Advertisment

விளையாட்டு வீரர்களுக்கு மறுப்பு தெரிவித்த மத்திய அரசு; அள்ளிக் கொடுத்த தமிழக அரசு - ஐகோர்ட் பாராட்டு

பிரேசிலில் நடக்கும் செவி மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு தொடரில் கலந்துகொள்ள வீரர்களுக்கு நிதியுதவி வழங்கிய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பாராட்டு தெரிவித்தது.

author-image
WebDesk
New Update
 Udhayanidhi Stalin realise funds TN athletes first World Deaf Youth Games Madras High Court appreciates Tamil News

மத்திய அரசின் செலவில் வீரர் - வீராங்கனைகளை பிரேசிலுக்கு அனுப்ப இந்திய விளையாட்டு ஆணையம் மறுத்திருப்பது 'உண்மையில் துரதிர்ஷ்டவசமானது' என்று நீதிபதி விமர்சித்தார்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Chennai High Court | Udhayanidhi Stalin: செவி மாற்றுத்திறனாளிகளுக்கான முதலாவது உலக காது கேளாதோர் இளைஞர் விளையாட்டு (First World Deaf Youth Games) போட்டிகள் பிரேசில் நாட்டில் உள்ள ஸா பாலோ நகரில் நடைபெறவுள்ளது. வருகிற 14 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை நடக்க உள்ள இந்த தொடரில் தமிழகத்தைச் சேர்ந்த ஜி.தமிழ்ச்செல்வன் (16), சுதர்சன் (17) மற்றும் வர்சினி (16), பிரியங்கா (17), சுபஸ்ரீ (17) ஆகிய 5 வீரர் - வீராங்கனைகள் தடகளப் பிரிவில் பங்கேற்கவுள்ளனர். 

Advertisment

ஐகோர்ட் பாராட்டு 

இந்நிலையில், செவி மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு தொடரில் கலந்துகொள்ள தமிழக வீரர் - வீராங்கனைகளுக்கு நிதியுதவி வழங்க மத்திய அரசின் விளையாட்டு ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது. இதனையடுத்து, வீரர் - வீராங்கனைகள் ஐந்து பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிட்டு மனு தாக்கல் செய்தனர். 

அதில், சர்வதேச விளையாட்டு வீரர்களாக மாறுவதே தங்களின் நோக்கம் என்றும், பல உள்நாட்டு போட்டிகளில் வென்ற பிறகு, முதல் உலக காது கேளாதோர் இளைஞர் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கத் தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும், இருப்பினும், மத்திய அரசின் செலவில் தங்களை பிரேசிலுக்கு அனுப்ப விளையாட்டு ஆணையம் (SAI) மறுத்துவிட்டது என்றும் மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர். 

இந்த மனு நீதிபதி அனிதா சுமந்த் முன்னிலையில் நேற்று வியாழக்கிழமை விசாரணைக்கு வந்த நிலையில், மத்திய அரசின் செலவில் வீரர் - வீராங்கனைகளை பிரேசிலுக்கு அனுப்ப இந்திய விளையாட்டு ஆணையம் (SAI) மறுத்திருப்பது 'உண்மையில் துரதிர்ஷ்டவசமானது' என்று நீதிபதி விமர்சித்தார். 

வழக்குப் பதிவுகளை நீதிபதி ஆய்வு செய்தபோது, தமிழ்நாடு காதுகேளாதோர் விளையாட்டுக் கழகத்தின் நிர்வாகிகள் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினைச் சந்தித்து, விளையாட்டு வீரர்களுக்கு அரசு நிதியில் நிதியுதவி வழங்க ஒப்புக்கொண்டதற்கான கடிதம் நீதிபதியின் கவனத்திற்கு வந்தது.

அப்போது நீதிபதி அனிதா சுமந்த், இது தொடர்பான உத்தரவுகளை அன்றைய நாளுக்குள் பெறுமாறு கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜே.ரவீந்திரனிடம் கேட்டுக் கொண்டார். இதற்கு பதிலளித்த கூடுதல் அட்வகேட் ஜெனரல், பிரேசில் விளையாட்டுப் போட்டிகள் இன்னும் சில நாட்களில் தொடங்க உள்ளதால், தமிழக அரசு ரூ. 25 லட்சத்தை உடனடியாக வழங்க விளையாட்டுத் துறை அமைச்சர் ஒப்புக்கொண்டதாக நீதிபதியிடம் தெரிவித்தார். 

மத்திய அரசு தரப்பிலான வழக்கறிஞர் ரபு மனோகர், மாநில அரசு செலவை ஏற்றுக்கொண்டால், மனுதாரர்கள் சர்வதேச போட்டியில் பங்கேற்க மத்திய அரசின் விளையாட்டு ஆணையம் எந்தவித ஆட்சேபனையும் தெரிவிக்காது என்று தெரிவித்தார். 

இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி, சர்வதேச விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க, காதுகேளாத 5 விளையாட்டு வீரர்களை அனுப்ப தமிழக அரசு ரூ. 25 லட்சம் செலவழிக்க முன்வந்ததற்கு பாராட்டு தெரிவித்தார். மேலும் அவர்கள் போட்டியில் பங்கேற்பதை எளிதாக்குவதற்கும், உறுதிசெய்வதற்கும் அவர்களின் விசாக்கள் மற்றும் பிற நடவடிக்கைகளை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

அமைச்சர் உதயநிதி பதிவு

இந்நிலையில், செவி மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு தொடரில் கலந்துகொள்ள தமிழக வீரர் - வீராங்கனைகளுக்கு நிதியுதவி வழங்கியது தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "பிரேசிலில் வரும் 14 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை செவி மாற்றுத்திறனாளிகளுக்கான First World Deaf Youth Games நடைபெறவுள்ளது. 

இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த தம்பிகள் ஜி.தமிழ்ச்செல்வன் - சுதர்சன் மற்றும் தங்கைகள் வர்சினி - பிரியங்கா - சுபஸ்ரீ ஆகியோர்  தடகளப் பிரிவில் பங்கேற்கவுள்ளனர். இவர்களின் விமானப்பயணம் - தங்குமிடம் - விசா உள்ளிட்ட செலவினங்களுக்காக, தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையிலிருந்து தலா ரூ.5 லட்சம் வீதம், ரூ.25 லட்சத்துக்கான காசோலையை இன்று வழங்கினோம். 

இந்த சர்வதேச போட்டியில் வெற்றி பெற்று தமிழ்நாட்டுக்கு பெருமைத் தேடித்தர நம் மாற்றுத்திறன் வீரர்  - வீராங்கனையரை வாழ்த்தினோம்." என்று தெரிவித்துள்ளார். 

 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Chennai High Court Udhayanidhi Stalin
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment