scorecardresearch

கோலிக்கு காத்திருக்கும் அடுத்த ஆபத்து… 3வது டெஸ்ட் கேப்டனாக ஸ்மித்: இன்றைய டாப் 5 கிரிக்கெட் நியூஸ்

இந்தியா – ஆஸ்திரேலிய அணிகள் மோதிய நாக்பூர் மற்றும் டெல்லி டெஸ்ட் போட்டி பிட்ச்-கள் இரண்டுமே சுமாரான ஆடுகளம் என ஐசிசி குறிப்பிட்டுள்ளது.

Top 5 cricket news in tamil, 24 February 2023
Top 5 cricket news today tamil

Top 5 Cricket News Of The Day in tamil: ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்’ விளையாட்டு செய்திகள் பக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். இன்றைய டாப் 5 கிரிக்கெட் விளையாட்டு செய்திகளை இங்கு பார்க்கலாம்.

  1. 3வது டெஸ்ட் கேப்டனாக ஸ்மித்… கம்மின்ஸ் திடீர் விலகல்

4 போட்டிகள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் இந்திய மண்ணில் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் முதல் இரண்டு டெஸ்ட்டிலும் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக செயல்பட்ட பேட் கம்மின்ஸ், குடும்ப விவகாரம் தொடர்பாக திடீரென நாடு திரும்பினார் எனினும், அவர் இந்தூரில் நடக்கும் 3-வது டெஸ்ட் போட்டிக்கு இந்தியா திரும்புவார் என்று முதலில் தகவல் வெளியானது.

இந்நிலையில், பேட் கம்மின்ஸ் இந்தியா திரும்புவதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், 3-வது டெஸ்ட்டில் கம்மின்ஸ் களமிறங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட்டில் ஆஸ்திரேலியாவின் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி வருகிற மார்ச் 1-ம் தேதி நடைபெறும் 3-வது டெஸ்ட்டில் களமாடும்.

  1. கோலிக்கு காத்திருக்கும் அடுத்த ஆபத்து… ஒருநாள் தொடரிலும் நடுவாராக நிதின் மேனன்

டெல்லியில் நடந்த 2வது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி 44 ரன்கள் எடுத்த போது கள நடுவர் நிதின் மேனனின் சர்ச்சைக்குரிய முடிவால் ஆட்டமிழந்தார். மேத்யூ வீசிய 50-வது ஓவரின் 3வது பந்தில் கோலி எல்.பி.டபிள்யூ முறையில் அவுட் ஆனர். ஆனால், பந்து பேட் மற்றும் பேடில் ஒரே நேரத்தில் பட்டது. எம்சிசி விதிப்படி பந்து ஒரே நேரத்தில் பேட் மற்றும் பேடில் பட்டால் நாட் அவுட் ஆகும். ஆட்டமிழந்து வெளியேறிய கோலி டிரஸ்சிங் அறையில் வைக்கப்பட்டிருந்த டி.வி-யில் பார்க்கும்போது, தான் அவுட் இல்லை என்பதை அறிந்து கொண்டார். அப்போது அவர் கடும் கோபத்தை வெளிக்காட்டினார். அவரின் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிறது.

இந்நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 போட்டிகள் ஒருநாள் தொடரிலும் நடுவராக நிதின் மேனன் செயல்பட இருக்கிறார். ஐசிசி இணையதளத்தின்படி, ‘ஐசிசி நடுவர் மற்றும் நடுவர் நியமனங்கள்’ என்ற பிரிவின் கீழ், முதலாவது ஒருநாள் போட்டியில் கே பத்மநாபனுடன் நிதின் மேனன் நடுவராக செயல்படுவார். அவருடன் 2வது மற்றும் 3வது ஒருநாள் போட்டியில் முறையே வீரேந்திர சர்மா மற்றும் ஜெயராமன் மதனகோபால் ஆகியோர் களமிறங்குகின்றனர்.

  1. நாக்பூர், டெல்லி பிட்ச் விவகாரம்: ஐசிசி மதிப்பீடு

இந்தியாவில் நடைபெற்று வரும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் நாக்பூர் மற்றும் டெல்லியில் நடந்த 2 போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்று, தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இதனிடையே, ஆஸ்திரேலிய ஊடகங்கள் இந்தியாவின் சுழலுக்கு சாதகமான பிட்ச் அமைப்பு குறித்து விவாதித்து வருகின்றன. இந்த தொடர் தொடங்கியது முதல் தற்போது வரை ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறது.

