Advertisment

ஐசிசி தரவரிசையில் முன்னேறிய மந்தனா… இந்தியா - பாக்., அணிகள் மோதும் தேதி அறிவிப்பு…!

Top 5 cricket and ports news today: ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட்டில் பரம போட்டியாளர்களான இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் வருகிற அக்டோபர் 7-ம் தேதி நடக்கிறது.

author-image
WebDesk
New Update
top 5 sports news today 21 September 2022 in tamil

Smriti Mandhana

'தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்' விளையாட்டு செய்திகள் பக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். இன்றைய டாப் 5 விளையாட்டு செய்திகளை இங்கு பார்க்கலாம்.

Advertisment
  1. ஐசிசி கிரிக்கெட் தரவரிசை: இந்திய வீராங்கனை மந்தனா 2-வது இடத்துக்கு முன்னேற்றம்

சர்வதேச பெண்கள் டி-20 மற்றும் ஒருநாள் போட்டியின் அடிப்படையில் வீராங்கனைகளின் புதிய தரவரிசைப்பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று வெளியிட்டது. அதன்படி, டி-20 போட்டியின் பேட்டர்ஸ் தரவரிசையில் ஆஸ்திரேலிய வீராங்கனை பெத் மூனி (743 புள்ளிகள்) முதலிடத்தில் உள்ளார். இந்திய வீராங்கனை ஸ்மிர்தி மந்தனா (731 புள்ளி) இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் 111 ரன்கள் சேர்த்தன் மூலம் இரு இடம் முன்னேறி தனது சிறந்த தரநிலையாக 2-வது இடத்தை பிடித்து இருப்பதுடன் முதலிடத்தையும் நெருங்கி இருக்கிறார்.

publive-image

இந்தப் பட்டியலில், ஆஸ்திரேலிய வீராங்கனை மெக் லானிங் (725 புள்ளி) 3-வது இடத்துக்கும், நியூசிலாந்தின் சோபி டேவின் (715 புள்ளி) 4-வது இடத்துக்கும் சரிந்துள்ளனர்.

publive-image

ஒருநாள் போட்டி பேட்டர்ஸ் தரவரிசையைப் பொறுத்தவரை, ஆஸ்திரேலிய வீராங்கனை அலிசா ஹீலி முதலிடத்தில் தொடருகிறார். இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 91 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு உதவிய இந்திய வீராங்கனை மந்தனா 3 இடம் உயர்ந்து 7-வது இடத்தை பிடித்துள்ளார். இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 4 இடம் அதிகரித்து 9-வது இடத்தை அடைந்துள்ளார்.

  1. சர்வதேச டி20 கிரிக்கெட்டில் கே.எல்.ராகுல் புதிய சாதனை

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் விளையாடுகிறது. இத்தொடரின் முதலாவது போட்டி மொகாலியில் நேற்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில், தொடக்க வீரராக களமிறங்கிய கே.எல்.ராகுல் புதிய சாதனையைப் படைத்தார்.

இந்த ஆட்டத்தில் ராகுல் 35 பந்துகளில் 55 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக 2,000 ரன்களைக் கடந்த இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். இந்தச் சாதனையை ராகுல் தனது 58-வது இன்னிங்ஸ்சில் நிகழ்த்தினார்.

முன்னதாக இந்த சாதனையை நிகழ்த்திய வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் விராட் கோலி உள்ளார். கோலி தனது 56-வது சர்வதேச டி20 இன்னிங்ஸ்சில் 2,000 ரன்களை கடந்தார்.

மேலும் ரோஹித் சர்மா, ஹர்மன்ப்ரீத் கவுர், மிதாலி ராஜ் மற்றும் ஸ்மிருதி மந்தனா ஆகியோரும் சர்வதேச டி20 போட்டிகளில் 2 ஆயிரம் ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளனர்.

publive-image

ஒட்டுமொத்தமாக இந்த பட்டியலில் பாகிஸ்தான் வீரர்கள் பாபர் அசாம் மற்றும் ரிஸ்வான் முதல் இடத்தில் உள்ளனர். இருவரும் இந்த சாதனையை தங்களின் 52-வது இன்னிங்ஸில் படைத்துள்ளனர். இவர்களுக்கு அடுத்தபடியாக கோலி மற்றும் ராகுல் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  1. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023 - இறுதிப்போட்டி நடைபெறும் இடம் - ஐசிசி அறிவிப்பு

