சந்திராயன் 3 வெற்றியை கொண்டாடும் வகையில் திருச்சியில் 471 மாணவ, மாணவிகள் ஒன்று சேர்ந்து சிலம்பம் சுற்றி சாதனை படைத்தனர்.
நிலவை ஆய்வு செய்ய இஸ்ரோ அனுப்பிய சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர், வெற்றிகரமாக கடந்த ஆகஸ்ட் மாதம் நிலவில் தரையிறக்கப்பட்டது. இதன் மூலம் அமெரிக்கா, ரஷ்யாவைத் தொடர்ந்து, நிலவில் கால்பதித்துள்ள இந்தியா, தனது விண்வெளி பயணத்தில் புதிய மைல் கல்லை எட்டியுள்ளது. சந்திராயன் நிலவினை அடைந்ததைத் தொடர்ந்து இந்தியாவின் வெற்றியை தெரிவித்த இஸ்ரோ தலைவர் "இந்தியா நிலவில் உள்ளது" என்றார்.
இந்த மகிழ்ச்சியை நினைவூட்டும் வகையிலும், கொண்டாடும் வகையிலும், திருச்சி அரவிந்த் கல்வி மற்றும் தற்காப்பு கலைக்கூடம் நடத்திய முப்பெரும் சிலம்ப கலை திருவிழா நேரு நினைவு கல்லூரி உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. முதலாவதாக மாபெரும் சிலம்ப தனித்திறமை போட்டி, இரண்டாவதாக ஆசான் சிவசுப்பிரமணியன் நினைவு குழு போட்டி, மூன்றாவதாக 471 மாணவ மாணவிகள் மதியம் 3 மணி அளவில் 33 நிமிடம் மூன்று வினாடிகள் சிலம்பம் சுற்றி சந்திராயன் 3 சரித்திர சாதனையாளர்களுக்கு சமர்ப்பித்தனர். இந்த சாதனை நிகழ்ச்சி ஜெட்லி புக் ஆப் ரெக்கார்ட்ஸில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்தியா புக் ஆப் ரெகார்ட்சுக்கு அனுப்பப்படுகின்றது.
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு நேரு நினைவு கல்லூரி தலைவர் பாலசுப்ரமணியன், மாலா பாலசுப்பிரமணியன் மற்றும் கல்லூரி முதல்வர் வெங்கடேசன் ஆகியோர் பரிசுகளை வழங்கி பாராட்டினர்
சிறப்பு விருந்தினர்களாக நவல்பட்டு காவலர் பயிற்சி பள்ளி ஆய்வாளர் பிரான்சிஸ் மேரி, சண்முக பிரியா, தடகள வீராங்கனை சாந்தி விஜயகுமார் ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
இந்தப்போட்டிகளுக்கான ஏற்பாடுகளை அரவிந்த் தற்காப்பு கலைக்கூட தலைவர் முத்துராமலிங்கம், செயலாளர் கீதா, பொருளாளர் ராஜலட்சுமி அரவிந்த் ஆகியோர் செய்திருந்தனர்.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“