scorecardresearch

கில் அல்லது ராகுல் ? 3வது டெஸ்டில் யாருக்கு வாய்ப்பு?: ரோகித் சர்மா பதில்… இன்றைய டாப் 5 ஸ்போர்ட்ஸ் நியூஸ்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டெஸ்டில் தொடக்க வீரராக ஷுப்மன் கில் அல்லது கே.எல். ராகுல் ஆகிய இருவரில் யார் களமிறங்குவார்? என்ற கேள்விக்கு கேப்டன் ரோகித் பதில் அளித்துள்ளார்.

Top 5 Sports News Today 28 February 2023 In Tamil
Top 5 cricket and sports news today

Top 5 Sports News Of The Day in tamil: ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்’ விளையாட்டு செய்திகள் பக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். இன்றைய டாப் 5 விளையாட்டு செய்திகளை இங்கு பார்க்கலாம்.

  1. கடைசி நாள் பயிற்சியில் கே.எல் ராகுல் மிஸ்ஸிங்; ரோகித்துடன் இடைவிடா பயிற்சியில் கில்

இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான 4 போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நாக்பூர் மற்றும் டெல்லியில் நடந்த 2 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் தொடரில் 2-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ளது. இந்த நிலையில், இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி நாளை (புதன்கிழமை) காலை 9:30 மணிக்கு இந்தூர் மைதானத்தில் தொடங்குகிறது.

இந்நிலையில், இன்று நடைபெற்ற வலைப் பயிற்சியில் இந்திய கேப்டன் ரோகித் சர்மவுடன் இளம் வீரர் ஷுப்மான் கில் இடைவிடா பயிற்சியில் ஈடுபட்டார். ஆனால், தொடக்க வீரர் கே.எல் ராகுல் பயிற்சியில் இல்லை. அவர் நேற்றைய வலைப் பயிற்சியின் பயிற்சி மேற்கொண்டார். இதனிடையே, இந்திய வீரர்கள் மேற்கொண்ட பீல்டிங் பயிற்சியின் போது கில் முன்னாள் இந்திய கேப்டன் விராட் கோலியுடன் ஸ்லிப் கேட்ச்சிங் செஷனில் பங்கேற்று இருந்தார். எனவே, நாளை முதல் தொடங்கும் போட்டியில் அவர் தொடக்க வீரராக களமாடுவார் என்று தெரிகிறது.

  1. ஃபிஃபா சிறந்த கால்பந்து வீரர்: மெஸ்சி வெற்றி

சர்வதேச கால்பந்து சங்க கூட்டமைப்பான (ஃபிஃபா) சிறப்பாக செயல்படும் கால்பந்து வீரர்களுக்கு, ஆண்டுதோறும் சிறந்த வீரருக்கான விருதை வழங்கி வருகிறது. இந்நிலையில், கடந்த ஆண்டுக்கான ஃபிஃபா-வின் சிறந்த வீரர் விருதுக்கான இறுதிப் போட்டியாளர்களாக மெஸ்சி, கைலியன் எம்பாப்பே மற்றும் கரீம் பென்சிமா அறிவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில், ஃபிஃபா சிறந்த கால்பந்து வீரர் மற்றும் வீராங்கனைகளின் பெயர்கள் அறிவிக்கப்பட்டன. இதில் 2022-ம் ஆண்டின் சிறந்த கால்பந்து வீரருக்கான விருதை அர்ஜென்டினாவின் லியோனெல் மெஸ்சி தட்டி சென்றார். சிறந்த வீரருக்கான போட்டியில் ஃபிரெஞ்சு முன்கள வீரர்களான கிலியன் எம்பாப்பே, கரீம் பென்சமாவை தோற்கடித்து இந்த விருதை 35 வயதான மெஸ்ஸி வென்றுள்ளார்.

கடந்த ஆண்டு கத்தாரில் நடந்த 22-வது உலக கோப்பை கால்பந்து போட்டியில் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி சாம்பியன் பட்டம் வென்றது. 4-2 என்ற கோல் கணக்கில் பிரான்சை வீழ்த்தி 36 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கோப்பையை முத்தமிட்டது. மெஸ்சி 7 கோல்களுடன், ஒட்டுமொத்தத்தில் சிறப்பாக செயல்பட்டதற்கான சிறந்த வீரருக்குரிய தங்க பந்து விருதை தட்டிச் சென்றது குறிப்பிடத்தக்கது.

  1. வெறும் 1 ரன்னில் வெற்றியை பறிகொடுத்த இங்கிலாந்து</strong>

நியூசிலாந்து மண்ணில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடிய இங்கிலாந்து அணி, முதல் டெஸ்ட்டில் அபார வெற்றி பெற்றது. கடந்த 24-ம் தேதி தொடங்கிய 2-வது மற்றும் கடைசி டெஸ்ட்டில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 8 விக்கெட் இழப்பிற்கு 435 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. தொடர்ந்து, முதல் இன்னிங்சில் விளையாடிய ய நியூசிலாந்து 209 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஃபாலோ ஆன் கொடுத்தது.

2-வது இன்னிங்சில் களமிறங்கிய நியூசிலாந்து 483 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியது. இதனால் 258 ரன்கள் வெற்றி இலக்காக இங்கிலாந்து நிர்ணயிக்கபட்டடது. இந்த இலக்கை துரத்தியஇங்கிலாந்து 80 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அப்போது பென் ஸ்டோக்ஸ், ஜோ ரூட் ஜோடி சிறப்பாக விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். எனினும், இங்கிலாந்து 201 ரன்கள் எடுத்த போது பென் ஸ்டோக்சும், 202 ரன் எடுத்தபோது ரூட்-வும் அவுட் ஆகி வெளியேறினர்.

