scorecardresearch

ரவி சாஸ்திரிக்கு பதிலடி கொடுத்த ரோகித், 4வது டெஸ்டில் டாஸ் போடும் மோடி? இன்றைய டாப் 5 ஸ்போர்ட்ஸ் நியூஸ்!

இந்திய அணி தோல்வியடைந்தது “அதீத தன்னம்பிக்கை” காரணமாக தான் என்று முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறிய நிலையில், அதை “குப்பை” என்று அழைத்து பதிலடி கொடுத்துள்ளார் கேப்டன் ரோகித் சர்மா.

Top 5 Cricket News today In Tamil, 08 March 2023
Sports – Cricket News today in tamil

Top 5 Cricket News Of The Day in tamil: ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்’ விளையாட்டு செய்திகள் பக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். இன்றைய டாப் 5 கிரிக்கெட் விளையாட்டு செய்திகளை இங்கு பார்க்கலாம்.

  1. இந்தியா – ஆஸ்திரேலியா 4வது டெஸ்ட்: டாஸ் போடும் பிரதமர் மோடி?

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் அகமாதபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. இப்போட்டியின் முதல் நாள் ஆட்டத்தை இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் நேரில் பார்க்க வருகை தரவுள்ளனர். இதற்காக அலங்கார ஏற்பாடுகளும் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், இந்த போட்டியை மேலும் சுவாரசியமாக்கும் விதமாக இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான நாளை தொடங்க உள்ள டெஸ்ட் போட்டியில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி டாஸ் சுண்டுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியும் என்பதால், இந்தப் போட்டி இந்தியாவுக்கு மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

  1. வீடியோ: பஸ்சில் ஹோலி கொண்டாடிய இந்திய வீரர்கள்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை நடக்கவுள்ளது. இந்த நிலையில், இந்திய அணி வீரர்கள் ஹோலி பண்டிகையை பஸ்சில் கொண்டாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்திய அணி வீரர்கள் தங்களது டீம் பஸ்ஸில் ஒருவருக்கொருவர் வண்ண பொடிகளைப் பூசி ஹோலியை கொண்டாடினர். இந்த கொண்டாட்ட வீடியோவை இளம் வீரர் சுப்மன் கில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகிறது.

அந்த வீடியோவில், விராட் கோலி, ரோஹித் ஷர்மா, கில், உள்ளிட்ட இந்திய வீரர்கள் ஆகியோர் தங்களது முகத்தில் வண்ணங்களை பூசியுள்ளனர்.பின்னணியில் ராங் பார்சே பாடல் ஒலிக்க, அனைத்து வீரர்களும் சிரித்த வண்ணம் போஸ் கொடுக்கிறார்கள்.

  1. பும்ராவுக்கு வெற்றிகரமாக முடிந்த அறுவை சிகிச்சை: அணிக்கு திரும்புவது எப்போது?

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா முதுகு வலி காரணமாக அவதிப்பட்டார். இதனால் கடந்த சில மாதங்களாக அவர் ஓய்வில் இருந்து வருகிறார். இந்நிலையில், அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டு, அதற்காக கடந்த சில நாட்களுக்கு முன் அவர் நியூசிலாந்து சென்றார்.

இந்த நிலையில், பும்ராவுக்கு நேற்று கிறிஸ்ட்சர்ச்சில் உள்ள மருத்துவமனையில் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டது. இந்த சிகிச்சைக்கு பின் அவர் நலமுடன் உள்ளார். அவர் முழுமையாக குணமடைந்து அணிக்கு திரும்ப இன்னும் 6 மாதங்கள் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  1. ரவி சாஸ்திரி பதிலடி கொடுத்த கேப்டன் ரோகித்

இந்திய அணி இந்தூரில் நடந்த 3வது டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்தது “அதீத தன்னம்பிக்கை” காரணமாக தான் என்று முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்து இருந்தார். இந்நிலையில், அதை “குப்பை” என்று அழைத்து ரவி சாஸ்திரிக்கு பதிலடி கொடுத்துள்ளார் கேப்டன் ரோகித் ஷர்மா.

