scorecardresearch

மெஸ்ஸி vs எம்பாப்பே, போர்ச்சுகலுக்கு புதிய பயிற்சியாளர், டி20 எதிர்காலம் பற்றி ரோகித் ஓபன் டாக்… இன்றைய டாப் 5 ஸ்போர்ட்ஸ் செய்திகள்

பலோன் டி’ ஆர் விருதை கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி 7 முறை வென்றுள்ளார். ஆனால், எம்பாப்பே ஒருமுறை கூட வென்றதில்லை.

மெஸ்ஸி vs எம்பாப்பே, போர்ச்சுகலுக்கு புதிய பயிற்சியாளர், டி20 எதிர்காலம் பற்றி ரோகித் ஓபன் டாக்… இன்றைய டாப் 5 ஸ்போர்ட்ஸ் செய்திகள்
Top 5 Sports tamil news today

Top 5 Sports News Of The Day in tamil: ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்’ விளையாட்டு செய்திகள் பக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். இன்றைய டாப் 5 ஸ்போர்ட்ஸ் செய்திகளை இங்கு பார்க்கலாம்.

  1. மெஸ்ஸி vs எம்பாப்பே – பலோன் டி’ ஆர் விருதை வெல்லப்போவது யார்?

22வது கால்பந்து உலகக் கோப்பை அரபு நாடான கத்தாரில் நடந்தது. இதன் இறுதிப்போட்டியில் பிரான்ஸ் – அர்ஜென்டினா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. மிகவும் பரபரப்பாக நடந்த இந்தப் போட்டியில் பெனால்டி ஷூட்அவுட் முறையில் அர்ஜென்டினா வெற்றி பெற்று, கோப்பையை முத்தமிட்டது.

இந்த இறுதிப்போட்டியில் பிரான்சு அணி சார்பில் களமாடிய கைலியன் எம்பாப்பே ஹாட்ரிக் கோல் அடித்து அர்ஜென்டினா ரசிகர்கள் வயிற்றில் புளியைக் கரைத்தார். இதனால், கடந்த உலகக் கோப்பையை வென்ற அந்த பிரான்சு வீரர் அதிகம் கவனம் பெற்றார். மேலும், கோப்பை முதல் முறை முத்தமிட்ட மெஸ்ஸிக்கு வாழ்த்து மழை பொழிந்த அளவிற்கு இவருக்கும் ரசிகர்கள் பாராட்டை தெரிவித்தனர்.

இந்த நிலையில், லியோனல் மெஸ்ஸி மற்றும் கைலியன் எம்பாப்பே இருவரும் பிரான்சு லீக் தொடருக்கான பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் அணியில் இணைந்து களமாட உள்ளார்கள். இந்த வீரர்களில் யார் கால்பந்தின் கவுரமான விருதான பலோன் டி’ ஆர் விருதை வெல்லப்போவது யார்? என்கிற போட்டி ஏற்பட்டுள்ளது.

பலோன் டி’ ஆர் விருதை கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி 7 முறை வென்றுள்ளார். ஆனால், எம்பாப்பே ஒருமுறை கூட வென்றதில்லை. இந்த நிலையில், அவர் இம்முறை வெல்லும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.

லியோனல் மெஸ்ஸி (பாரிஸ் செயின்ட் ஜெர்மைன்)

2022-23 உதைத்த கோல்கள்: 24 கோல்கள், 18 உதவிகள். உலகக் கோப்பை மற்றும் கோப்பை டெஸ் சாம்பியன்களை வென்றவர்.

கைலியன் எம்பாப்பே (பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன்)

2022-23ல்: 28 கோல்கள், 7 உதவிகள்.

  1. இந்தியா vs இலங்கை: இரு அணி வீரர்கள் பட்டியல்

இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வரும் இலங்கை கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இதில், இவ்விரு அணிகள் மோதிய 3 போட்டிகொண்ட டி20 தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடர் நடக்கிறது.

அதன்படி, இந்தியா-இலங்கை அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் நாளை நடக்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணியை வழக்கம் போல் கேப்டன் ரோகித் சர்மா வழிநடத்துகிறார்.

IND vs SL: இரு அணி வீரர்கள் பட்டியல்:

இந்தியா:

ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல், ஹர்திக் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், முகமது சிராஜ், யுஸ்வேந்திர சாஹல், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, குல்தீப் யாதவ், அக்சர் படேல், இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக்

இலங்கை:

பதும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ் (விக்கெட் கீப்பர்), அவிஷ்க பெர்னாண்டோ, சரித் அசலங்கா, தனஞ்சய டி சில்வா, தசுன் ஷனக (கேப்டன்), வனிந்து ஹசரங்க, சாமிக்க கருணாரத்னே, மஹீஷ் தீக்ஷன, தில்ஷன் மதுஷங்க, லஹிரு குமார, அஷேன் பண்டார, நுவா, பிரமோத் பண்டார, நுவா மதுஷன், துனித் வெல்லலகே, கசுன் ராஜித, ஜெப்ரி வான்டர்சே, சதீர சமரவிக்ரம.

  1. இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடர் – பும்ரா விலகல் – பிசிசிஐ அறிவிப்பு

நீண்ட இடைவெளிக்கு பிறகு வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பீர்ட் பும்ரா இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடர் அணியில் இடம் பெற்றிருந்தார். இந்நிலையில் இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக பிசிசிஐ வெளியிட்ட அறிக்கையில், ருநாள் தொடருக்கு முன்னதாக கவுகாத்தியில் அணியில் சேர இருந்த பும்ரா, பந்துவீச்சை வலுப்படுத்த இன்னும் சிறிது காலம் தேவைப்படும். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அகில இந்திய மூத்த தேர்வுக் குழு ஜஸ்பிரித் பும்ராவுக்கு மாற்றாக யாரையும் அணியில் சேர்க்கவில்லை.” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சொந்த மண்ணில் வருகிற பிப்ரவரி மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடக்கவுள்ள நிலையில், அதை மனதில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம். செப்டம்பர் 2022க்குப் பிறகு முதன்முறையாக இந்திய அணியில் பும்ரா சேர்க்கப்பட்டார், அவர் தொடர்ச்சியான முதுகு காயத்தால் 2022 டி 20 உலகக் கோப்பையில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

பும்ராவுக்கு பதில் முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங் மற்றும் உம்ரான் மாலிக் ஆகிய வேகப்பந்து வீச்சாளர்களுடன் இந்தியா செல்ல வாய்ப்புள்ளது.

  1. “இன்னும் முடிவு செய்யவில்லை”: டி20 எதிர்காலம் குறித்து ரோகித் சர்மா

சமீபத்தில் ஆஸ்திரேலிய மண்ணில் நடந்த டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியா அரையிறுதியில் படுதோல்வி கண்டு வெளியேறியது. இதனால், இந்திய அணி மற்றும் நிர்வாகம் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. இதன்பிறகு நட்சத்திர வீரர்களான கேப்டன் ரோகித் சர்மா மற்றும் முன்னாள் கேப்டன் விராட் கோலியின் டி20 கிரிக்கெட் பயணம் நிறைவு பெற்றுவிட்டதாக பல்வேறு கருத்துகள் வலம் வந்து கொண்டிருக்கின்றன.

இந்தச் சூழலில் தனது சர்வதேச டி20 கிரிக்கெட் எதிர்காலம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார் கேப்டன் ரோகித் சர்மா. இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு முன்னதாக இன்று பத்திரிகையாளர் சந்திப்பில் கேப்டன் ரோகித் பங்கேற்றார். அப்போது அவரது டி20 கிரிக்கெட் எதிர்காலம் குறித்த கேள்வி முன்வைக்கப்பட்டது.

அப்போது பேசிய அவர் “அடுத்தடுத்து நடைபெறும் போட்டிகளில் பங்கேற்று விளையாடுவது என்பது சாத்தியமில்லை. டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என மூன்று ஃபார்மெட்டிலும் பங்கேற்று விளையாடும் வீரர்களுக்கு ஓய்வு மிகவும் அவசியம். அதில் நானும் அடங்குவேன். நியூஸிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற உள்ளது.

ஐபிஎல் சீசன் முடிந்ததும் என்ன நடக்கிறது என்பதை பார்ப்போம். நான் டி20 கிரிக்கெட் ஃபார்மெட்டை கைவிடுவது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை” என்று ரோகித் கூறியுள்ளார்.

  1. போர்ச்சுகலின் பயிற்சியாளர் ராபர்டோ மார்டினெஸ் நியமனம்

போர்ச்சுகல் கால்பந்து அணி பெல்ஜியத்தின் முன்னாள் பயிற்சியாளர் ராபர்டோ மார்டினெஸை அதன் புதிய மேலாளராக நியமித்துள்ளது. 49 வயதான மார்டினெஸ், உலகக் கோப்பை காலிறுதியில் மொராக்கோவிடம் போர்ச்சுகல் அதிர்ச்சி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து தனது பொறுப்பை விட்டு வெளியேறிய பெர்னாண்டோ சாண்டோஸுக்குப் பதிலாக நியமிக்கப்பட்டுள்ளார்.

மார்டினெஸ் உலகக் கோப்பை லீக் சுற்றுடன் வெளியேறியதைத் தொடர்ந்து பெல்ஜியம் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகினார். அவர் தனது ஆறு ஆண்டு பதவிக்காலத்தை சிறிது காலத்திற்கு முன்பே முடித்துக்கொண்டதாகவும், அவர்கள் சாம்பியன் பட்டம் பெற்றிருந்தாலும் தான் வெளியேறியிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

“உலகின் மிகவும் திறமையான அணிகளில் ஒன்றைப் பிரதிநிதித்துவப்படுத்த முடிந்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன். பெரிய எதிர்பார்ப்புகள் உள்ளன என்பதை நான் புரிந்துகொள்கிறேன். ஆனால் மிகப் பெரிய குழு (FFF ல்) இருப்பதையும் நான் புரிந்துகொள்கிறேன். மேலும் நாங்கள் எங்கள் இலக்குகளை அடைவோம்.

கடந்த உலகக் கோப்பையில் இருந்த அனைத்து 26 வீரர்களையும் நான் தொடர்பு கொள்ள விரும்புகிறேன். கிறிஸ்டியானோ அந்த பட்டியலில் உள்ள ஒரு வீரர். அவருடன் நான் உட்கார்ந்து பேசுவேன்” என்று அவர் கூறியுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Tamil App.

Web Title: Top 5 sports news today in tamil