scorecardresearch

பும்ரா, ஸ்ரேயாஸ் ஃபிட்னஸ் அப்டேட்… இன்றைய டாப் 5 ஸ்போர்ட்ஸ் நியூஸ்

சர்வதேச கிரிக்கெட் அரங்கில் அடுத்த 10 ஆண்டுகளில் ஆதிக்கம் செலுத்தும் இளம் இந்திய வீரர் குறித்து ஆஸ்திரேலியாவின் முன்னாள் பிரபல அதிரடித் தொடக்க வீரர் மேத்யூ ஹைடன் கூறியுள்ளார்.

Top 5 Sports News Today 15 April 2023 In Tamil
Sports and Cricket news in tamil

Top 5 Sports News Of The Day in tamil: ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்’ விளையாட்டு செய்திகள் பக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். இன்றைய டாப் 5 விளையாட்டு செய்திகளை இங்கு பார்க்கலாம்.

  1. காதலி முன் சதம் அடித்து அசத்தல்: ஹாரி ப்ரூக் நெகிழ்ச்சி

16வது ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த ஐதரபாத் 20 ஓவர்கள் முடிவில் 228 ரன்கள் குவித்தது. தொடர்ந்து, 229 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி 205 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியுற்றது.

இந்நிலையில், இந்த ஆட்டத்தில் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ஐதராபாத் அணியின் தொடக்க வீரர் ஹாரி ப்ரூக் 55 பந்தில் சதம் அடித்து அசத்தினார். நடப்பு ஐபிஎல் தொடரில் அடிக்கப்பட்ட முதல் சதம் இதுவாகும்.

இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸ் முடிந்த பிறகு ஹாரி புரூக், தனது காதலி முன் சதம் அடித்தது குறித்து பேசினார். இதுகுறித்து அவர் கூறும்போது, ”எனது காதலி இங்கே இருக்கிறார். ஆனால் எனது குடும்பத்தினர் அனைவரும் ஓய்வுக்காக சென்றுவிட்டனர். அவர்கள் அனைவரும் எனது சதத்தை நினைத்து மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள்” என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.

  1. ஜஸ்பிரித் பும்ரா – ஷ்ரேயாஸ் ஐயர் ஃபிட்னஸ் அப்டேட்: பிசிசிஐ

கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு எடுத்து வரும் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, நியூசிலாந்தில் தனது முதுகில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அவர் இப்போது பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் (NCA) மறுவாழ்வு தொடங்கி உள்ளார் என்றும், நட்சத்திர பேட்டர் ஸ்ரேயாஸ் ஐயர் அடுத்த வாரம் முதுகில் அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்படுவார் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.

பும்ராவைப் பற்றிய அதிகாரப்பூர்வ அறிக்கையில், பிசிசிஐ, “அறுவைசிகிச்சை வெற்றிகரமாக இருந்தது. அவர் வலியின்றி இருக்கிறார். பும்ரா அறுவை சிகிச்சைக்கு ஆறு வாரங்களுக்குப் பிறகு தனது மறுவாழ்வைத் தொடங்க நிபுணர்களால் அறிவுறுத்தப்பட்டார். அதன்படி, அவர் தனது மறுவாழ்வு நிர்வாகத்தை பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் (NCA) நேற்று வெள்ளிக்கிழமை தொடங்கினார்.” என்று கூறியுள்ளது.

மறுபுறம், ஸ்ரேயாஸ் ஐயரைப் பற்றி கிரிக்கெட் வாரியம் பேசுகையில்,“ஸ்ரேயாஸ் ஐயருக்கு அடுத்த வாரம் கீழ் முதுகு பிரச்சினைக்கு அறுவை சிகிச்சை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அவர் இரண்டு வாரங்கள் அறுவை சிகிச்சை நிபுணரின் பராமரிப்பில் இருப்பார், அதன் பிறகு மறுவாழ்வுக்காக தேசிய கிரிக்கெட் அகாடமிக்குத் திரும்புவார்.” என்றும் கூறியுள்ளது.

  1. ‘அடுத்த 10 ஆண்டுகளில் கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தும் வீரர் இவர்தான்’: மேத்யூ ஹைடன் கணிப்பு

சர்வதேச கிரிக்கெட் அரங்கில் அடுத்த 10 ஆண்டுகளில் ஆதிக்கம் செலுத்தும் வீரர் குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் பிரபல அதிரடி தொடக்க வீரர் மேத்யூ ஹைடன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் பேசுகையில், “இந்திய அணியின் தொடக்க வீரர் சுப்மன் கில் மிக சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக திகழ்கிறார். அனைத்துவிதமான போட்டிகளிலும் அவர் அபாரமாக ஆடி வருகிறார்.

அவர் சமீபத்தில் டெஸ்ட்டில் 2 சதமும் ஒரு நாள் போட்டியில் 4 சதமும், 20 ஓவர் சர்வதேச போட்டியில் ஒரு சதத்தையும் அடித்தார். தற்போது ஐ.பி.எல். போட்டியிலும் அபாரமாக ஆடி வருகிறார். அடுத்த 10 ஆண்டுகள் வரை அவர் கிரிக்கெட் உலகில் ஆதிக்கம் செலுத்துவார் என்பதில் சந்தேகமில்லை.” என்று தெரிவித்துள்ளார்.

  1. பேஸ்பால் போட்டியில் ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு நடனம்: உற்சாகத்தில் டொரண்டோ ரசிகர்கள்

இயக்குநர் ராஜமவுலி இயக்கத்தில் வெளியாகிய ஆர்.ஆர்.ஆர் படத்தில் இடம் பெற்ற நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கார் விருதை பெற்றது. நடிகர்கள் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர். இணைந்து ஆடிய இந்த பாடல் உலகம் முழுவதும் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. அந்த பாடலுக்காக பல்வேறு நாடுகளில் தூதர்கள் மற்றும் பிரபலங்கள் நடனமாடிய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்நிலையில், டொரண்டோவில் பேஸ்பால் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ஒரு போட்டியின் இடையே நாட்டு நாட்டு பாடல் ஒளிபரப்பப்பட்டுள்ளது. இந்த பாடலுக்கு மைதானத்தில் போட்டியாளர்களை உற்சாகப்படுத்தும் நடன கலைஞர்கள் மாஸ்கட் உருவம் அணிந்த பொம்மைகளை அணிந்து நடனமாடிய வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

  1. பிரபல கால்பந்து வீரருடன் விவாகரத்து: பாதி சொத்தை கேட்ட மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி

மொராக்கோ நாட்டின் கால்பந்து பிரபலமாக வலம் வருபவர் அசரப் ஹக்கிமி. இவர் தனக்கு 19 வயதாக இருக்கும்போது 31 வயதான ஸ்பானிஷ் நடிகையும் மாடலுமான ஹிபா அபோக்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மூத்த மகனுக்கு 3 வயது, இளைய மகன் கடந்த ஆண்டு பிறந்துள்ளார். தற்போது அசரப்பிற்கு 24 வயதாகிறது, ஹிபா அபோக்கிற்கு 36 வயதாகிறது. ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்பு அசரப் ஹக்கிமி மீது கற்பழிப்பு குற்றச்சாட்டுகள் எழுந்தன. தற்போது இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில் அவரது மனைவி ஹிபா அபோக் விவாகரத்து கோரி மேல்முறையீடு செய்துள்ளார். மேலும், தனது கணவர் அசரப் ஹக்கிமியின் கோடிக்கணக்கான சொத்துகளில் பாதியை ஜீவனாம்சமாக கேட்டுள்ளார். கால்பந்து வீரர் அசரப் ஹக்கிமியும் தனது மனைவியின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டார். வேண்டுமானால் தன் சொத்து முழுவதையும் அவருக்கே கொடுப்பதாக கூறினார்.

ஆனால் அசரப் ஹக்கிமியின் பெயரில் உள்ள சொத்துக்களின் மதிப்பு நிர்ணயம் செய்யப்பட்டபோது நீதிமன்றம் அதிர்ச்சியடைந்தது. பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் மற்றும் ரியல் மாட்ரிட் போன்ற அணிகளுக்காக விளையாடிய அசரப் ஹக்கிமி, தனது தொழில் சாதனைகள், பிராண்ட் அம்பாசிடர்கள், ஸ்பான்சர்கள் மற்றும் பரிசுத் தொகை முழுவதையும் தனது தாயாருக்கு வழங்கி உள்ளார்.

மேலும் தான் வாங்கிய கட்டிடங்கள், வீடுகள், மனைகள் அனைத்தையும் தனது தாயார் பெயரில் பதிவு செய்து வைத்து உள்ளார்.இவை தவிர போட்டி கட்டணம் மற்றும் ஒப்பந்தங்கள் மூலம் கிடைத்த வருமானத்தில் 80 சதவீதத்தை தனது தாய் பாத்திமாவின் கணக்கில் டெபாசிட் செய்துள்ளார். இதனால் அசரப் ஹக்கீமிடம் ஒரு சென்ட் நிலம், கார், சொந்த உடைகள் கூட இல்லை என்பது நீதிமன்ற விசாரணையில் தெரியவந்துள்ளது. அசரப் தனது தாயார் பெயரில் வாங்கப்பட்ட சொத்துகளின் மதிப்பு மட்டும் 200 கோடி ரூபாய்க்கு மேல் ஆகும்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Tamil App.

Web Title: Top 5 sports news today 15 april 2023 in tamil