இந்தியா 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த பிறகு, ஸ்டார் ஸ்போர்ட்ஸுக்கு வர்ணனை செய்யும் போது ரவி சாஸ்திரி, “இதுதான் கொஞ்சம் மனநிறைவு, கொஞ்சம் அதீத தன்னம்பிக்கை ஆகியவற்றை நீங்கள் எளிதாக எடுத்துக் கொள்ளும்போது, ​​நீங்கள் உங்கள் கார்டை கீழே இறங்கினீர்கள் என்றால், விளையாட்டு உங்களை வீழ்த்திவிடும்” என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில், 4வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக இன்று மாலை செய்தியாளர்களிடம் பேசிய ரோகித், உண்மையில், நீங்கள் இரண்டு ஆட்டங்களில் வெற்றி பெற்றால், வெளியில் இருப்பவர்கள் நாங்கள் அதீத நம்பிக்கையுடன் இருப்பதாக உணர்ந்தால், அது முற்றிலும் குப்பையாகும். ஏனென்றால் நீங்கள் நான்கு ஆட்டங்களிலும் உங்களால் முடிந்ததைச் செய்ய விரும்புகிறீர்கள்.

இரண்டு ஆட்டங்களில் வெற்றி பெறுவதை நிறுத்த விரும்பவில்லை. அது போல் எளிமையானது. வெளிப்படையாக, இவர்கள் அனைவரும், அதிக தன்னம்பிக்கையுடன் இருப்பதைப் பற்றி பேசும்போது, ​​குறிப்பாக அவர்கள் டிரஸ்ஸிங் ரூமில் இல்லாதபோது, ​​டிரஸ்ஸிங் ரூமில் என்ன மாதிரியான பேச்சு நடக்கிறது என்று அவர்களுக்குத் தெரியாது.” என்று கூறினார்.

முன்னாள் இந்திய கேப்டனான ரவி சாஸ்திரி, 2017 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

  1. இந்தியா – ஆஸ்திரேலியா 4வது டெஸ்ட்: ஆடும் லெவன் எப்படி?

இந்தியா – ஆஸ்திரேலிய அணிகள் மோதும் 4வது டெஸ்ட் போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜுக்கு பதிலாக அணியில் முகமது ஷமி-யும், கே.எஸ்.பாரத்துக்கு பதில் இஷான் கிஷனும் சேர்க்கப்படலாம். 6 ஸ்பெஷலிஸ்ட் பேட்டர்கள் மற்றும் மூன்று ஆல்ரவுண்டர்களுடன் விளையாடி வரும் இந்தியா ஆடுகளம் காரணமாக ஒரு வேகப்பந்து வீச்சாளர்களை தொடர்ந்து பயன்படுத்தாமல் இருக்கிறது. எனவே, அவரது இடத்தில் கூடுதல் பேட்ஸ்மேனை சேர்க்கலாம். அப்படியானால், மிடில் ஆர்டரில் அதிரடியாக மட்டையைச் சுழற்றும் சூரியகுமார் யாதவை இந்தியா சேர்க்கலாம்.

இந்தியாவின் சுழற்பந்துவீச்சு வரிசையில் எந்த மாற்றமும் நிகழ வாய்ப்பில்லை. ஒருபுறம் அதிக விக்கெட்டுகளை எடுக்காத அக்சர் படேல் லோயர் ஆடரை தாங்கிப் பிடிப்பாராக இருக்கிறார். மறுபுறம், அவர் மண்ணின் மைந்தனாகவும் இருக்கிறார். எனவே, அவரைக் கழற்றிட விட துளியும் வாய்ப்பில்லை. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளைப் போல், அஸ்வின் – ஜடேஜா கூட்டணி ஆஸ்திரேலிய வீரர்கள் நெருக்கடி கொடுக்க வேண்டும் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியில் எந்தவித மாற்றமும் நிகழ வாய்ப்பில்லை.

இந்தியா vs ஆஸ்திரேலியா, அகமதாபாத் டெஸ்ட்: இரு அணிகளின் உத்தேச லெவன் வீரர்கள் பட்டியல்

இந்தியா: ஷுப்மன் கில், ரோஹித் சர்மா (கேப்டன்), செஸ்டேஷ்வர் புஜாரா, விராட் கோலி, இஷான் கிஷன், ஷ்ரேயாஸ் ஐயர், ரவீந்திர ஜடேஜா, ஆர் அஷ்வின், அக்சர் படேல், உமேஷ் யாதவ் (அல்லது) சூர்யகுமார் யாதவ், முகமது ஷமி

ஆஸ்திரேலியா: உஸ்மான் குவாஜா, டிராவிஸ் ஹெட், மார்னஸ் லாபுஷாக்னே, ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), கேமரூன் கிரீன், பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப், அலெக்ஸ் கேரி, மிட்செல் ஸ்டார்க், நாதன் லியோன், டாட் மர்பி, மேத்யூ குஹ்னேமன்

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Tamil App.

Web Title: Top 5 cricket news today in tamil 08 march 2023

Best of Express