scorecardresearch

டி20 ஐசிசி தரவரிசை வெளியீடு.. ஆசிய டீம் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்.. மேலும் செய்திகள்

பந்துவீச்சாளர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இலங்கை வீரர் ஹசரங்காவும், நான்காவது இடத்தில் இங்கிலாந்து வீரர் அடில் ரஷீதும் அதே இடத்தில் நீடிக்கின்றனர்.

பிரான்சில் விளையாட்டுகளில் மத அடையாளங்களை

வெளிப்படுத்துவதை தடைசெய்யும் மசோதா

பிரான்சில் விளையாட்டு தொடர்பான நிகழ்வுகளில் வெளியே தெரியும்படி மத அடையாளங்களை வெளிப்படுத்துவதை தடைசெய்யும்  வரைவு மசோதாவிற்கு செனட் சபை வாக்களிக்க மறுத்ததை அடுத்து, இந்த மசோதா பிரான்சின் தேசிய சட்டமன்றத்திற்கு ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டு உள்ளது.

இந்த மசோதாவில் பழமைவாத மேல் சபையால் திருத்தமாகச் சேர்க்கப்பட்ட ஒரு ஷரத்து உள்ளது. அது விளையாட்டு கூட்டமைப்புகளால் ஏற்பாடு செய்யப்படும் நிகழ்வுகள் மற்றும் போட்டிகளில் ‘வெளியே தெரியும்படி மத அடையாளங்களை வெளிப்படுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளது என்று குறிப்பிடுகிறது.

இந்த மசோதா கீழ்சபையில் உள்ள அரசாங்கம் மற்றும் அதன் கூட்டாளிகளால் எதிர்க்கப்படுகிறது. இந்த மசோதா குறித்த இறுதி வாக்கெடுப்பு தேசிய சட்டமன்றத்தில் நடைபெற உள்ளது.

டி20 ஐசிசி தரவரிசை: முதலிடத்தில் தென்னாப்பிரிக்க வீரர்

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) டி20 புதிய தரவரிசையை வெளியிட்டது.

அதில், ஆஸ்திரேலியா வீரர் ஜோஷ் ஹேஸில்வுட் ஒரு இடம் சரிந்து இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டார். தென்னாப்பிரிக்க பந்துவீச்சாளர் தப்ரைஸ் ஷம்சி இரண்டாவது இடத்தில் இருந்து முதலிடத்துக்கு முன்னேறினார்.

இவர் 784 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.

பந்துவீச்சாளர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இலங்கை வீரர் ஹசரங்காவும், நான்காவது இடத்தில் இங்கிலாந்து வீரர் அடில் ரஷீதும் அதே இடத்தில் நீடிக்கின்றனர்.

பேட்டிங்கை பொறுத்தவரை டி20 தரவரிசையில் பாபர் ஆசம் முதலிடத்தில் நீடிக்கிறார். அவர் 805 புள்ளிகளுடன் அந்த இடத்தில் உள்ளார். இரண்டாவது இடத்தில் முகமது ரிஸ்வான் (பாகிஸ்தான்), மூன்றாவது இடத்தில் எய்டன் மார்க்ரம் (தென்னாப்பிரிக்கா) உள்ளார்.

ஆசிய டீம் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்;

மலேஷியாவிடம் தோல்வியடைந்த இந்தியா!

ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் இந்திய அணி மலேஷியாவிடம் 2-3 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தது.

ஆசிய அணிகள் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் மலேசியாவின் ஷா அலாம் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் பிரிவில் இந்தியா நேற்று நடைபெற்ற தனது தொடக்க ஆட்டத்தில் மலேஷிய அணியை எதிர்கொண்டது.

இதையும் படியுங்கள்: தோனியின் சாதனையை முறியடித்த இந்திய வீராங்கனை.. மேலும் விளையாட்டுச் செய்திகள்

இந்த ஆட்டத்தில் 2-3 என்ற கணக்கில் மலேசியாவிடம் இந்திய அணி வீழ்ந்தது. எனினும், மகளிர் ஒற்றையர் பிரிவில் அஷ்மிதா சாலிஹா, தாரா ஷா வெற்றி பெற்றனர். மற்ற 3 ஆட்டங்களில் இந்திய வீராங்கனைகள் தோல்வி அடைந்தனர்.

முன்னதாக தென் கொரிய அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய ஆடவர் அணி தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.

இன்று நடைபெறும் ஆட்டத்தில் உலக சாம்பியன்ஷிப்பில் வெண்கலப் பதக்கம் வென்ற லக்‌ஷயா சென் தலைமையிலான இந்திய ஆடவர் அணி ஹாங்காங் அணியை  எதிர்கொள்கிறது.

20-ஆம் தேதி வரை இந்தப் போட்டி நடைபெறவுள்ளது.

பெய்ஜிங் ஒலிம்பிக்: இந்திய வீரர் ஆரிப்கான் ஏமாற்றம்

24-வது குளிர்கால ஒலிம்பிக் போட்டி சீன தலைநகர் பெய்ஜிங்கில் நடந்து வருகிறது. இந்த ஒலிம்பிக் போட்டிக்கு இந்தியாவில் இருந்து தகுதி பெற்ற ஒரே இந்தியரான ஜம்மு-காஷ்மீரை சேர்ந்த பனிச்சறுக்கு வீரர் முகமது ஆரிப்கான், ஜெயன்ட் ஸ்லாலோம் பிரிவில் 45-வது இடத்தை பிடித்தார்.

இந்த நிலையில் அவர் நேற்று மற்றொரு பந்தயமான ஸ்லாலோம் பிரிவில் பங்கேற்றார். பனிப்பாதையில் உயரமான இடத்தில் இருந்து வழியில் நடப்பட்டுள்ள குச்சிகளை தட்டியபடி வேகமாக சறுக்கி செல்லும் இந்த போட்டியில்  ஆரிப்கான் இலக்கை முழுமையாக எட்டாமல் ஏமாற்றம் அளித்தார்.

இந்த சுற்றை நிறைவு செய்யாததால் அவரால் பதக்கத்துக்கான 2-வது சுற்றுக்கு செல்ல முடியவில்லை.

இத்துடன் இந்த போட்டியில் இந்தியாவின் சவால் முடிவுக்கு வந்தது. 

ஐஎஸ்எல் கால்பந்து: சென்னைஒடிசா ஆட்டம்டிரா

ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் நேற்று நடந்த சென்னை-ஒடிசா  ஆட்டம் டிரா ஆனது.

8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து (ஐ.எஸ்.எல்) கோவாவில் நடந்து வருகிறது. கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி  கோவாவில் உள்ள 3 மைதானங்களில் ரசிகர்கள் இன்றி நடைபெறும் இந்த போட்டிகள் மார்ச் மாதம் வரை நடைபெற உள்ளது.

சென்னையின் எப்.சி மற்றும் ஒடிசா எப்.சி அணிகள் நேற்றைய ஆட்டத்தில் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

சென்னை அணியில் ரஹிம் அலி 2-ஆவது நிமிடத்திலும், வல்ஸ்கிஸ் 69-ஆவது நிமிடத்திலும் கோல் அடித்தனர். 

கட்டாயம் வென்றாக வேண்டிய நெருக்கடியுடன் இறங்கிய சென்னை அணி டிரா கண்டதால் ஏறக் குறைய அரை இறுதி வாய்ப்பை இழந்திருக்கிறது.

17-வது ஆட்டத்தில் ஆடிய சென்னை அணி 5 வெற்றி, 5 டிரா, 7 தோல்வி என்று 20 புள்ளிகளுடன் 8-வது இடம் வகிக்கிறது. இன்றைய ஆட்டத்தில் மும்பை சிட்டி- ஜாம்ஷெட்பூர் (இரவு 7.30 மணி) அணிகள் சந்திக்கின்றன.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Tamil App.

Web Title: Twenty twenty icc ranking players sports update sports roundup412736

Best of Express