IND U19 vs AUS U19 Semifinal updates in tamil: 14-வது ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் (19 வயதுக்கு உட்பட்டோர்) வெஸ்ட்இண்டீஸ் மண்ணில் நடைபெற்று வருகிறது. இதில் ஆன்டிகுவாவில் இன்று புதன்கிழமை மாலை தொடங்கும் 2வது அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்ச்சை நடத்துகின்றன.
4 முறை சாம்பியனான இந்தியா தொடரில் நல்ல ஃபார்மில் இருக்கிறது. தொடக்க ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்க அணியை 45 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து, தொடரை உற்சாகத்துடன் தொடங்கியது. இடையில் அணியில் உள்ள சில வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டனர்.
எனினும், இந்த பின்னடைவை இந்திய ஜூனியர் அணி சிறப்பாகவே கையாண்டு இருந்தது. குறிப்பாக நிஷாந்த் சிந்து தலைமையிலான அணி அயர்லாந்து அணியை 174 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. தொடர்ந்து உகாண்டாவிற்கு எதிரான ஆட்டத்திலும், பிறகு நடந்த காலிறுதி ஆட்டத்திலும் மிகச் சிறப்பான வெற்றியைப் பதிவுசெய்தது. காலிறுதியில் நடப்பு சாம்பியனான வங்கதேசத்தை எதிர்கொண்ட இந்தியா அந்த அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து, அரையிறுதியில் நுழைந்தது இங்கு நினைவுகூரத்தக்க ஒன்றாகும்.
இந்திய அணியில் ஹர்னூர் சிங், அங்கிரிஷ் ரகுவன்ஷி மற்றும் ராஜ் பாவா ஆகிய இளம் வீரர்கள் பேட்டிங்கில் நல்ல ஃபார்மில் உள்ளனர். பந்துவீச்சில் ரவிக்குமார், ராஜ்வர்தன் ஹங்கர்கேகர் மற்றும் சுழற்பந்து வீச்சாளர்கள் விக்கி ஓஸ்ட்வால் மற்றும் கௌஷல் தம்பே ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.
2 முறை சாம்பியனான ஆஸ்திரேலியா அணி அதன் காலிறுதி ஆட்டத்தில் பாகிஸ்தானை 119 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது. "இந்தியா நல்ல ஃபார்மில் உள்ளது. இருப்பினும், எங்களின் சிறந்த கிரிக்கெட்டை விளையாடவோம்" என்று ஆஸ்திரேலிய ஜூனியர் அணியின் கேப்டன் கூப்பர் கோனோலி கூறியுள்ளார்.
இதற்கிடையில், இந்திய ஜூனியர் அணியின் கேப்டன் யாஷ் துள் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில், "ஆஸ்திரேலிய பந்துவீச்சு தாக்குதல் வழக்கமான ஒன்றுதான். ஆனால், நாங்கள் விரைவான விக்கெட்டுகளை இழந்தவுடன் பார்ட்னர்ஷிப்களை உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறோம். டெத் ஓவர்களில் அதிக ரன்களை குவிப்பதற்காக பார்ட்னர்ஷிப்களை கட்டியெழுப்புவதில் எங்கள் கவனத்தை திருப்பியுள்ளோம்." என்று கூறியுள்ளார்.
மொத்தத்தில் சமபலம் பொருந்திய அணிகளாக உள்ள இவ்விரு அணிகள் மோதும் இன்றைய ஆட்டம் பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கபடுகிறது. இப்போட்டி இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு நடைபெற உள்ளது.
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் நேருக்கு நேர் மோதிய பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது என்பது குறிப்பிடதக்கது.
இந்தியா U19:
ஆங்கிரிஷ் ரகுவன்ஷி, ஹர்னூர் சிங், ஷேக் ரஷீத், யாஷ் துல்(கேப்டன்), சித்தார்த் யாதவ், ராஜ் பவா, கவுஷல் தம்பே, தினேஷ் பனா(விக்கெட் கீப்பர்), ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், விக்கி ஓஸ்ட்வால், ரவிக்குமார், மானவ் பராக், நிஷாந்த் சிந்து, அனீஸ்வர் கவுதம் , ஆராத்யா யாதவ், கர்வ் சங்வான்
ஆஸ்திரேலியா U19:
கேம்ப்பெல் கெல்லவே, டீக் வில்லி, கோரி மில்லர், கூப்பர் கோனொலி(கேப்டன்), லாச்லன் ஷா, ஐடன் காஹில், வில்லியம் சால்ஸ்மேன், டோபியாஸ் ஸ்னெல்(விக்கெட் கீப்பர்), டாம் விட்னி, ஜாக் சின்ஃபீல்ட், ஜாக் நிஸ்பெட், ஹர்கிரத் பஜ்வா, ஜோஸ்வாக் கார்னர் , நிவேதன் ராதாகிருஷ்ணன்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.