scorecardresearch

சென்னையில் ஐ.பி.எல் பிளே ஆஃப்; ட்விட்டர் ப்ளூ டிக்கை பறிகொடுத்த கிரிக்கெட் பிரபலங்கள்… இன்றைய டாப் 5 ஸ்போர்ட்ஸ் நியூஸ்!

லெகெஸி ப்ளு டிக்குகள் பிரபலங்களின் கணக்குகளில் இருந்து பறிக்கப்பட்ட நிலையில், கோலி, தோனி, ரோகித் சர்மா உள்ளிட்ட இந்திய கிரிக்கெட் பிரபலங்கள் தங்களது ப்ளூ டிக்கை இழந்துள்ளனர்.

Top 5 Cricket News In Tamil 22 MARCH 2023
Sports – Cricket News in tamil

Top 5 Cricket News Of The Day in tamil: ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்’ விளையாட்டு செய்திகள் பக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். இன்றைய டாப் 5 கிரிக்கெட் விளையாட்டு செய்திகளை இங்கு பார்க்கலாம்.

  1. சென்னையில் ஐ.பி.எல் பிளே ஆஃப் போட்டிகள்

16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் பங்கேற்று விளையாடி வரும் 10 அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. அதன்படி, ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள அணிகளுடன் தலா ஒரு முறையும், அடுத்த பிரிவில் உள்ள அணிகளுடன் தலா 2 முறையும் மோதும். ஒவ்வொரு அணியும் மொத்தம் 14 ஆட்டங்களில் விளையாட வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய ‘பிளே-ஆஃப்’ சுற்றுக்கு முன்னேறும்.

இந்த நிலையில், பி.சி.சி.ஐ பிளேஆஃப் மற்றும் இறுதிப் போட்டியின் அட்டவணையை அறிவித்துள்ளது. அதன்படி, பிளே ஆஃப் மற்றும் இறுதிப் போட்டிகள் மே 23 முதல் மே 28 வரை சென்னை மற்றும் அகமதாபாத்தில் நடைபெறுகிறது. சென்னையில் பிளே ஆஃப் போட்டிகள் நடைபெறும் நிலையில் சென்னை ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

மே 23 – தகுதிச் சுற்று 1 – சென்னை.
மே 24- எலிமினேட்டர் போட்டி – சென்னை.
மே 26 – தகுதிச் சுற்று 2 – அகமதாபாத்.
மே 28 – இறுதிப் போட்டி – அகமதாபாத்.

  1. சென்னை – ஐதராபாத் போட்டியை நேரில் கண்டு களித்த முதல்வர் – ஆளுநர்

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு 7.30 மணிக்கு தொடங்கிய 29-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இதில் சென்னை அணி ஐதராபாத்தை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

இந்நிலையில், இப்போட்டியை நேரில் கண்டு களிக்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வருகை தந்தார். அவருடன் மனைவி துர்கா ஸ்டாலின், விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி, அமைச்சர் பொன்முடி போன்றோரும் வந்தனர். இதேபோல், தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனும் வருகை தந்தார்.

  1. புஷ்பாவாக மாறிய வார்னர்

தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்த படம் ‘புஷ்பா’. தற்போது இப்படத்தின் 2ம் பாகம் ‘புஷ்பா-தி ரூல்’ படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் மற்றும் டைட்டில் டீசர் வெளியாகி கவனம் பெற்றது.

இந்நிலையில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரும், ஐபிஎல் தொடருக்கான டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் கேப்டனுமான டேவிட் வார்னர் புஷ்பாவாக மாறிய புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

  1. சூர்யா குறித்து சச்சின் சுவாரசிய பதில்

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் வீரரான சச்சின் டெண்டுல்கர் #AskSachin என்ற ஹேஷ் டேக்கை பதிவிட்டு அதன்கீழ் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு ட்விட்டரில் பதில் அளித்துள்ளார். அவரது ட்விட்டரின் கணக்கின் ப்ளூ டிக் நீக்கப்பட்ட நிலையில், நீங்கள்தான் சச்சின் என்று எப்படி நாங்கள் நம்புவது என்று ஒருவர் கேட்க, இப்போதைக்கு இதுதான் எனது ட்விட்டர் ப்ளூ டிக் என்று, செல்ஃபி ஒன்றை சச்சின் வெளியிட்டார்.

இந்நிலையில், நடிகர் சூர்யாவுடன் சச்சின் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு, ரசிகர் ஒருவர் இந்த சந்திப்பு குறித்து சொல்லுங்களேன் என்று கேள்வி எழுப்பினார். அதற்கு சச்சின், “நாங்கள் இருவரும் ஆரம்பத்தில் மிகவும் கூச்சமாக உணர்ந்தோம். ஒருவரையொருவர் தொந்தரவு செய்ய விரும்பவில்லை, ஆனால் நன்றாக பேசிக்கொண்டோம்.” என்று கூறினார்.

மும்பை வான்கிடே மைதானத்திற்கு அடுத்தபடியாக உங்களுக்கு பிடித்தமான மைதானம் என்று ரசிகர் கேட்க, அதற்கு சென்னை சேப்பாக்கம் என்று சச்சின் பதில் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

  1. ட்விட்டர் ப்ளூ டிக்கை இழந்த கிரிக்கெட் பிரபலங்கள்

ட்விட்டர் நிறுவனத்தை உலகின் நம்பர் ஒன் பணக்காரரான எலான் மஸ்க் வாங்கியதைத் தொடர்ந்து பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதில் ட்விட்டர் சப்ஸ்க்ரிப்ஷன் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. உறுதி செய்யப்பட்ட ப்ளூ டிக்கை பெறுவதற்கு பயனாளிகள் சந்தா செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டது.

இந்திய அணியின் கிரிக்கெட் வீரர்கள், திரைத்துறையினர் உள்ளிட்ட பலருக்கும் லெகெஸி ப்ளு டிக் அடிப்படையில் வழங்கப்பட்டது. அனைவரும் இனி ப்ளூ டிக்கை சந்தா செலுத்தி பெற வேண்டும் என்று எலான் மஸ்க் அறிவித்த நிலையில், அதற்கு கால அவகாசம் 20 ஆம் தேதி வரை கொடுக்கப்பட்டது.

இந்த நிலையில், நேற்று நள்ளிரவு முதல் இந்த லெகெஸி ப்ளு டிக்குகள் பிரபலங்களின் கணக்குகளில் இருந்து பறிக்கப்பட்டு விட்டன. இதன் அடிப்படையில் இந்திய அணியின் விராட் கோலி, முன்னாள் கேப்டன் தோனி, ரோஹித் சர்மா உள்ளிட்டோரின் ட்விட்டர் கணக்கிலிருந்து ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளது.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Tamil App.

Web Title: Top 5 cricket news in tamil 22 march 2023