டி-20 மற்றும் ஒருநாள் போட்டிகளின் வரவால் டெஸ்ட் போட்டிகள் சர்வதேச அளவில் அதிகம் விளையாடப்படுவதில்லை. இப்படியே போனால் டெஸ்ட் போட்டிகள் விளையாடப்படுவது மெதுமெதுவாக குறைந்து அழிந்துவிடும் என பீதியடைந்த ஐசிசி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை கடந்தாண்டில் அறிமுகம் செய்தது. அதன்படி, டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் உள்ளூர் வெளியூர் அடிப்படையில் டெஸ்ட் போட்டிகளில் விளையாட வேண்டும். இறுதியில் புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் சாம்பியனுக்கான இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தும்.

அந்த வகையில், முதலாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் இங்கிலாந்தில் உள்ள சவுத்தம்டனில் விளையாடின. இதில் இந்திய அணியை வீழ்த்தி நியூசிலாந்து முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை முத்தமிட்டது.

இந்நிலையில் இரண்டாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிபோட்டியில் விளையாட அனைத்து அணிகளும் தீவிரமாக விளையாடி வருகின்றனர். தற்போது இந்த பட்டியலில் ஆஸ்திரேலியா முதல் இடத்திலும், தென் ஆப்பிரிக்கா 2வது இடத்திலும், இலங்கை 3வது இடத்திலும், இந்தியா 4வது இடத்திலும், பாகிஸ்தான் 5 வது இடத்திலும் உள்ளனர்.

publive-image

இந்த நிலையில் தான், 2023 மற்றும் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர்களுக்கான இறுதிப்போட்டி நடைபெறும் மைதானங்களை ஐசிசி அறிவித்துள்ளது. அதன்படி, 2023 க்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிபோட்டி ஜூன் மாதம் ஓவல் மைதானத்திலும், 2025க்கான இறுதிப்போட்டி லார்ட்ஸ் மைதானத்திலும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  1. ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட்: இந்திய அணி அறிவிப்பு

ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டித் தொடர் வருகிற வரும் அக்டோபர் 1-ம் தேதி முதல் வங்க தேசத்தில் நடைபெற உள்ளது. அந்த நாட்டில் உள்ள சில்ஹெட் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் அனைத்துப் போட்டிகளும் நடக்கிறது. இத்தொடரில் இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம், தாய்லாந்து, இலங்கை, மலேசியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் மோதுகின்றன.

இந்த நிலையில், ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டிதொடருக்கான ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணி வீராங்கனைகள் விபரம் பின்வருமாறு:

ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா, தீப்தி ஷர்மா, ஷஃபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், சபினேனி மேகனா, ரிச்சா கோஷ், சினே ராணா, தயாளன் ஹேமலதா, மேகனா சிங், ரேணுகா தாகூர், பூஜா வஸ்த்ரகர், ராஜேஸ்வரி கயக்வாட், ராதா யாதவ், கே.பி. நவ்கிரே ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

  1. மகளிர் ஆசிய கோப்பை: இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதல்

ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டித் தொடர் வருகிற வரும் அக்டோபர் 1-ம் தேதி முதல் வங்க தேசத்தில் நடைபெற உள்ள நிலையில், அதற்கான அட்டவணை வெளியாகியுள்ளது.

இந்நிலையில், கிரிக்கெட்டில் பரம போட்டியாளர்களான இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் வருகிற அக்டோபர் 7-ம் தேதி நடக்கிறது.

இந்திய அணியின் போட்டி விபரம் பின்வருமாறு:

அக்டோபர் 1-ம் தேதி - இந்தியா, இலங்கை
அக்டோபர் 3-ம் தேதி - இந்தியா, மலேசியா
அக்டோபர் 4-ம் தேதி - இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம்
அக்டோபர் 7-ம் தேதி - இந்தியா, பாகிஸ்தான்
அக்டோபர் 8-ம் தேதி - இந்தியா, வங்காளதேசம்
அக்டோபர் 10-ம் தேதி - இந்தியா, தாய்லாந்து.

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Sports Cricket Indian Cricket Team Kl Rahul Indian Cricket Tamil Cricket Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment