U-19 World Cup 2022 Tamil News: 14-வது ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் (19 வயதுக்கு உட்பட்டோர்) வெஸ்ட்இண்டீஸ் மண்ணில் நடைபெற்று வருகிறது. இதில் ஆன்டிகுவாவில் கடந்த புதன்கிழமை நடந்த 2வது அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்ட இந்தியா 96 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த அசத்தல் வெற்றி மூலம் இந்தியா 5வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது.
இதேபோல், கடந்த செவ்வாய் கிழமை ஆன்டிகுவாவில் நடந்த முதலாவது அரையிறுதியில் இங்கிலாந்து – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிய நிலையில், இங்கிலாந்து அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் அந்த அணி 24 ஆண்டுகளுக்கு பிறகு இறுதிப் போட்டிக்கு வந்துள்ளது.

இறுதிப்போட்டியில் இந்தியா vs இங்கிலாந்து

எனவே, இவ்விரு அணிகளும் வருகிற சனிக்கிழமை (நாளை 5ம் தேதி) நடக்கும் இறுதிப்போட்டியில் பலப்பரீட்சை நடத்துகின்றன. இப்போட்டி இந்திய நேரப்படி சனிக்கிழமை மாலை 6.30 மணிக்கு தொடங்குகிறது. நடப்பு தொடரில் இவ்விரு அணிகளும் ஒரு போட்டியில் கூட தோல்வியை சந்திக்கவில்லை என்பது இங்கு நினைவுகூரத்தக்க ஒன்றாகும்.
இளம் வீரர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விராட் கோலி</strong>
இந்த நிலையில், ஜூனியர் இந்திய அணி வீரர்களுக்கு முன்னாள் கேப்டன் விராட் கோலி வீடியோ கால் மூலம் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். இந்த ஜூம் வீடியோ காலில் ராஜ்வர்தன் ஹகர்கேகர்கள், கௌஷல் டாம்பேஸ், யாஷ் துல்ஸ் போன்ற இளம் வீரர்கள் இணைந்திருந்தனர். அவர்களிடம் உரையாடி விராட் கோலி தனது பாராட்டையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

மேலும், 2008ம் ஆண்டு நடந்த ஜூனியர் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியை வழிநடத்திய விராட் கோலி, தனது அனுபவத்தையும், அறிவுரைகளையும் இளம் வீரர்களுக்கு வழங்கினார்.
ஜூம் வீடியோ காலில் விராட் கோலி இளம் வீரர்களுடன் உரையாடியது குறித்து, ஜூனியர் அணியின் முதன்மை வேகப்பந்து வீச்சாளர் ராஜ்வர்தன் ஹங்கர்கேகர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், “விராட் கோலி பாய்யா உங்களுடன் உரையாடியது மிகவும் நன்றாக இருந்தது. உங்களிடமிருந்து வாழ்க்கை மற்றும் கிரிக்கெட் பற்றிய சில முக்கியமான விஷயங்களைக் கற்றுக்கொண்டேன். இது வரவிருக்கும் காலங்களில் நாங்கள் சிறந்து விளங்க உதவும், ”என்று குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல் சுழற்பந்து வீச்சாளர் கவுஷல் தம்பே, “இறுதிப் போட்டிக்கு முன் ஜாம்பவான் வீரரின் (GOAT) சில மதிப்புமிக்க குறிப்புகள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

2008ம் ஆண்டு ஜூனியர் உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு முன், ஜாம்பவான் வீரர் சச்சின் டெண்டுல்கர் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு இளம் வீரர்களுக்கு அறிவுரைகளை வழங்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“