Ms Dhoni | Ravindra Jadeja | IPL 2024 | Chennai Super Kings: 17-வது ஐ.பி.எல். (இந்தியன் பிரீமியர் லீக் - 2024) டி-20 கிரிக்கெட் திருவிழா இந்திய மண்ணில் கடந்த மார்ச் 22 தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில், சென்னையில் நேற்று திங்கள்கிழமை நடந்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இதில், 7 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி அபார வெற்றி பெற்றது.
ரகசியத்தை உடைத்த தேஷ்பாண்டே
இந்தப் போட்டியில் தோனிக்கு முன் களத்திற்கு பேட்டிங் செய்ய வருவதுபோல பிராங்க் செய்து சென்னை அணி ரசிகர்களை ஜடேஜா ஏமாற்றிய நிலையில், அது குறித்த ரகசியத்தை துஷார் தேஷ்பாண்டே உடைத்துள்ளார்.
கொல்கத்தா அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் சென்னை அணி 138 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தியது. அணியின் வெற்றிக்கு 3 ரன்கள் தேவை என்ற நிலையில் இருந்தபோது அதிரடியாக மட்டையைச் சுழற்றி வந்த சிவம் துபே அவுட் ஆனார். அடுத்ததாக தோனி களம் இறங்குவார் என அனைத்து ரசிகர்களும் எதிர்பார்த்த வேளையில், ட்ரெஸ்சிங் ரூமில் இருந்து ரவீந்திர ஜடேஜா சிரித்தபடியே பேட்டை எடுத்துக்கொண்டு மைதானத்திற்குள் நுழைய வந்தார்.
ஆனால், அடுத்த சில நொடிகளில் மீண்டும் திரும்பவும் ட்ரெஸ்சிங் ரூமிற்குள் குடுகுடுவென ஓடிவிட்டார். இதனைப் பார்த்த சக சி.எஸ்.கே. வீரர்கள் மற்றும் ரசிகர்களின் சிரிப்பலையில் அரங்கம் அதிர்ந்தது. சிறிது நேரத்தில் பேட்டிங் செய்ய வெளியே வந்த தோனிக்கு அரங்கமே அதிரும் அளவுக்கு ரசிகர்கள் கரகோஷங்களை எழுப்பி தங்களது உற்சாக வரவேற்பினை அளித்தனர். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
இந்த நிலையில், ஜடேஜாவை அவ்வாறு பிராங்க் செய்ய சொன்னதே தோனி தான் என சி.எஸ்.கே. அணியின் வேகப்பந்து வீச்சாளர் துஷார் தேஷ்பாண்டே கூறியுள்ளார். இது குறித்து அவர் பேசுகையில், 'நீ பேட்டிங் செய்யக் கிளம்புவதைப் போல் நடி, அப்போது நான் களத்திற்குள் செல்கிறேன்' என தோனி ஜடேஜாவிடம் சொன்னதைக் கேட்டேன் என்று அவர் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“