U-19 World Cup Tamil News: ஒடிசாவின் மாவோயிஸ்டுகளால் பாதிக்கப்பட்ட ராயகடா மாவட்டத்தில் உள்ள சிஆர்பிஎஃப் முகாமில், ரவிக்குமாரை யாருக்கும் தெரியாது. உதவி ஆய்வாளராக இருக்கும் அவரது தந்தை ராஜிந்தர் சிங்கை ஒரு சிலருக்கு தெரியும். ஆனால் சனிக்கிழமை இரவு அதையெல்லாம் மாற்றிவிட்டது.
19 வயதுக்குட்பட்டோருக்கான உலக்கோப்பை தொடரில் இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பிடித்துள்ள இடது கை வேகப்பந்து வீச்சாளர் ரவி குமார், வங்க தேச அணிக்கெதிரான ஆட்டத்தில் 14 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார் (5-1-5-3). இவரின் சிறப்பான பந்துவீச்சு, வங்க தேச அணியை இந்தியா 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்த உதவியது. மேலும், இந்த சிறப்பான வெற்றியின் மூலம் இந்தியா அரையிறுதிக்கும் முன்னேறியுள்ளது.

இன்று சிஆர்பிஎஃப் முகாமில் பேசப்படுவது எல்லாம் ராஜீந்தர் மற்றும் ரவியைப் பற்றி தான். “நேற்று வரை இங்கு ராஜிந்தரை யாருக்கும் தெரியாது. இன்று எல்லா அதிகாரிகளுக்கும் தெரியும். ரவியின் அப்பா ராஜிந்தர் என்பது தான் எங்கள் யூனிட்டின் பேச்சு. அனைத்து அதிகாரிகளும் என்னை அழைத்து வாழ்த்தியுள்ளனர். என் மகிழ்ச்சியை வெளிப்படுத்த என்னிடம் வார்த்தைகளே இல்லை,”என்று சிஆர்பிஎஃப் உதவி ஆய்வாளரும், ரவி குமாரின் தந்தையுமான ராஜிந்தர் ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ இதழுக்களித்த பேட்டியில் கூறுகிறார்.
இப்படியொரு மகிழ்ச்சியான நாளை கொண்டாட தந்தை-மகன் இருவரும் தொடர்ச்சியாக பல தடைகளை கடக்க வேண்டியிருந்தது. ரவியின் கதை கிட்டத்தட்ட நடக்காத ஒன்று. அவரது தாயார் தனது மகன் எப்போதும் கிரிக்கெட் விளையாடுவதைப் பற்றி கவலைப்பட்டார். மேலும், ரவி கல்வியில் கவனம் செலுத்தி பட்டம் பெற வேண்டும் என்றே விரும்பினார்.
ஆனால், ரவியோ எந்த கவலையும் இல்லாமல், தனது தாயிடம், “இன்று, நீங்கள் என்னைத் தடுக்கிறீர்கள், ஆனால் நீங்கள் என்னை டிவியில் பார்க்கும் ஒரு நாள் வரும்” என்று கூறுவார் என ராஜிந்தர் நெகிழ்வுடன் நினைவு கூறுகிறார்.

