scorecardresearch

யுவி-க்கு நோட்டீஸ் அனுப்பிய கோவா அரசு… ஐ.பி.எல். மினி ஏல தேதி மாற்றமா? டாப் 5 ஸ்போர்ட்ஸ் செய்திகள்!

முன்னாள் வீரர் இந்திய யுவராஜ் சிங்-கிற்க்கு கோவா அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

யுவி-க்கு நோட்டீஸ் அனுப்பிய கோவா அரசு… ஐ.பி.எல். மினி ஏல தேதி மாற்றமா? டாப் 5 ஸ்போர்ட்ஸ் செய்திகள்!
Sports – Cricket News in tamil

Top 5 Cricket News Of The Day in tamil: ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்’ விளையாட்டு செய்திகள் பக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். இன்றைய டாப் 5 கிரிக்கெட் விளையாட்டு செய்திகளை இங்கு பார்க்கலாம்.

 1. ஜடேஜா விலகல் – சூர்யகுமார் சேர்ப்பு?

இந்திய அணியின் ஆல்ரவுண்டர் வீரர் ரவீந்திர ஜடேஜாக்கு ஆசிய கோப்பை தொடரின் போது முழங்காலில் காயம் ஏற்பட்டது. இதனால் அவர் தொடரில் இருந்து விலகினார். இந்த காயம் காரணமாக அவர் டி20 உலக கோப்பையிலும் பங்கேற்கவில்லை. இதனிடையே, தனது காயத்திற்கு ஜடேஜா அறுவை சிகிச்சை கொண்ட நிலையில், சிகிச்சைக்கு பிறகு அவர் ஓய்வில் இருந்து வந்தார்.

இதனையடுத்து, நியூசிலாந்துக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் அணிகளில் அவர் இடம் பெறவில்லை. ஆனால், வங்க தேச அணிக்கு எதிரான தொடர்களில் அவர் சேர்க்கப்பட்டிருந்தார். எனினும், அவரது உடற்தகுதியைப் பொறுத்து தான் அவர் அந்த தொடர்களில் விளையாடுவார் என்று ஏற்கனவே பிசிசிஐ தெரிவித்து இருந்தது.

இந்நிலையில், ஜடேஜா அவரின் காயத்தில் இருந்து மீண்டு வர இன்னும் சிறுது காலம் ஆகும் என்பதால், அவர் வங்க தேச தொடருக்கு முன் முழு உடற்தகுதியை பெற வாய்ப்பில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு பதிலாக அணியில் அதிரடி ஆட்டக்காரர் சூர்யகுமார் யாதவை சேர்க்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 1. யுவராஜ்-க்கு நோட்டீஸ் அனுப்பிய கோவா அரசு

இந்திய கிரிக்கெட் அணியில் முன்னணி ஆல்ரவுண்டர் வீரராக வலம் வந்தவர் யுவராஜ் சிங். இவர், கடந்த 2019-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். மேலும் அனைத்து வடிவ கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்றார். தற்போது அவர் விளம்பர படங்களில் நடித்து வருகிறார். அதோடு, பல தனியார் தொழில்களில் முதலீடு செய்து வருமானம் ஈட்டி வருகிறார்.

இந்நிலையில், யுவராஜ்-க்கு கோவா அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றான கோவாவில் யுவராஜ் சிங்கிற்கு சொந்தமான ஒரு சொகுசு வீடு உள்ளது. அங்கு அவர் அடிக்கடி குடும்பத்தினருடன் சென்று நேரத்தை செலவிடுவார். அதனை தற்போது விடுதியாக மாற்றி சுற்றுலா பயணிகளுக்கு வாடைகைக்கு விட்டும் வருகிறார்.

