Advertisment

'உலகின் நம்பர் ஒன் நான்தான், கோலி இல்லை': பாக்,. வீரர் பேச்சு… டிரஸ்ஸிங் ரூமுக்கு டிராவிட் பெயர்… டாப் 5 ஸ்போர்ட்ஸ் நியூஸ்!

'50 ஓவர் கிரிக்கெட்டில் நான்தான் உலகின் நம்பர்-1, விராட் கோலி எனக்குப் பின்னால் இருக்கிறார்' என்று பாகிஸ்தான் வீரர் குர்ரம் மன்சூர் கூறியுள்ளார்.

author-image
WebDesk
New Update
Top 5 sports news today, 25 January 2023 in tamil

Sports and Cricket News in tamil

Top 5 Sports News Of The Day in tamil: ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்’ விளையாட்டு செய்திகள் பக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். இன்றைய டாப் 5 விளையாட்டு செய்திகளை இங்கு பார்க்கலாம்.

Advertisment
  1. ஆஸி,. ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டிக்கு முன்னேறிய சானியா மிர்சா - ரோகன் போபண்ணா இணை

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் இந்தியா சார்பில் கலப்பு இரட்டை பிரிவில் முன்னனி வீராங்கனை சானியா மிர்ஸாவும், ரோகன் போபண்ணாவும் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இதில் நேற்று முன்தினம் நடைபெற்ற 2-வது சுற்று ஆட்டத்தில் அரியெல் பெஹர்(உருகுவே)-மகோட்டோ நினொமியா(ஜப்பான்) ஜோடியுடன் மோதிய சானியா-ரோகன் போபண்ணா ஜோடி 6-4, 7-6 (11-9) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதிக்குள் நுழைந்தனர்.

இதனைத்தொடர்ந்து, கால் இறுதியில் விளையாட இருந்த ஜெலேனா ஒஸ்டாபென்கோ-டேவிட் வேகா ஹெர்னாண்டஸ் ஜோடி வாக் ஓவர் கொடுத்து வெளியேறியதால் சானியா மிர்ஸா-ரோகன் போபண்ணா அரை இறுதிக்குள் நுழைந்தனர்.

இந்நிலையில், இன்று நடந்த அரையிறுதி ஆட்டத்தில் டெசிரே க்ராவ்சிக் மற்றும் நீல் ஸ்குப்ஸ்கி இணையை சானியா மிர்ஸா-ரோகன் போபண்ணாஇணை எதிர்கொண்டது. மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டம் சுமார் 1 மணி 52 நிமிடங்கள் நீடித்தது. இறுதியில் டெசிரே க்ராவ்சிக் மற்றும் நீல் ஸ்குப்ஸ்கி இணையை சானியா மிர்ஸா, ரோகன் போபண்ணா ஜோடி 7-6(5), 6-7(5), 10-6 என்ற செட் கணக்கில் வீழ்த்தி கலப்பு இரட்டையர் பிரிவில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்த இறுதிபோட்டி வருகிற 28ம் தேதி நடைபெறுகிறது.

  1. '50 ஓவர் கிரிக்கெட்டில் நான்தான் உலகின் நம்பர்-1, கோலி எனக்குப் பின்னால் தான்' - பாகிஸ்தான் வீரர் குர்ரம் மன்சூர்

'50 ஓவர் கிரிக்கெட்டில் நான்தான் உலகின் நம்பர்-1, விராட் கோலி எனக்குப் பின்னால் இருக்கிறார்' என்று பாகிஸ்தான் வீரர் குர்ரம் மன்சூர் கூறியுள்ளார்.

பாகிஸ்தானிய யூடியூப் பிரபலமான நாதிர் அலியின் பாட்காஸ்டில் பேசியுள்ள குர்ரம் மன்சூர், “நான் என்னை விராட் கோலியுடன் ஒப்பிடவில்லை. உண்மை என்னவெனில், 50 ஓவர் கிரிக்கெட்டில், டாப்-10ல் யார் இருந்தாலும், நான்தான் உலகின் நம்பர் 1. ஒவ்வொரு 6 இன்னிங்ஸிலும் சதம் அடிப்பதால், கோலி எனக்குப் பின்னால் தான் இருக்கிறார். நான் ஒவ்வொரு 5.68 இன்னிங்ஸிலும் சதம் அடிக்கிறேன். இது உலக சாதனை. கடந்த 10 ஆண்டுகளில், எனது சராசரி 53, லிஸ்ட் ஏ கிரிக்கெட்டைப் பொருத்தவரை நான் உலகில் ஐந்தாவது இடத்தில் உள்ளேன்.

publive-image

நானும் கடந்த 48 இன்னிங்ஸ்களில் 24 சதங்கள் அடித்துள்ளேன். 2015 முதல் இப்போது வரை, பாகிஸ்தானுக்காக யார் ஓபன் செய்திருந்தாலும், அவர்களில் நான் இன்னும் முன்னணி வீரராகவே இருக்கிறேன். தேசிய டி20யில் அதிக சதம் அடித்தவரும், சதம் அடித்தவரும் நானே. ஆனாலும் நான் புறக்கணிக்கப்படுகிறேன். என்னிடம் 8-9 சாதனைகள் (லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில்) உள்ளன." என்று அவர் கூறியுள்ளார்.

36 வயதான பாகிஸ்தான் வீரர் குர்ரம் மன்சூர் 16 டெஸ்ட், 7 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில், முதல் தர போட்டிகளில் 12,000 ரன்களுக்கும் அதிகமான ரன்களையும், லிஸ்ட்-ஏ கிரிக்கெட்டில் கிட்டத்தட்ட 8,000 ரன்களையும் எடுத்துள்ளார். எனினும், கடைசியாக 2016ல் தான் அவர் பாகிஸ்தானுக்காக விளையாடினார்.

மறுபுறம் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் ஏற்கனவே பல சாதனைகளை முறியடித்துள்ளார். இப்போது அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த சச்சின் டெண்டுல்கரின் (49) சாதனையை சமன் செய்ய இன்னும் மூன்று சதங்கள் மட்டுமே தேவை. தவிர, சமகால கிரிக்கெட் வீரர்களில் தலைசிறந்த வீரராக திகழ்பவர் இந்தியாவின் முன்னாள் கேப்டன் விராட் கோலி.

publive-image

கோலிக்கு என இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். குர்ரம் மன்சூர் வசிக்கும் பாகிஸ்தானிலும் கூட அவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளனர். கடந்த 3 வருடங்களாக சரியான ஃபார்மில் இல்லாத அவர் கடந்த ஆசிய கோப்பையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக சதம் அடித்து மீண்டும் ஃபார்முக்கு திரும்பினார்.

மேலும், கோலி கடைசியாக விளையாடிய 7 ஒருநாள் போட்டிகளில் 3 சதங்களை அடித்து மிரட்டியுள்ளார். 3 வடிவிலான கிரிக்கெட்டிலும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்த கூடிய இவரை உலகின் தலைசிறந்த வீரர் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில், பாகிஸ்தான் வீரர் குர்ரம் மன்சூர் கோலியை விட நான் தான் சிறந்த வீரர் என கூறியுள்ளது மிகவும் வேடிக்கையாக உள்ளது.

  1. தொடரை வென்ற இந்தியா… கேப்டன் ரோகித் காட்டம் ஏன்?

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்தியா 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி தொடரை வென்றது. நேற்று மத்திய பிரதேச மாநிலம் இந்தோரில் நடந்த கடைசி மற்றும் 3வது ஒருநாள் போட்டியில் இந்திய கேப்டன் ரோகித சர்மா சதம் விளாசி 101 ரன்கள் எடுத்தார். தொடக்க வீரர் சுப்மான் கில்லுடன் இணைந்து 212 ரன்கள் வரை சேர்த்தார். இந்த ஆண்டில் இந்திய தொடக்க ஜோடி குவித்த அதிகபட்ச ரன்கள் இதுவாகும்.

கேப்டன் ரோகித் இந்த ஆட்டத்தில் சதம் விளாசியதன் மூலம், 3 ஆண்டுகளுக்குப்பிறகு தனது 30-வது ஒருநாள் சதத்தை பதிவு செய்தார். அவர் கடைசியாக கடந்த 19 ஜனவரி 2020 அன்று பெங்களூரில் உள்ள எம். சின்னசாமி ஸ்டேடியத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒருநாள் போட்டியில் தான் சதம் அடித்திருந்தார். மேலும், ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் விளாசி வீரர்கள் பட்டியல் இந்திய வீரர்கள் சச்சின் டெண்டுல்கர் (49), விராட் கோலி (46) ஆகியோருக்குப் பிறகு 3வது இடத்தையும் பிடித்தார்.

