Advertisment

ரஷ்ய - உக்ரைன் போர்: தாய் நாட்டிற்காக ஆயுதம் ஏந்தும் விளையாட்டு வீரர்கள்!

Ukraine’s proud sports legends, yesteryear stars and young athletes ready to pick up arms Tamil News: உக்ரைனின் ஜாம்பவான் வீரர்கள், முன்னாள் நட்சத்திர மற்றும் இளம் விளையாட்டு வீரர்கள் ரஷ்யாவுக்கு எதிரான போரில் ஆயுதம் ஏந்த தயாராகியுள்ளனர்.

author-image
WebDesk
New Update
Ukrainian sports icons are taking up arms to defend their country from Russia’s invasion

Sports Tamil News: உக்ரைன் நாட்டின் மீது படைத்து போர் தொடுத்து வரும் ரஷ்யா அந்நாட்டில் பெரும் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால் அங்கு பணிக்காகவும், படிப்பிற்காகவும் குடிபெயர்ந்த பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் தங்களின் தாயகம் நோக்கி புறப்பட்டு உள்ளனர். ஆனால், தாய் மண்ணை விட்டு பிரிய மனமில்லாமல் இருக்கும் உக்ரைன் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சடைந்து வருகின்றனர்.

Advertisment

இப்படியான அசாதாரண சூழ்நிலையில் நாட்டில் உள்ள முன்னாள் ராணுவ வீரர்கள், கைதிகள், போர் ஆயுதங்களை பயன்படுத்த தெரிந்தவர்கள் அனைவரும் போர்க்களத்தில் குதிக்குமாறு அந்நாட்டின் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

இதனால், உக்ரைன் நாட்டு உலக அளவில் பெருமை தேடித் தந்த விளையாட்டு ஜாம்பவான்கள், கடந்த கால நட்சத்திரங்கள் மற்றும் இளம் விளையாட்டு வீரர்கள், தங்கள் நாட்டை ரஷ்ய படையெடுப்பிலிருந்து பாதுகாக்க கையில் ஆயுதங்களை ஏந்த வேண்டிய கட்டாய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதில் ஆச்சரியப்படத்தக்க வகையில், அந்நாட்டின் முன்னணி குத்துச்சண்டை வீரர்கள் முன் வரிசையில் உள்ளனர்.

கிளிட்ச்கோ சகோதரர்கள்

மல்டிபிள் வேர்ல்ட் ஹெவிவெயிட் பட்டங்களுக்கு சொந்தக்காரரும், உக்ரேனிய தலைநகர் கியேவின் மேயராகவும் உள்ள விட்டலி கிளிட்ச்கோ, கடந்த மார்ச் 25 அன்று 'குட் மார்னிங் பிரிட்டன்' என்ற இங்கிலாந்து ஊடக நிகழ்ச்சியில் பேசுகையில், “எனக்கு வேறு வழியில்லை, நான் இதைச் செய்ய வேண்டும். நான் சண்டையிடுவேன்." என்று கூறியுள்ளார்.

publive-image

50 வயதான கிளிட்ச்கோ, 1995ம் ஆண்டு நடந்த உலக இராணுவ விளையாட்டுப் போட்டியில் சூப்பர் ஹெவிவெயிட் தங்கம் வென்றவர். குத்துச்சண்டையில் அந்நாட்டு இளம் வீரர்களுக்கு ஒரு முன்னோடியாக திகழும் அவரை ரஷ்யா போர்க்களம் காண வைத்திருக்கிறது. மேலும், பிஎம்டபிள்யு கார், கியே நகர மேயர் என சிறப்பான வாழ்வை நடத்தி வந்த அவர் தற்போது போர் புரியும் ஆயுதங்களை கையேந்தியுள்ளார்.

இதேபோல் அவரது சகோதரர் விளாடிமிர் கிளிட்ச்கோவும் ஆயுதம் ஏந்த இருக்கிறார். விளாடிமிர் குத்துச்சண்டையில் லெஃப்ட் ஜாப் அடிப்பதில் புகழ் பெற்றவர். இந்த கோடை மாதத்தில் அவர் நியூயார்க்கிற்குச் செல்லவிருந்தார். மேலும் கனாஸ்டோட்டாவில் உள்ள சர்வதேச குத்துச்சண்டை அரங்கில் அவருக்கு ஹால் ஆப் பேம் பட்டம் வழங்கப்பட உள்ளது.

லோமசென்கோ மற்றும் உசிக்

பெல்கோரோட்-டினெஸ்ட்ரோவ்ஸ்கி டெரிடோரியல் டிஃபென்ஸ் பட்டாலியனின் ஒரு பகுதியாக போருக்குத் தயாராக இருப்பதைக் காணும் புகைப்படத்தை பேஸ்புக் பக்கத்தில் சமீபத்தில் வெளியிட்டவர் வாசிலி லோமச்சென்கோ ஆவார்.

குத்துச்சண்டையில் உலக தரம் வாய்ந்த வீரரான ஒலெக்சாண்டர் உசிக், இங்கிலாந்து வீரர் அந்தோனி ஜோசுவாவை இந்த மே நடக்கவிருந்த சர்வதேச போட்டியில் எதிர்கொள்ள இருந்தார். ஆனால், அவர் தான் போர் முனையில் இருக்க வேண்டிய கட்டாயத்தை தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவர் வெளியிட்டு இருந்த அந்த வீடியோவில் ரஷ்ய அதிபர் புதின் மற்றும் "ரஷ்யாவின் மக்களுடன்" பேச முயன்றார்.

“எங்கள் அரசு, ராணுவத்துடன் நீங்கள் போரில் ஈடுபடவில்லை. நீங்கள் மக்களுடன் போரிடுகிறீர்கள். இது எங்கள் நிலம். நங்கள் வீட்டில் இருக்கிறோம். நான் ரஷ்ய மக்களிடம் பேச விரும்புகிறேன். நாங்கள் எங்களை சகோதரர்கள், பாரம்பரியமானவர்கள் என்று கருதினால், உங்கள் குழந்தைகளை எங்கள் நாட்டிற்குள் கால் பதிக்க விடாதீர்கள், எங்களுடன் சண்டையிடாதீர்கள்.

மேலும், நான் இதை ஜனாதிபதி விளாடிமிர் புடினிடமும் கூறிக்கொள்கிறேன். இந்தப் போரை நிறுத்த உரிமைகோரல்கள் இல்லாமல் எங்களுடன் உட்கார்ந்து பேச்சுவார்த்தை நடத்துங்கள். எங்கள் குழந்தைகள், மனைவிகள், பாட்டிமார்கள் அடித்தளத்தில் ஒளிந்து கொண்டிருக்கிறார்கள்… நாங்கள் இங்கே எங்கள் சொந்த நாட்டில் இருக்கிறோம், அதை வேறு வழியில் செய்ய முடியாது - நாங்கள் பாதுகாக்கிறோம். அதை நிறுத்து! இந்தப் போரை நிறுத்துங்கள்." என்று அந்த வீடியோவில் ஒலெக்சாண்டர் உசிக் தெரிவித்து உள்ளார்.

உக்ரைனின் இர்பினில் பிறந்த வெல்டர்வெயிட் பட்டத்தை வைத்திருப்பவர் யாரோஸ்லாவ் அமோசோவ், தனது குடும்பத்தை ஒரு பாதுகாப்பான மண்டலத்தில் வைத்த பிறகு, ரஷ்யாவிற்கு எதிராக "என்னால் முடிந்தவரை இந்த நாட்டைப் பாதுகாக்க" போரிட போவதாக கூறியிருக்கிறார்.

பட்டாலியனை அமைக்கும் டினிப்ரோ; மீண்டும் சண்டைக்கு செல்லும் ரியல் மாட்ரிட் வெற்றியாளர்

உக்ரைனின் உயர்மட்ட கிளப்புகளில் ஒன்றான டினிப்ரோ, தங்கள் நாட்டை சுற்றி வலைத்துள்ள ரஷ்யர்களுக்கு எதிராக ஒரு தன்னார்வ சண்டைப் பிரிவை ஏற்பாடு செய்துள்ளது. "உக்ரைனில் ரஷ்ய துருப்புக்களின் ஆக்கிரமிப்பிற்கு எதிராக டினிப்ரோ மற்றும் டினிப்ரோபெட்ரோவ்ஸ்க் பிராந்தியத்தை பாதுகாக்க நான் ஒரு தன்னார்வ பட்டாலியனை உருவாக்கியுள்ளேன்." என அந்த கிளப் அணியின் தலைவர் யூரி பெரேசா துணிச்சலுடன் கூறியுள்ளார்.

ஐந்து மாதங்களுக்கு முன்பு பெர்னாபியூவில் ரியல் மாட்ரிட் அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய ஷெரிப் டிராஸ்போலின் உக்ரேனிய மேலாளர் யூரி வெர்னிடுப், தற்போது அந்நாட்டு பிராந்திய ராணுவத்தில் சேர்ந்துள்ளார். வடக்கு உக்ரைனில் பிறந்த அவர், மால்டோவாவில் பணிபுரியும் மேலாளர் வான்கார்டில் சேர தனது அணியில் இருந்து விடைபெற்றார்.

