Top 5 Sports News Of The Day in tamil: ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்’ விளையாட்டு செய்திகள் பக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். இன்றைய டாப் 5 விளையாட்டு செய்திகளை இங்கு பார்க்கலாம்.
- சாஹலின் காதல் கதை
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்காக விளையாடி வருகிறார். இந்நிலையில், தனது காதல் கதையை சாஹல் பகிர்ந்துள்ளார். யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த சாஹல் தன் காதல் கதையை கூறினார்.
“கொரோனா காலத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டபோது நான் என் குடும்பத்துடன் இருந்தேன். குருகிராமில் உள்ள எனது வீட்டில் நான் நீண்ட நாள்கள் இருந்தது அதுவே முதல்முறை. கிட்டத்தட்ட 4 மாதங்கள் நான் என் குடும்ப உறுப்பினர்கள் என் செல்லப்பிராணிகளுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட்டேன்.

அப்போது, நான் நடனம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று மிகுந்த ஆர்வமாக இருந்தேன். அப்போது, தனஸ்ரீ ஆன்லைனில் நடன பயிற்சி வகுப்பு நடத்துவதாக எனக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நான் ஆன்லைன் வகுப்பில் கலந்துகொண்டேன். ஒருநாள் தனஸ்ரீயிடம் நீங்கள் ஏன் வாழ்க்கையில் இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள்? என்று கேட்டேன். அதற்கு அவர் நான் எப்போது இப்படித்தான் இருப்பேன். வாழ்க்கையில் சிறு சிறு விஷயங்களில் நான் மகிழ்ச்சியை தேடுவேன்’ என்றார். எனக்கு எல்லாம் சரியாக அமைந்தது என் குடும்பத்திடம் கூறினேன்.
பின்னர் தனஸ்ரீயிடம், எனக்கு 30 வயதாகிறது. டேட்டிங் செய்து நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. நான் உங்களை திருமணம் செய்துகொள்ள விரும்புகிறேன். உங்களுடன் டேட்டிங் செய்ய விரும்பவில்லை’ என்றேன். அதற்கு தனஸ்ரீ, முடியாது நான் உங்களை நேரில் பார்ததே இல்லை. முதலில் உங்களை நேரில் பார்க்க வேண்டும்’ என்றார். பின்னர் நாங்கள் மும்பையில் சந்தித்தோம். அங்கு தனஸ்ரீ, சரி திருமணத்திற்கு சரி என்று கூறினார்” என்று சஹால் கூறியிருந்தார்.

சாஹலின் மனைவி தனஸ்ரீ வர்மா பல் மருத்துவர். இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் மிகவும் பிரபலமாக உள்ளார். இந்த காதல் ஜோடி கடந்த 2020 டிசம்பர் மாதம் திருமணம் செய்துகொண்டனர்.
- பாலியல் துன்புறுத்தல்: மனமுடைந்து அழுத மல்யுத்த வீராங்கனைகள்
பாலியல் துன்புறுத்தல் விவகாரத்தில் மல்யுத்த வீராங்கனைகள் மீண்டும் போராட்டத்தில் குதித்துள்ளனர். இதுபற்றி மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் செய்தியாளர்களிடம் பேசுகையில், “3 மாதங்கள் கடந்து விட்டன. எங்களுக்கு நீதி கிடைக்கவில்லை. அதனாலேயே நாங்கள் மீண்டும் போராட்டத்தில் இறங்கி இருக்கிறோம். எங்களுக்கு நியாயம் வேண்டும். இன்னும், எப்.ஐ.ஆர். கூட பதிவு செய்யப்படவில்லை. டெல்லி மகளிர் ஆணையம் எங்களுக்கு ஆதரவு அளித்து இருப்பதற்காக நன்றி தெரிவிக்கிறோம் என கூறியுள்ளார்.

இந்த விவகாரத்தில் மல்யுத்த வீராங்கனைகளின் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டின் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்ய தவறிய நிலையில், டெல்லி மகளிர் ஆணையம் டெல்லி போலீசாருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. நாங்கள் தொடர்ந்து மனஉளைச்சலால் பாதிக்கப்பட்டு இருக்கிறோம். இது வீராங்கனைகளின் மரியாதை தொடர்பான விசயம். விளையாட்டு அமைச்சகத்திடம் இருந்து எந்தவித பதிலும் எங்களுக்கு கிடைக்கவில்லை.
3 மாதங்கள் கடந்தோடி விட்டன என அவர்கள் தெரிவித்தனர். சிறுமி உள்பட 7 இளம்பெண்கள் பிரிஜ்பூஷண் சிங்கிற்கு எதிராக காவல் நிலையத்தில் பாலியல் துன்புறுத்தல் புகார் அளித்தும் இன்னும் அது பதிவு செய்யப்படவில்லை. போக்சோ வழக்கும் பதிவாக வேண்டும் என கூறினர். இதுபற்றி செய்தியாளர்களிடம் பேட்டி அளித்து கொண்டிருந்தபோது, மல்யுத்த வீராங்கனைகளான சாக்சி மாலிக் மற்றும் வினேஷ் போகத் மனமுடைந்து அழுதனர். இதனால், அந்த பகுதியில் சலசலப்பு ஏற்பட்டது.
- ஈடன் கார்டனில் கடல் போல் திரண்ட சி.எஸ்.கே. ரசிகர்கள்
16வது ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று ஞாயிற்றுகிழமை இரவு நடந்த போட்டியில் நிதிஸ் ராணா தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் மற்றும் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் சென்னை அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.

இந்த போட்டி கொல்கத்தா ஈடன் காடர்ன் மைதானத்தில் நடைபெற்றாலும் சேப்பாக்கத்தில் நடைபெறுவது போல சென்னை அணிக்கு ரசிகர்களின் ஆதரவு இருந்தது. மைதானம் முழுவதும் மஞ்சள் நிறமாகவே காட்சியளித்தது. மைதானத்தில் சென்னை அணி ரசிகர்களே அதிக அளவில் திரண்டிருந்தனர். சென்னை அணியின் ரசிகர்கள் உற்சாக ஆதரவு தெரிவித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
- பார்சிலோனா ஓபன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்ற கார்லோஸ் அல்காரஸ்

ஸ்பெயின் நாட்டில் பார்சிலோனா ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில், நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ், கிரீஸ் வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாசை சந்தித்தார். மிகவும் விறுவிறுப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் கார்லோஸ் 6-3, 6-4 என்ற நேர் செட்களில் சிட்சிபாசை வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
- அமெரிக்க கிரிக்கெட் லீக்கில் சென்னை சூப்பர் கிங்ஸ்
ஐபிஎல்-லை போலவே அமெரிக்காவில் மேஜர் லீக் கிரிக்கெட் டி20 தொடர் தொடங்கப்பட உள்ளது. வரும் ஜுலை மாதம் முதல் இத்தொடர் தொடங்கவுள்ள நிலையில் இந்த தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் டெக்சாஸ் அணியை வாங்கியுள்ளது.இந்த நிலையில் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணியின் லோகோ இன்று சென்னை அணி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
Everywhere we go… roar and shine @texassuperkings! 🦁⭐ #WhistleForTexas pic.twitter.com/sFHau7l6Ye
— Chennai Super Kings (@ChennaiIPL) April 22, 2023
ஏற்கனவே மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் நியூயார்க் அணியையும், டெல்லி கேபிட்டல்ஸ் அணி நிர்வாகம் சியாட்டில் அணியையும் வாங்கியுள்ளன. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்வாகம், லாஞ் ஏஞ்சல்ஸ் அணியை வாங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil