Top 5 Sports News Of The Day in tamil: ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்’ விளையாட்டு செய்திகள் பக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். இன்றைய டாப் 5 விளையாட்டு செய்திகளை இங்கு பார்க்கலாம்.
1.வீடியோ: பவுண்டரி லயனில் டான்ஸ் போட்டு பட்டையைக் கிளப்பிய ஜெமிமா
முதலாவது பெண்கள் பிரிமீயர் லீக் (டபிள்யூ.பி.எல்.) டி20 கிரிக்கெட் போட்டிகள் மும்பையில் நேற்று முன்தினம் கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்கியது. போட்டியின் 2-வது நாளான நேற்று மும்பை பிரபோர்ன் ஸ்டேடியத்தில் நடந்த 2-வது லீக்கில் மெக் லானிங் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் – ஸ்மிர்தி மந்தனா தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதின.
இதில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணியினர் தரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 223 ரன்கள் குவித்தனர். தொடக்க வீராங்கனைகளான ஷபாலி 84 ரன்களும், மெக் லானிங் 72 ரன்களும் எடுத்தனர். மரிசான் கேப் 17 பந்துகளில் 39 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து, 224 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணிக்கு தொடக்கம் சிறப்பாக இருந்தாலும், கேப்டன் மந்தனாவின் (35 ரன்கள்) விக்கெட்டுக்குப் பிறகு வந்த வீராங்கனைகள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர்.
இறுதியில் பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், டெல்லி அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டெல்லி அணி தரப்பில் அமெரிக்காவை சேர்ந்த தாரா நோரிஸ் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.
இந்நிலையில், இந்த ஆட்டத்தின் போது பீல்டிங் செய்த டெல்லி அணியின் வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ் பவுண்டரி லயனில் டான்ஸ் போட்டு பட்டையைக் கிளப்பிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

டெல்லி கேபிடல்ஸ் அணியின் துணை கேப்டனாக இருக்கும் ரோட்ரிக்ஸ், மைதானத்தில் இசை ஒலிக்கத் தொடங்கியபோது, பவுண்டரி லயனில் அருகே பீல்டிங் செய்து கொண்டிருந்தார். தயக்கமின்றி, அவர் பிரபலமான “ஃப்ளோஸ்” நடன அசைவை போட தொடங்கினார். இது உங்கள் கைகளையும் இடுப்பையும் எதிர் திசைகளில் ஆடுவதும், அதே நேரத்தில் உங்கள் கால்களை முறுக்குவதும் ஆகும்.
ஜெமிமா ரோட்ரிக்ஸ் நடனமடுவைதை பார்த்த ரசிகர்கள் வியந்து போனனர். மேலும் உற்சாகம் அடைந்த அவர்கள் கூச்சலிட்டனர். அவர் நடனமாடும் வீடியோ பதிவு செய்யப்பட்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ள நிலையில், அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
@JemiRodrigues Here she goes again…😍 #WPL2023 #RCBvsDC @wplt20 @IPL pic.twitter.com/c9vmxXvJv0
— Ambika Kusum (@ambika_acharya) March 5, 2023
- மெஸ்ஸியை புகழ்ந்த இளம் ரசிகர்… கோபத்தில் சீண்டிய ரொனால்டோ
கால்பந்து உலகில் முன்னணி நட்சத்திரமாக வலம் வருபவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. தற்போது இவர் சவுதி ப்ரோ லீக் கால்பந்து தொடரில் அல்-நாசர் அணிக்காக விளையாடி வருகிறார். இந்நிலையில், அல்-பாடின் அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் அல்-நாஸ்ர் 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இந்த ஆட்டத்திற்குப்பிறகு, அறைக்கு சுரங்கப்பாதை வழியில் திரும்பிய ரொனால்டோவிடம், இளம் ரசிகர் ஒருவர் ரொனால்டோவைக் காட்டிலும் மெஸ்ஸிதான் சிறந்த வீரர் எனக் கூறினார். இதனால் கோபம் அடைந்த ரொனால்டோ, அந்த ரசிகரைக் கடிந்துகொண்டு வேகமாக வெளியேறினார். இது குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் ரொனால்டோ அறைக்கு செல்லும் சுரங்கப்பாதையில் நுழையும் போது இளம் ரசிகர் “மெஸ்ஸி மிகவும் சிறந்தவர்” என்று கத்துவதைக் கேட்கலாம். ரொனால்டோ உடனடியாக மீண்டும் “அது எளிதான விளையாட்டு.” என்று கத்தி சீண்டுகிறார்.
Bro is pissed after 3-1 win 🤣🤣🤣🤣 never a team player pic.twitter.com/vf4CTZFqnB
— Dream⚜️ (@ParisianDream__) March 4, 2023
- தோனி பெயர், ஜெர்சி எண்ணை பேட்டில் செதுக்கிய வீராங்கனை – வைரல் போட்டோ
பெண்கள் பிரீமியர் லீக் தொடரில் நேற்று நடைபெற்ற 3-வது லீக் போட்டியில் உபி வாரியர்ஸ் – குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. இதில் போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து 170 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய உபி வாரியர்ஸ் அணி 19.5 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்து 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் உபி வாரியர்ஸ் அணி வீராங்கனை கிரன் நேவ்கிர் அரைசதத்தை கடந்து 53 (43) ரன்களில் கேட்ச் ஆகி வெளியேறினார். அவர் தனது பேட்டில் தோனியின் பெயரைக் குறிப்பிட்டு இருந்தார். அவரது பேட்டில் தோனியின் மற்றும் ஜெர்ஸி நம்பருடன் எம்.எஸ்.டி எனக் குறிப்பிடப்பட்டு இருந்தது. முன்னதாக, தான் ஒரு தீவிர தோனி ரசிகை என்றும், தோனியை முன்மாதிரியாகக் கருதி தான் கிரிக்கெட் விளையாடுவதாகவும் கிரன் நேவ்கிர் கூறியிருந்தார். இந்நிலையில், தோனி பெயர் மற்றும் ஜெர்ஸி எண் பொரித்துள்ள அவரது பேட்ட்டின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

- அகமதாபாத் டெஸ்டில் இருந்தும் கம்மின்ஸ் விலகல்: ஸ்மித் கேப்டனாக நீட்டிப்பு
இந்தியாவில் நடந்து வரும் பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் இந்தியாவும், 3வது போட்டியில் ஆஸ்திரேலியாவும் வென்றுள்ளன. இதனால், தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இதனையடுத்து, 4வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி குஜராத்தின் அகமதாபாத்தில் வருகிற 9ம் தேதி முதல் நடைபெற உள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு முன்னேற இப்போட்டி முக்கியம் வாய்ந்தது என்பதால் இந்திய வீரர்கள் தீவிரமாக செயல்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், 4வது மற்றும் கடைசி டெஸ்டில் இருந்தும் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் விலகியுள்ளார். அவரது அம்மா மார்த்தா மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு நோய்த்தடுப்பு சிகிச்சையில் இருக்கிறார். ஆதலால், டெல்லியில் நடந்த 2வது டெஸ்ட் போட்டிக்குப் பிறகு சிட்னி பறந்தார். இதனால், 3வது டெஸ்ட் போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் அணியை வழிநடத்தினார். தற்போது, கம்மின்ஸ் ஆஸ்திரேலியாவில் கூடுதலாக தங்க விரும்புகிறார். எனவே, 4வது மற்றும் கடைசி டெஸ்டிலும் ஸ்டீவ் ஸ்மித்தே அணியை வழிநடத்துவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவின் ஒருநாள் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட கம்மின்ஸ், அகமதாபாத் டெஸ்டைத் தொடர்ந்து இந்தியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் அணியை வழிநடத்துவாரா? என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. இதற்கிடையில், ஆஸ்திரேலிய அணியின் ஜே ரிச்சர்ட்சன் தொடையில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக நாதன் எல்லிஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
- ஐ.எஸ்.எல். கால்பந்து அரையிறுதி: நாளை தொடக்கம்
இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து (ஐ.எஸ்.எல்.) தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. 11 அணிகள் பங்கேற்ற இந்த தொடருக்கான அரையிறுதி ஆட்டங்கள் நாளை (செவ்வாய் கிழமை) முதல் தொடங்க உள்ளன. முதலாவது அரையிறுதியின் முதல் சுற்று ஆட்டத்தில் மும்பை- பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இப்போட்டி மும்பையில் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

ஐதராபாத்தில் வரும் 9ம் தேதி நடக்கும் இரண்டாவது அரையிறுதியில் முதல் சுற்று ஆட்டத்தில் ஏ.டி.கே. மோகன் பகான்- ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதையடுத்து 12ம் தேதி பெங்களூரில் முதல் அரையிறுதியின் 2-வது சுற்று ஆட்டமும், 13ம் தேதி கொல்கத்தாவில் இரண்டாவது அரையிறுதியில் 2-வது சுற்று ஆட்டமும் நடக்கிறது. இறுதிப் போட்டி, கோவாவில் 18ம் தேதி நடக்கிறது.
இந்தத் தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சென்னை அணி அரையிறுதிக்கு முன்னேறாமல் லீக் சுற்றுடன் வெளியேறியது குறிப்பிடத்தக்கது.
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெற https://t.me/ietamil