IND AUS 2nd TEST, Delhi Pitch Report in tamil

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து ஐசிசி நடவடிக்கை எடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில், முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் நடைபெற்ற நாக்பூர் மற்றும் டெல்லி பிட்ச்-கள் இரண்டுமே சுமாரான ஆடுகளம் தான் என ஐசிசி தெரிவித்திருக்கிறது. மேட்ச் நடுவரான ஜிம்பாப்வேவை சேர்ந்த ஆண்டி பைக்ராப்ட் கொடுத்த அறிக்கையின் அடிப்படையில் இந்த ரேட்டிங் கொடுத்துள்ளதாக ஆஸ்திரேலிய ஊடகங்கள் கூறி வருகிறது. இது குறித்து ஐசிசி தரப்பில் எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடவில்லை என்பது குறிபிடத்தக்கது.

  1. கவாஸ்கர், வினோத் காம்ப்ளி சாதனையை முறியடித்த ஹாரி ப்ரூக்

நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணமாக சென்றுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதல் டெஸ்டில் இங்கிலாந்து 267 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தொடர்ந்து 2வது டெஸ்ட் போட்டி இன்று முதல் தொடங்கியுள்ளது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்து வரும் இங்கிலாந்து முதல் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 315 ரன்கள் குவித்து வலுவான நிலையில் உள்ளது. சதம் அடித்துள்ள ஹாரி ப்ரூக் 184 ரன்களும், ஜோ ரூட்101 ரன்களும் எடுத்து களத்தில் உள்ளனர்.

இந்நிலையில், இந்தப் போட்டியில் சதம் அடித்ததன் மூலம் இங்கிலாந்து அணியின் இளம் வீரரான ஹாரி ப்ரூக் சர்வதேச டெஸ்ட் அரங்கில் பல்வேறு சாதனைகள் படைத்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் முதல் 6 போட்டிகளுக்குள் 4 சதங்கள் கடந்த வீரர்கள் பட்டியலில், கிரிக்கெட் ஜாம்பவான் டான் பிராட்மேனுடன் ஹார் ப்ரூக் இணைந்துள்ளார்.

இதேபோல், டெஸ்ட் போட்டிகளில் முதல் 9 இன்னிங்ஸில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் இருக்கும் முன்னாள் இந்திய கேப்டன் சுனில் கவாஸ்கர் மற்றும் வினோத் காம்ப்ளி போன்ற ஜாம்பவான்களை பின்னுக்கு தள்ளி ஹாரி ப்ரூக் முதலிடத்தை பிடித்துள்ளார். முன்னாள் இந்திய வீரரான வினோத் காம்ப்ளே தனது முதல் 9 இன்னிங்ஸில் 798 ரன்கள் குவித்திருந்ததே சாதனையாக இருந்தது. தற்போது இதனை ஹாரி ப்ரூக் முறியடித்துள்ளார். மேலும், முதல் 9 இன்னிங்ஸில் 800 ரன்கள் கடந்த முதல் வீரர் என்ற பெருமையும் ஹாரி ப்ரூக் படைத்து அசத்தியுள்ளார்.

  1. டெல்லி கேப்டனாக வார்னர்? துணை கேப்டன் வாய்ப்பு யாருக்கு?

2023-ம் ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் 31-ம் தேதி தொடங்கி மே 28-ம் தேதி வரை நடக்கிறது. இதற்காக தொடரில் களமாடும் 10 அணிகளும் முதற்கட்ட பயிற்சிகளுக்காக ஏற்பாடு செய்து வருகின்றன. இந்நிலையில் டெல்லி அணியின் கேப்டனாக செயல்படப் போவது யார்? என்பது இன்னும் முடிவாகவில்லை.

கடந்த சீசனில் டெல்லி அணியின் கேப்டனாக செயல்பட்ட ரிஷப் பண்ட் கார் விபத்தில் சிக்கி, காயத்தில் இருந்து மீண்டு வருகிறது. அதனால் அவர் தொடரில் இருந்தும் விலகியுள்ளார். எனவே, அவருக்குப் பதிலாக இந்த ஆண்டு டெல்லி அணியை யார் வழிநடத்துவார் என கேள்வி எழும்பியுள்ளது.

இந்த நிலையில், டெல்லி அணியின் கேப்டனாக ஆஸ்திரேலியாவின் அதிரடி வீரர் டேவிட் வார்னர் நியமிக்க பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. ஐபிஎல்லில் அதிக அனுபவம் வாய்ந்த வார்னர் தலைமையில் ஐதரபாத் அணி கடந்த 2016ம் ஆண்டு சாம்பியன் பட்டம் வென்றது. மேலும் டெல்லி அணியின் துணை கேப்டனாக அக்சர் படேலை நியமிக்க உள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றான. எனினும், இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்த பின்னரே டெல்லி அணியின் கேப்டன், துணை கேப்டன் யார் என்பது தெரிய வரும்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Tamil App.

Web Title: Top 5 cricket news in tamil 24 february 2023

Best of Express