Top 5 Sports News Of The Day in tamil: ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்’ விளையாட்டு செய்திகள் பக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். இன்றைய டாப் 5 விளையாட்டு செய்திகளை இங்கு பார்க்கலாம்.
- டெல்லிக்கு புதிய கேப்டன்
10 அணிகள் களமாடும் 16வது ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் வருகிற 31-ம் தேதி முதல் தொடங்குகிறது. இந்த தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. இதனிடையே, கடந்த ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ரிஷப் பண்ட் கார் விபத்தில் படுகாயமடைந்து தற்போது குணமடைந்து வருகிறார். அவர் நடப்பு ஐபிஎல் தொடரில் விளையாடமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நடப்பு ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேட்பனாக டேவிட் வார்னர் நியமிக்கப்பட்டுள்ளார். துணை கேப்டனாக அக்சர் பட்டேல் செயல்படுவார். மேலும், டெல்லி அணியின் இயக்குனராக இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், பிசிசிஐ முன்னாள் தலைவருமான சவுரவ் கங்குலி செயல்படுவார் என்று டெல்லி அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.
- ஆர்.சி.பி-க்கு பின்னடைவு.. 3 கோடிக்கு வாங்கிய ஆல்-ரவுண்டர் திடீர் விலகல்
ஐபிஎல் 2023 தொடருக்கான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரூ அணி கடந்த இறுதியில் நடந்த மினி ஏலத்தில் இங்கிலாந்து ஆல்ரவுண்டரான வில் ஜாக்ஸை ரூ. 3.2 கோடி கொடுத்து வாங்கியது. இந்நிலையில், வங்கதேசத்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் விளையாடியபோது வில் ஜாக்சுக்கு அவரது தசையில் காயம் ஏற்பட்டது. பிறகு காயத்தை ஸ்கேன் செய்து பார்த்த மருத்துவர்கள், அவரை ஓய்வில் இருக்கமாறு அறிவுறுத்தியுள்ளனர். இதனால் அவர் ஐபிஎல் தொடரில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
வில் ஜாக்சுக்குப் பதிலாக நியூசிலாந்து அணி வீரர் மைக்கேல் பிரேஸ்வெல்லை அணியில் சேர்ப்பதற்கான பேச்சுவார்த்தையில் ஆர்.சி.பி நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. பெங்களூரு அணி அதன் தொடக்க ஆட்டத்தில் மும்பை இந்தியன்சை எதிர்கொள்கிறது. இப்போட்டியானது ஏப்ரல் 2-ம் தேதி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறுகிறது.
- 300% அதிகரித்த மகளிர் உலகக் கோப்பைப் பரிசுத் தொகை
2023ம் ஆண்டுக்கான ஃபிஃபா பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் வருகிற ஜூலை மாதம் முதல் நடக்கிறது. இந்த தொடரில் மொத்தம் 32 அணிகள் களமாடுகின்றன. இந்நிலையில், இந்த தொடருக்கான பரிசுத் தொகை 300% அதிகரித்து உள்ளது. அதாவது 15 கோடி (150 மில்லியன்) அமெரிக்க டாலர்கள் திரட்டப்பட்டுள்ளது. இது கடந்த 2015ல் இருந்ததை விட 10 மடங்கு அதிகமாகும்.
உலகெங்கிலும் உள்ள கால்பந்து வீராங்கனைகள், நடப்பு சாம்பியனான அமெரிக்கா, கனடா, பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் உள்ளிட்ட ஆடவ தேசிய அணிகளுடன் சம ஊதியம் மற்றும் சம மரியாதைக்காக போராடி வருகின்றனர். 2026 மற்றும் 2027 ஆம் ஆண்டு முறையே, அடுத்த உலகக் கோப்பைகளில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமமான பரிசுத் தொகையை இருக்கும் என்று ஃபிஃபா தலைவர் கியானி இன்ஃபான்டினோ கூறியுள்ளார். கடந்த ஆண்டு கத்தாரில் நடந்த உலகக் கோப்பையில் 32 ஆடவர் அணிகள் பங்கேற்ற நிலையில், சுமார் 440 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பரிசுத்தொகையாக அறிவிக்கப்பட்டது.