ரவியின் உந்துதலையும், அர்ப்பணிப்பையும் கண்ட தந்தை ராஜிந்தர் அவரிடம் “உனக்கு மனதில் தைரியம் இருந்தால் நீ இந்தியாவுக்காக விளையாடலாம்” என்றுள்ளார். அதை, அவரது மகன் 19 வயதில் செய்து காட்டியுள்ளார்.
முன்னதாக, 16 வயதுக்குட்பட்ட உத்திர பிரதேச மாநில அணியில் இடம் பெறுவதற்கு லஞ்சம் கொடுக்க வேண்டும் என்பதை அறிந்த ரவி, கான்பூரில் நடந்த தேர்வுக்கு பிறகு அதைப்பற்றி தந்தையிடம் தெரிவித்தார். இது தனது சாதாரண சம்பளத்திற்கும் சேமிப்பிற்கும் அப்பாற்பட்டது என்பதை ராஜீந்தர் அறிந்திருந்தார்.
ஆனால், கொல்கத்தாவில் வீடு வைத்திருக்கும் பக்கத்து வீட்டுக்காரர், ரவி அங்கேயே தங்கி பயிற்சி பெறலாம் என்று ராஜிந்தரிடம் கூறினார். இது ரவியின் கிரிக்கெட் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. அப்போது வெறும் 13 வயதான ரவி, கிரிக்கெட் விளையாடுவதை தவிர வேறு எந்த எண்ணமும் இல்லாமல் பைகளை மூட்டையாக கட்டிக் கொண்டு புறப்பட்டான். எனினும், துரதிர்ஷ்டங்கள் ரவியை தொடர்ந்து துரத்தின. ஆனால், அதைப் பற்றி ரவி பெற்றோரிடம் வாய் திறக்கவில்லை.
“நான் 16 வயதுக்குட்பட்ட அணியில் இடம்பிடித்து இருந்தேன். ஆனால் சில சோதனைகள், எலும்புப் பரிசோதனை அல்லது ஏதோவொன்றிற்குப் பிறகு எனது பெயர் நீக்கப்பட்டது. எனக்கு காரணம் கூறப்படவில்லை, நான் வெளியேறினேன், ”என்கிறார் ரவி.

விமானப்படையில் சேர வேண்டும் என்று கனவு கண்ட ரவி இப்படி தான் தோற்கடிக்கப்பட்டதாக உணரும் போதெல்லாம், அவர் தனது தந்தையிடமிருந்து தான் கற்றுகொண்டுள்ளார். “நான் என் தந்தையைப் பற்றி நினைப்பேன். அவரது வேலையை விட கடினமானது எது? ஒவ்வொரு நாளும், தனக்கு முன்னால் என்ன இருக்கிறது என்று தெரியாமல் காட்டுக்குள் செல்கிறார். அதே நேரத்தில், அவர் எங்களுக்காக நிறைய தியாகம் செய்திருக்கிறார்.
என்னால் இந்தியா அணியில் இடம்பிடிக்க முடியாது என்று அவரது நண்பர்களால் கேலி செய்யப்பட்டார். ஆனால், அவர்களில் சிலர் இப்போது என் தந்தையை பாராட்டுகிறார்கள். அதுதான் வாழ்க்கை. நான் கற்றுக்கொண்ட ஒரு விஷயம் என்னவென்றால், கடைசி வரை குடும்பம் மட்டுமே நம்முடன் இருக்கும் என்பது தான்.
மக்கள் என்னைப் பின்தொடர்ந்து ‘நாம் அவரைப் போல இருக்க வேண்டும்’ என்று சொல்ல வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.”என்று ரவி கூறுகிறார்,
ரவியின் கடின உழைப்பிற்கு பலன் கிடைத்தது. கடந்த ஆண்டின் பிற்பகுதியில், வினு மன்கட் டிராபிக்கான பெங்கால் U-19 அணிக்காக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது வெற்றி அவருக்கு சேலஞ்சர்ஸ் டிராபி, உள்நாட்டில் நடந்த முத்தரப்புத் தொடர் மற்றும் ஆசிய கோப்பை ஆகியவற்றில் அவருக்கு இடம் கிடைத்தது.

ரவியின் இந்தக் கனவுப் பயணம் இப்போதுதான் ஆரம்பமாகியுள்ளது. இன்னும் அவர் செல்ல வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது என்பது அவருக்குத் தெரியும். ஆனால் இப்போதைக்கு, ராஜ்ந்தரின் மகனின் புகழ் சிஆர்பிஎஃப் பிரிவின் சுவர்களுக்கு அப்பால் பயணித்து இருக்கிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“