இது தொடர்பாக யுவராஜ் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில், “எனக்கு சொந்தமான காசா சிங் வீட்டில் பல்வேறு சுவாரஸ்ய நினைவுகள் உள்ளது. கிரிக்கெட் ரசிகர்களாகிய நீங்கள் அதையெல்லாம் பார்க்க வேண்டுமென்றால் உடனடியாக புக் செய்துக்கொள்ளலாம்.” என்று அறிவித்திருந்தார். யுவராஜின் இந்த பதிவை மோப்பம் பிடித்த கோவா அரசு அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பொதுவாக, கோவாவில் ஒருவர் விடுதி நடத்த வேண்டுமெனில், அரசிடம் விண்ணப்பித்து, அதற்கான அனுமதி சான்றிதழை பெற்ற வேண்டும். ஆனால், யுவராஜ் சிங் அதை எதையுமே செய்யாமல் இருந்துள்ளார். எனவே, யுவராஜ் சிங் வருகிற டிசம்பர் 8 ஆம் தேதி காலை 11 மணிக்கு நேரில் ஆஜராகி விளக்கம் தர வேண்டும் என கோவாவின் சுற்றுலா துறை இயக்குநர் ராஜேஷ் காலே சார்பில் நோட்டீஸ் அனுப்பட்டுள்ளது.

ஒருவேளை அரசு அனுப்பிய கடிதத்திற்கு யுவராஜ் சிங் எந்தவொரு பதிலும் தரவில்லை என்றால், குற்றத்தை ஒப்புக்கொண்டதாக கருதி, அவருக்கு குறைந்தது ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 1. ஐசிசி டி20 தரவரிசை – சூர்யகுமார் தொடர்ந்து முதலிடம்

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) டி20 பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில், கடந்த 2 ஆம் தேதி டி20 பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் முதல் முறையாக முதல் இடத்திற்கு முன்னேறி இருந்த சூர்யகுமார் யாதவ் (890 புள்ளிகள்) தற்போது அதை தக்கவைத்துள்ளார். நியூசிலாந்து அணிக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் அதிரடி சதம் விளாசி இருந்த சூர்யகுமார் 31 புள்ளிகள் கூடுதலாக பெற்று 890 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளார்.

இந்த பட்டியலில், பாகிஸ்தான் அணியின் முகமது ரிஸ்வான் 836 புள்ளிகளுடன் தொடர்ந்து 2-வது இடத்திலே நீடிக்கிறார். அதே நேரத்தில் 3-வது இடத்தில் இருந்த பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் 4-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். நியூசிலாந்தின் டெவோன் கான்வே 3-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

ஐசிசி டி20ஐ பேட்டிங் தரவரிசை (நவம்பர் 23, 2022 நிலவரப்படி):

 1. சூர்யகுமார் யாதவ் – 890 புள்ளிகள்
 2. முகமது ரிஸ்வான் – 836
 3. டெவோன் கான்வே – 788
 4. பாபர் ஆசம் – 778
 5. ஐடன் மார்க்ரம் – 748
 6. டேவிட் மாலன் – 719
 7. கிளென் பிலிப்ஸ் – 699
 8. ரெய்லி ரூஸோ- 693
 9. ஆரோன் பின்ச் – 680
 10. பதும் நிசாங்கா- 673

4. 2024-ம் ஆண்டு உலக கோப்பையில் புதிய மாற்றம்

ஆஸ்திரேலிய மண்ணில் நடந்த முடிந்த 8-வது டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்திய இங்கிலாந்து அணி சாம்பியன் பட்டத்தை வகை சூடியது. தொடர்ந்து 9-வது டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் 2024-ம் ஆண்டில் வெஸ்ட் இண்டீஸ், அமெரிக்கா நாடுகளில் நடைபெறுகிறது.

இந்நிலையில், 2024-ம் ஆண்டில் நடக்கவிருக்கும் உலக கோப்பையில் புதிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முந்தைய இரு உலக கோப்பை போட்டிகள் முதல் சுற்று, அதன் பிறகு சூப்பர்12 சுற்று, அரைஇறுதி, இறுதிப்போட்டி என்ற முறையில் நடத்தப்பட்டன. ஆனால் 2024-ம் ஆண்டு உலக கோப்பை ஆட்ட வடிவமைப்பில் மாற்றம் செய்யப்படுகிறது.

இந்த உலக கோப்பையில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்கின்றன. அவை 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. ஒவ்வொரு பிரிவிலும் டாப் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும். சூப்பர் 8 சுற்றில் 8 அணிகளும் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு மோதும். அதில் இருந்து 4 அணிகள் அரைஇறுதிக்கு தேர்வாகும்.

இந்த உலக கோப்பை தொடருக்கு ஏற்கனவே 12 அணிகள் நேரடியாக தகுதி பெற்று விட்டன. மீதமுள்ள 8 அணிகள் தகுதி சுற்று மூலம் முடிவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

 1. ஐ.பி.எல். மினி ஏல தேதி மாற்றமா?

2023 ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) போட்டிகள் மார்ச் 3வது வாரத்தில் தொடங்கி மே இறுதி அல்லது ஜூன் தொடக்கத்தில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் வருகிற டிசம்பர் 23 ஆம் தேதி கொச்சியில் நடைபெறவுள்ளது.

இந்த மினி ஏலத்திற்கு முன்பாக ஒவ்வொரு அணியும் தாங்கள் தக்கவைக்கும் வீரர்களின் பெயர் பட்டியலை கடந்த 15 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சமர்பிக்க வேண்டும் என ஐபிஎல் நிர்வாகம் அறிவுறுத்தியிருந்தது. அதன்படி, வீரர்களை தக்கவைப்பதற்கான காலக்கெடு முடிந்ததால் 10 அணிகளும் தாங்கள் தக்கவைத்த வீரர்களின் பட்டியலை வழங்கிவிட்டன. தற்போது அந்த அணிகள் மினி ஏலத்தில் எந்தெந்த வீரர்களை வசப்படுத்தலாம் என்று கணக்குப்போட்டு வருகின்றன.

இந்நிலையில், ஐ.பி.எல். மினி ஏலத்தில் கலந்து கொள்ளவிருக்கும் 10 அணிகளில் பெரும்பாலான அணிகள், மினி ஏலத்திற்கான தேதியை மாற்றம் செய்யும்படி பி.சி.சி.ஐ.யிடம் கோரிக்கை விடுத்துள்ளன.

எதற்காக இப்படியொரு கோரிக்கை?

பி.சி.சி.ஐ.யிடம் கோரிக்கை விடுத்துள்ள இந்த அணிகளில் பெரும்பாலான ஊழியர்கள் வெளிநாட்டவர்களாக உள்ளனர். அவர்களில் பலர் டிசம்பர் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையை தங்கள் குடும்பத்தினருடன் கொண்டாடுவார்கள். இந்த ஒருநாள் மினி ஏலம், கிறிஸ்துமஸ் பெருநாளுக்கு இரண்டு நாள் முன்னதாக ஏலம் நடைபெறுகிறது. இதனால், அவர்கள் கலந்து கொள்வதில் சிக்கல் ஏற்படும். எனவே, பெரும்பாலான அணிகள் மினி ஏலத்திற்கான தேதியை மாற்றம் செய்யும்படி கோரிக்கை விடுத்துள்ளன. ஆனால், பி.சி.சி.ஐ. இதுகுறித்து இன்னும் முடிவு செய்யவில்லை.

10 அணிகளிடம் மீதமுள்ள தொகை

 1. சன்ரைசர்ஸ் ஐதராபாத் – 42.25 கோடி ரூபாய்
 2. பஞ்சாப் கிங்ஸ் – 32.20 கோடி ரூபாய்
 3. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் – 23.35 கோடி ரூபாய்
 4. மும்பை இந்தியன்ஸ் – 20.55 கோடி ரூபாய்
 5. சென்னை சூப்பர் கிங்ஸ் – 20.45 கோடி ரூபாய்
 6. டெல்லி கேபிட்டல்ஸ் – 19.45 கோடி ரூபாய்
 7. குஜராத் டைட்டன்ஸ் – 19.25 கோடி ரூபாய்
 8. ராஜஸ்தான் ராயல்ஸ் – 13.20 கோடி ரூபாய்
 9. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – 8.75 கோடி ரூபாய்
 10. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – 7.05 கோடி ரூபாய்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெறhttps://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Tamil App.

Web Title: Top 5 cricket news in tamil 22 november 22