Papua New Guinea vs Uganda | T20 World Cup 2024: 9-வது டி20 உலகக்கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் கடந்த ஜூன் 2 முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் வெஸ்ட் இண்டீசில் உள்ள கயானாவின் பிராவிடன்ஸ் ஸ்டேடியத்தில் நடைபெற்ற 9வது லீக் ஆட்டத்தில் குரூப் சி-யில் இடம் பெற்றுள்ள பப்புவா நியூ கினியா - உகாண்டா அணிகள் மோதின.
மிகவும் பரபரப்பாக அரங்கேறிய இந்த ஆட்டத்தில், முதலில் பேட்டிங் செய்த பப்புவா நியூ கினியா அணி 19.1-வது ஓவரில் அனைத்து விக்கெட்டையும் பறிகொடுத்து 77 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. அந்த அணி தரப்பில் அதிகபட்சமாக ஹிரி ஹிரி 15 ரன்கள் எடுத்தார். இதனையடுத்து, 78 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய உகாண்டா 7 விக்கெட் இழப்புக்கு 18.2-வது ஓவரில் இலக்கை எட்டிப் பிடித்தது. முடிவில், 3 விக்கெட் வித்தியாசத்தில் பப்புவா நியூ கினியா அணியை உகாண்டா வீழ்த்தியது.
வரலாறு படைத்த உகாண்டா
பப்புவா நியூ கினியா அணிக்கு எதிராக அசத்தல் வெற்றியின் மூலம் உகாண்டா அணி அதன் முதல் டி20 உலகக் கோப்பை வெற்றியைப் பெற்றுள்ளது. இந்த வெற்றியை அந்த அணியின் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இது பற்றி உகாண்டா கேப்டன் பிரையன் மசாபா பேசுகையில், "உலகக் கோப்பையில் முதலில் வெற்றி பெறுவது எவ்வளவு சிறப்பானது என்பது உங்களுக்கே தெரியும்.
இதை விட சிறப்பு இருக்காது. எனது அணியைப் பற்றி நான் மிகவும் பெருமைப்படுகிறேன். அதாவது, அவர்கள் சிறப்பான வேலையில் ஈடுபட்டுள்ளனர், அவர்கள் அத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளனர். மேலும் தங்கள் நாட்டிற்கு ஒரு வெற்றியைப் பெறுவதற்காக உலகக் கோப்பை மிகவும் சிறப்பு வாய்ந்தது," என்று அவர் கூறினார்.
முன்னதாக, மிகவும் பிரபலமான கிரிக்கெட் நாடான ஜிம்பாப்வேயை வீழ்த்தி போட்டியை எட்டிய உகாண்டா அணி, தங்களது முதல் புள்ளிகளைப் பெற்றதால், உகாண்டா வீரர்கள் மைதானத்தில் நடனமாடி தங்கள் வெற்றியைக் கொண்டாடினர். இது தொடர்பான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“