- 300 கோடி செலவில் புதிய ஸ்டேடியம்: பிசிசிஐ முடிவு
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) ரூ. 300 கோடி செலவில் வாரணாசியில் புதிய ஸ்டேடியத்தை கட்ட முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா மற்றும் செயலாளர் ஜெய் ஷா ஆகியோர் அடங்கிய குழு வாரணாசியில் உள்ள கஞ்சாரி பகுதிக்கு சென்று, ஸ்டேடியம் அமையவுள்ள இடத்தைப் பார்வையிட்டது. பிசிசிஐ-யின் நிதியுதவி திட்டத்திற்கான தளத்தை குழு அங்கீகரித்ததாக அறியப்படுகிறது. இதற்காக உத்தரபிரதே அரசு நிலத்தை குத்தகைக்கு வழங்குகிறது.
இந்த குழுவுடன் வந்த கோட்ட ஆணையர் கவுசல் ராஜ் சர்மா, "கஞ்சாரி பகுதியில் உள்ள நிலம் உத்தரபிரதேச கிரிக்கெட் சங்கத்திற்கு (யுபிசிஏ) உ.பி. அரசு 30 ஆண்டு குத்தகைக்கு வழங்குகிறது. குத்தகை காலத்தை 90 ஆண்டுகள் வரை நீட்டிக்க முடியும். பி.சி.சி.ஐ. 300 கோடி செலவில் ஸ்டேடியம் கட்ட இந்த திட்டத்திற்கு நிதியளிக்கிறது. 30,000 இருக்கைகள் கொண்ட உத்தேச அரங்கத்திற்கு, டெண்டர் செயல்முறை மூலம் இத்துறையில் நிபுணத்துவம் பெற்ற கட்டுமான பணிகளுக்கு திட்ட மேலாண்மை ஆலோசகர் மற்றும் ஒப்பந்ததாரரை பிசிசிஐ தேர்வு செய்யும். " என்று கூறியுள்ளார்.
- 'சூப்பர் ஃபிட் தோனி 2024 ஐ.பி.எல் தொடரிலும் ஆடலாம்': சுரேஷ் ரெய்னா
ஐ.பி.எல் தொடருக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் நீண்ட காலம் விளையாடியவர் இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா. சென்னையின் கேப்டன் எம்.எஸ் தோனி உடனான அவரது நட்பு மிகவும் நெருக்கமானது. எனினும், புதிய அணியை கட்டமைக்கும் விதமாக சுரேஷ் ரெய்னா சென்னை அணியில் இருந்து கழற்றி விடப்பட்டார். ஆனாலும், தோனி உடனான அவரது நட்பு எப்போதும் போல் நீடிக்கிறது.
நடப்பு ஐ.பி.எல் தொடருடன் கேப்டன் தோனி ஓய்வு பெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், அது குறித்து சுரேஷ் ரெய்னா பேசியுள்ளார். தற்போது லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரில் விளையாடி வரும் ரெய்னா, "தோனி ஐபிஎல் 2024-லிலும் விளையாட முடியும், அவர் சூப்பர் ஃபிட்டாக இருக்கிறார். நன்றாக பேட்டிங் செய்கிறார். இந்த ஆண்டு செயல்திறன் எப்படி இருக்கிறது என்பதைப் பொறுத்தது அது இருக்கும்.
அவரும் (அம்பதி) ராயுடுவும் ஒரு வருடமாக போட்டியில் விளையாடாததால் இது கொஞ்சம் சவாலாக இருக்கலாம். அணி மிகவும் வலுவாக இருப்பதாக நான் நினைக்கிறேன், நிறைய இளம் வீரர்கள் தரவரிசையில் வருகிறார்கள். (ருதுராஜ்) கெய்க்வாட், டெவோன் கான்வே, ஜட்டு (ரவீந்திர ஜடேஜா), (பென்) ஸ்டோக்ஸ், தீபக் சாஹர்… மேலும் இளம் மற்றும் ஆற்றல் மிக்க வீரர்கள் உள்ளனர். அவர்கள் எப்படி விளையாடுகிறார்கள் என்று பார்ப்போம்." என்று கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.