அணியின் ஸ்கோர் 256 ரன்களாக இருந்த நிலையில் வெற்றி பெற 2 ரன்களும் டிரா ஆக 1 ரன்னும் தேவைப்பட்டது. இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுவிடும் என அனைவரும் கருதினர். அப்போது, வக்னர் வீசிய பந்தில் ஆண்டர்சன் கீப்பரிடம் கேட் மூலம் அவுட் ஆகி அதிர்ச்சியளித்தார். இங்கிலாந்து 256 ரன்களில் ஆல் அவுட் ஆகியதால் நியூசிலாந்து 1 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. டெஸ்ட் கிரிக்கெட்டில் 1 ரன் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றிபெற்றது இன்ப அதிர்ச்சியாக அமைந்தது.

இந்த வெற்றியை நியூசிலாந்து வீரர்களும், மைதானத்தில் இருந்த ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். மேலும், கிரிக்கெட் ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வெற்றியைக் கொண்டாடியும் வருகின்றனர். தொடரும் 1-1 என்ற புள்ளிகள் கணக்கில் சமனில் முடிந்தது.

  1. சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய பண்ட்

இந்திய அணியின் முன்னணி இளம் அதிரடி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் கடந்த இறுதியில் நடந்த சாலை விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். தற்போது சிகிச்சை பெற்று வரும் அவர் காயங்கள் குணமடைந்து மீண்டு வருகிறார். எனினும், அவரால் ஐ.பி.எல் மற்றும் 50 ஓவர் உலகக் கோப்பையில் பங்கேற்க முடியாது.

இந்த கடினமான சூழ்நிலையில் கூட அவர் தனது 6 வயது ரசிகரின் ஆசையை நிறைவேற்றி அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார். அவர் வாழ்த்து கூறியுள்ள ட்விட்டர் பதிவில் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அந்தப் பதிவில் ரிஷப் பண்டின் ட்விட்டர் பக்கத்தை டேக் செய்த அயான் என்கிற சிறுவனின் தந்தை, “என்னுடைய மகன் உங்களுடைய தீவிர ரசிகன். உங்களைப் போன்றே இடதுகை பேட்ஸ்மேன் தான். மேலும் எதிர்காலத்தில் உங்களைப் போன்ற கிரிக்கெட் வீரராக மாற வேண்டும் என்று விரும்புகிறார்.

அதுமட்டுமின்றி நீங்கள் குணம் அடைய வேண்டும் என டிசம்பர் 30-ம் தேதி முதல் பிரார்த்தனை செய்து வருகிறார். இன்று அவனுக்கு 6-வது பிறந்தநாள் உங்களால் அவனுக்கு வாழ்த்து சொல்ல முடியுமா? என்று ட்விட்டரில் கேட்டுக் கொண்டிருந்தார். அதேபோன்று தனது மகன் விளையாடும் வீடியோவையும் அவர் பகிர்ந்து இருந்தார்.

அந்தப் பதிவிற்கு பதிலளித்த ரிஷப் பண்ட் ” பிறந்தநாள் வாழ்த்துக்கள் அயன் “, “இந்த வருடம் உனக்கு சிறப்பாக அமையட்டும்” என்று அவரே தனது ட்விட்டர் பக்கத்தில் அந்த சிறுவனை வாழ்த்தி ஒரு பதிவினை பகிர்ந்துள்ளார். தற்போது இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

  1. கில் அல்லது ராகுல் ? 3வது டெஸ்டில் யாருக்கு வாய்ப்பு? ரோகித் சர்மா பதில்

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3-வது டெஸ்ட், இந்தூரில் நாளை தொடங்குகிறது. இந்நிலையில், இந்த போட்டியில் தொடக்க வீரராக ஷுப்மன் கில் அல்லது கே.எல். ராகுல் ஆகிய இருவரில் யார் களமிறங்குவார்? என்கிற கேள்விக்கு கேப்டன் ரோகித் சர்மா பதில் அளித்ததார்.

“கடினமான தருணத்தை எதிர்கொள்ளும் வீரர்களுக்கு அவர்கள் திறமையை நிரூபிக்க வாய்ப்புகள் வழங்கப்படும்.துணை கேப்டனாக இல்லாமல் போனாலும் ஒன்றுமில்லை. இதற்கு முன்பு கே.எல். ராகுல் துணை கேப்டனாக இருந்தார். துணை கேப்டன் பதவியைப் பறித்தது எவ்வித செய்தியையும் குறிக்கவில்லை .

டாஸ் நிகழ்வின்போது அணியில் இடம்பெறும் 11 பேரின் பெயர்களையும் கூற விரும்புகிறேன். ஏனெனில் சிலசமயம் கடைசி நேரத்தில் காயங்கள் ஏற்படலாம். எங்கள் அணியில் மேல்வரிசை பேட்டர்களிடமிருந்து நிறைய ரன்கள் வரவில்லை. அடுத்த ஒரு சில ஆட்டங்களில் அவர்கள் பெரிய அளவில் ஸ்கோர் எடுக்கலாம். ஷுப்மன் கில்லா கே.எல். ராகுலா எனக் கேட்கிறீர்கள். ஷுப்மன் கில் மட்டுமல்ல இந்திய அணியில் இடம்பெற 17-18 பேரும் போட்டியிடுகிறார்கள்” என்று கேப்டன் ரோகித் சர்மா கூறியுள்ளார்.

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Tamil App.

Web Title: Top 5 sports news today 28 february 2023 in tamil

Best of Express