publive-image

இந்நிலையில், இந்தியா தொடரைக் கைப்பற்றி பெரிய வெற்றி பெற்றாலும் கேப்டன் ரோகித் செய்தியாளர்கள் சந்திப்பில் கொதித்தெழுந்தது சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் ரோகித் தனது 30வது ஒருநாள் சதத்தை விளாசிய போது, இது ஜனவரி 2020 க்குப் பிறகு அவர் அடிக்கும் முதல் சதம் என்ற புள்ளிவிவரத்தை கிரிக்கெட்டை ஒளிபரப்பிய 'ஸ்டார் ஸ்போர்ட்ஸ்' வெளியிட்டது. இந்த புள்ளிவிவரம் உண்மையாக இருந்தாலும், அது சரியான கண்ணோட்டத்தை கொடுக்கவில்லை என்று ரோகித் தனது அதிருப்தியை வெளிப்படுத்தி கோபமடைந்துள்ளார்.

நேற்றைய ஆட்டத்திற்குப் பிறகான செய்தியாளர் சந்திப்பில் பேசிய கேப்டன் ரோகித், "மூன்று ஆண்டுகளில் முதல் சதத்தைப் பொறுத்தவரை, நான் மூன்று ஆண்டுகளில் 12 (17) ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளேன். மூன்று வருடங்கள் என்பது நிறைய நாட்கள். எனவே, என்ன நடக்கிறது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இது ஒளிபரப்பில் காட்டப்பட்டது என்று எனக்குத் தெரியும். ஆனால், நீங்கள் சில நேரங்களில் அந்த விஷயத்தையும் கவனிக்க வேண்டும். ஒளிபரப்பாளரும் சரியானதைக் காட்ட வேண்டும்." என்று கடிந்து கொண்டார்.

  1. டிரஸ்ஸிங் ரூமுக்கு டிராவிட் பெயர்

நியூசிலாந்துக்கு கடைசி மற்றும் 3வது ஒருநாள் போட்டியில் இந்திய தொடக்க வீரர் சுப்மான் கில் சதம் விளாசி அசத்தினார். கேப்டன் ரோகித்துடன் சிறப்பான ஜோடியையும் அமைத்தார். 212 ரன்கள் சேர்த்த இந்த ஜோடியில் ரோகித் 101 ரன்களும், கில் 112 ரன்களும் எடுத்தனர்.

இந்த ஆட்டத்தில் இந்தியா 90 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது. இந்த வெற்றியைத் தொடர்ந்து, கில் மற்றும் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட், அணியின் வெற்றியைப் பற்றி ஃப்ரீவீலிங் சேட்டிங்கில் ஈடுபடும் வீடியோவை பிசிசிஐ வெளியிட்டது. அதில், நியூசிலாந்தில் நடந்த உலகக் கோப்பையில் கில் மற்றும் இந்திய U-19 அணிக்கு டிராவிட் பயிற்சியாளராக இருந்தபோது, ​​2017 ஆம் ஆண்டு வரையிலான கிரிக்கெட் பயணத்தை இருவரும் பகிர்ந்து கொண்டனர். வெற்றி பெற்ற அணியின் துணைக் கேப்டனாக இளம் வீரர் இருந்தார். இருவரும் இந்தியா ‘ஏ’ அணியுடன் அந்தந்த காலகட்டங்களில் ஒன்றாக இணைந்து பணியாற்றியுள்ளனர்.

publive-image

கில்லின் கிரிக்கெட் பயணத்தை நெருக்கமாகப் பார்த்த டிராவிட், சீனியர் அணியுடன் கில்லின் சமீபத்திய ஆட்டங்கள் குறித்து இருவரும் உரையாடியபோது, ​​மூத்த அணியுடன் அவரது அற்புதமான செயல்பாடுகளைப் பாராட்டினார். வீடியோவின் முடிவில், கில், இந்தூரில் உள்ள ஹோல்கர் ஸ்டேடியத்தில் மூன்றாவது ஒருநாள் போட்டிக்கான இடத்தில் டிராவிட்டிற்காக செய்த ஒரு குறிப்பிட்ட சைகையை சுட்டிக்காட்டினார்.