கால்பந்து வீரர்களில், 'ஸ்போர்ட்டிங் கிஜோன் நட்சத்திரம்' வாசில் கிராவெட்ஸ், தனது தாயகத்தைப் பாதுகாப்பதற்காக தனது கால்பந்து வாழ்க்கையை கைவிடத் தயாராக இருப்பதாகக் கூறியிருக்கிறார். “பொதுமக்களும், மக்களும் மருத்துவமனைகளில் கொல்லப்படுகிறார்கள். இது ரஷ்யாவின் தவறு என்று நான் கூற விரும்பவில்லை, ஆனால் இது புடினின் தவறு.”என்று தெரிவித்துள்ளார்.

“நாம் நிம்மதியாக வாழ விரும்பும் நாடு. நாங்கள் யாரையும் தாக்க விரும்பவில்லை, நன்றாகவும் அமைதியாகவும் வாழ விரும்புகிறோம். நான் உண்மையைச் சொல்கிறேன்: நான் போருக்குச் சென்று என் மக்களுக்கு உதவ விரும்புகிறேன். இது உக்ரேனியர்களின் இதயத்திற்கு கடமையாகும்.”என்று ஒருபோதும் துப்பாக்கியை ஏந்தாத இளம் வீரர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

ரஷ்யா உக்ரைன் நாட்டை ஆக்கிரமித்த ஒரு நாளுக்குப் பிறகு, உக்ரேனிய வம்சாவளியைச் சேர்ந்த வின்னிபெக் கால்பந்து கோல்கீப்பர், ஸ்வியாடிக் ஆர்டெமென்கோ (22), கடந்த வெள்ளிக்கிழமை உக்ரைனின் ஆயுதப் படைகளுடன் சேர வரிசையில் மணிக்கணக்கில் காத்திருந்துள்ளார்.

ஆர்டெமென்கோ ஊடகங்களுக்கு அளித்துள்ள பேட்டியில், "எனது உயிரை இழக்க நேரிடும் என்ற பயம் உள்ளுக்குள் எப்போதும் இருக்கும், வெளிப்படையாக இது ஒரு போர். எனவே சிறிது பயம் ஏற்படுவது இயல்பானது. ஆனால் பெருமை மற்றும் பொறுப்பை ஏற்றுக்கொள்வது, அது பயத்தின் உணர்வை மிஞ்சும்." என்று தெரிவித்துள்ளார்.

போரில் களமிறங்கும் ஒலிம்பிக் வீரர்கள்

ரஷ்யாவுக்கு எதிரான போரில் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டுள்ள இரண்டு வீரர்கள் தங்களது பெயர்களை பதிவு செய்துள்ளனர். அவர்களில் டிமிட்ரோ பிட்ருச்னி என்பவர் பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்றவர். மற்றொருவரான டிமிட்ரோ மஸூர்ச்சுக், நோர்டிக் மிக்ஸ்டு ஸ்கீயர் (ஒரு வகையான பனிச் சறுக்குப்போட்டி) ஆவர்.

டிமிட்ரோ பிட்ருச்னி தனது பதிவில், “விளையாட்டு அரசியலுடன் தொடர்புடையது அல்ல என்று சொல்லாதீர்கள். இது தொடர்புடையது. இந்த பதிவை நீங்கள் படிக்கும் போது என் தாய்நாட்டில் ராணுவ வீரர்களும், பொதுமக்களும் இறந்து கொண்டு இருக்கிறார்கள். எனவே, நீங்கள் விலகி இருக்க வேண்டாம் என உங்களை கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன்." என்று பதிவிட்டுள்ளார்.

போராட தயாராகும் டென்னிஸ் வீரர் ஸ்டாகோவ்ஸ்கி

உக்ரேனிய முன்னாள் உலக நம்பர் 31 வது வீரரான செர்ஜி ஸ்டாகோவ்ஸ்கி, தனக்கு இராணுவ அனுபவம் இல்லை என்றும், ஆனால் மக்கள் அமைதியாக உட்கார்ந்து பார்க்க எந்த காரணமும் இல்லை என்றும் கூறியுள்ளார். ஸ்டாகோவ்ஸ்கி கடந்த 2013ம் ஆண்டு நடந்த விம்பிள்டனில் நடப்பு சாம்பியனான ரோஜர் பெடரரை வீழ்த்தி இருந்தார்.

ஸ்கை செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டியில், நான் எனது 36 வயதில் ரஷ்யர்களை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறேன். இராணுவம் இருப்புக்களை திறந்து விட்டது மற்றும் போராட தயாராக இருக்கும் அனைவரையும், உள்ளே வந்து ஆயுதங்களை சேகரிக்க மற்றும் பிராந்திய எதிர்ப்பின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும்," என்று அவர் கூறியுள்ளார்.

Sports Ukraine Russia
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment