Pro Kabaddi League: 10-வது புரோ கபடி லீக் திருவிழா கடந்த 2ம் தேதி தொடங்கி இந்தியாவில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தொடரில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி, குஜராத் ஜெயன்ட்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பால்டன், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா மற்றும் உ.பி. யோத்தாஸ் ஆகிய 12 அணிகள் களமாடி வருகின்றன.
இந்நிலையில், இந்த தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. மும்பையில் இரவு 8 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் யு மும்பா - ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் மோத உள்ளன. இதையடுத்து இரவு 9 மணிக்கு நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் - குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் மோத உள்ளன.
இன்றைய முதல் போட்டியில் யு மும்பா அணியை ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ் அணி எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் ஜெய்ப்பூர் வீரர் அர்ஜூன் தேஸ்வால் ரெய்டில் புள்ளிகளை வாரிச் சுருட்டினார். இதனால் ஜெய்ப்பூர் அணி தொடக்கம் முதல் ஆதிக்கம் செலுத்தியது. மும்பை அணி கடுமையாக போராடினாலும், ஜெய்ப்பூர் அணி 10 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஜெய்ப்பூர் அணி 41 புள்ளிகளையும், மும்பை அணி 31 புள்ளிகளையும் பெற்றது. ஜெய்ப்பூர் அணியில் அதிகபட்சமாக அர்ஜூன் 17 புள்ளிகளையும், அஜித்குமார் 6 புள்ளிகளையும் பெற்றனர். மும்பை அணியில் அதிகபட்சமாக குமன் சிங் 13 புள்ளிகளையும், அலிசேரா 6 புள்ளிகளையும் எடுத்தனர்.
இன்றைய இரண்டாவது போட்டியில் தெலுங்கு டைட்டன்ஸ் மற்றும் குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியின் முதல் பாதியில் தெலுங்கு டைட்டன்ஸ் ஆதிக்கம் செலுத்தியது. ஆனால் இரண்டாம் பாதியில் குஜராத் வீரர்கள் சிறப்பாக விளையாடினார். இதனால் தெலுங்கு டைட்டன்ஸ் கடுமையாக போராடினாலும், குஜராத் அணி 7 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தெலுங்கு டைட்டன்ஸ் அணி 30 புள்ளிகளையும், குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 37 புள்ளிகளையும் பெற்றது. தெலுங்கு டைட்டன்ஸ் அணியில் அதிகபட்சமாக பவன் ஷெராவத் 8 புள்ளிகளையும், சஞ்சீவி 7 புள்ளிகளையும் பெற்றனர். குஜராத் அணியில் அதிகபட்சமாக ராகேஷ் 10 புள்ளிகளையும், தீபக் 9 புள்ளிகளையும் எடுத்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“