publive-image

2015 ஆம் ஆண்டில், இந்தூரில் உள்ள ஹோல்கர் ஸ்டேடியத்தில் உள்ள டிரஸ்ஸிங் ரூமுக்கு டிராவிட்டின் பெயர் சூட்டப்பட்டது. "உங்கள் பெயருடன் டிரஸ்ஸிங் அறைக்குள் நுழைவது எப்படி உணர்கிறது?" கில் டிராவிட்டிடம் கேட்டார். அதற்கு பதிலளித்த அவர் சிரிப்பை வெளிப்படுத்தினார். பின்னர் 'அதற்காக நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். ஆனால் அது சங்கடமாக இருந்தது' என்றும் கூறினார்.

publive-image

"அது நன்றாக இருக்கிறது. பல ஆண்டுகளாக நான் பல மக்களிடமிருந்து பெற்ற அனைத்து அன்பிற்கும் நீங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறீர்கள். இந்த நாட்டில் இந்த விளையாட்டை விளையாடுவது ஒரு பாக்கியம். நீங்கள் பெறும் அன்பு தனித்துவமானது மற்றும் திறமையைப் பெற்றதற்கு நான் அதிர்ஷ்டசாலி. கிரிக்கெட் விளையாட, நீண்ட நேரம் அதை செய்ய முடிந்தது.

நானும் சில நேரங்களில் சங்கடமாக உணர்கிறேன். ஆனால் நீங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக உணர்கிறீர்கள்" என்று டிராவிட் அந்த வீடியோவில் கூறுகிறார்.

  1. குத்துச்சண்டை ஜாம்பவான் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு

குத்துச்சண்டை ஜாம்பவான் வீரர் அமெரிக்காவின் மைக் டைசன் (வயது 56), 1987-ம் ஆண்டு முதல் 1990-ம் ஆண்டு வரை உலக ஹெவிவெயிட் சாம்பியனாக வலம் வந்தவர். இவர் 1989ல் முதல் மனைவியான நடிகை ராபின் கிவென்சை விவாகரத்து செய்தார். பிறகு 2வது மனைவி மோனிகா டர்னர் 2003ல் விவாகரத்து செய்தார். தற்போது 3வது மனைவி லகிஹா ஸ்பைசருடன் வசித்து வருகிறார்.

இந்த நிலையில், 32 ஆண்டுகளுக்கு முன்பு, டைசன் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டார் என பெண் ஒருவர் புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். இதுகுறித்து அந்த பெண் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் தேதி எதுவும் குறிப்பிடாமல், 1990-ம் ஆண்டில் நடந்தது என்று மட்டும் தெரிவித்து உள்ளார். இதே காலகட்டத்தில் அழகி போட்டியில் கலந்து கொண்ட டிசைரீ வாஷிங்டன் என்பவரும் டைசனுக்கு எதிராக பாலியல் பலாத்கார புகார் கூறியிருந்தார். இதையடுத்து, 1992-ம் ஆண்டு பிப்ரவரி 10-ந்தேதி டைசனுக்கு எதிராக தீர்ப்பு வந்தது. அதில், அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

publive-image

இந்நிலையில், தற்போது மற்றொரு பெண் அவர் மீது பாலியல் வன்கொடுமை வலக்கை பதிவு செய்து ரூ.40.82 கோடி நஷ்ட ஈடு கேட்டுள்ளார். அந்த பெண் அளித்துள்ள புகாரில், 'டைசனின் லிமோசின் வகை ஆடம்பர காருக்குள் அப்போது சென்றேன். உடனடியாக டைசன் என்னை நெருங்கி தொட்டார். முத்தமிட முயன்றார். நான் பல முறை வேண்டாம் என கூறினேன். அதை நிறுத்தி கொள்ளுங்கள் என மறுத்தேன். ஆனால், அவர் தொடர்ந்து என்னை தாக்கினார். எனது ஆடைகளை இழுத்து, களைந்து, பலாத்கார வன்முறையில் ஈடுபட்டார்' என்று தெரிவித்துள்ளார்.

மேலும், தனது பெயரை வெளியிட வேண்டாம் என்றும் கோரியுள்ள அவர், அது மனதளவில், உடல்ரீதியாக நிச்சயம் ஆபத்து ஏற்படுத்தும் என்றும், தனிப்பட்ட முறையில் பாதிப்பு ஏற்படுத்த கூடும் என்றும் அச்சம் தெரிவித்துள்ளார்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெறhttps://t.me/ietamil

India Vs New Zealand Virat Kohli Sports Rohit Sharma Cricket Indian Cricket Team Rahul Dravid Shubman Gill Sania Mirza
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment