ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு நான்கு நாட்களுக்குப் பிறகு ஜூன் 1 ஆம் தேதி தொடங்குகிறது.
ஜோஃப்ரா ஆர்ச்சர், மார்க் வுட், ஹாரி ப்ரூக், ஜானி பேர்ஸ்டோவ் மற்றும் ஜோ ரூட் போன்ற ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் இங்கிலாந்து வீரர்களும் டெஸ்ட் அணியில் இடம்பிடித்துள்ளனர் என்பது குறிபிடத்தக்கது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நீண்ட கால கேப்டன் எம்.எஸ். தோனி தனது கேப்டன் மற்றும் தொழில்முறை கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற உள்ளார். அவரது கடைசிப் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கவிருக்கிறது. அவரைத் தொடர்ந்து சி.எஸ்,கே-வை பென் ஸ்டோக்ஸ் வழிநடத்துவார் என்று பேசட்டப்பட்டது. இந்த நிலையில், பென் ஸ்டோக்ஸ் தொடரின் கடைசி கட்டத்தில் வெளியேறிவார் என்று கூறப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.