11-வது புரோ கபடி லீக் போட்டி ஐதராபாத்தில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. டிசம்பர் 29 ஆம் தேதி வரை நடக்கவுள்ள இந்தத் தொடரில் 12 அணிகள் களமாடியுள்ளன. இதில், ஒவ்வொரு அணியும் தலா 22 ஆட்டத்தில் விளையாட வேண்டும்.
லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே -ஆப் சுற்றுக்கு முன்னேறும். லீக்கில் 'டாப்-2' இடங்களை வசப்படுத்தும் அணிகள் நேரடியாக அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைக்கும். 3 முதல் 6 இடங்களை பெறும் அணிகள் வெளியேற்றுதல் சுற்றில் மோதி அதில் வெற்றி பெறும் 2 அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.
இந்த நிலையில், புரோ கபடி லீக் தொடரில் திங்கள்கிழமை (அக்டோபர் 21) இரவு 8 மணிக்கு ஐதராபாத்தில் உள்ள கச்சிபௌலி உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் உ.பி.யோதாஸ் - தபாங் டெல்லி கே.சி. அணிகள் மோதின. தொடக்க ஆட்டத்தில் யு-மும்பை அணியை வீழ்த்திய தபாங் டெல்லி அதே உத்த்வேகத்துடன் இன்றைய ஆட்டத்தில் களமிறங்கியது. ஆனால், உ.பி.யோதாஸ் சிறப்பாக விளையாடி 28 புள்ளிகள் பெற்றது. அதே நேரத்தில், தபாங் டெல்லி 23 புள்ளிகள் மட்டுமே பெற்றது. இதன் மூலம், ஆட்ட நேர இறுதியில் உ.பி. யோத்தாஸ் 5 புள்ளிகள் வித்தியாசத்தில் தபாங் டெல்லியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
நேருக்கு நேர்
புரோ கபடி லீக் வரலாற்றில், உ.பி யோதாஸ் மற்றும் தபாங் டெல்லி கே.சி. அணிகள் 11 முறை நேருக்கு நேர் மோதி விளையாடியுள்ளனர். இதில் உ.பி யோதாஸ் 6 முறையும், தபாங் டெல்லி கே.சி. 5 முறை வெற்றி பெற்றுள்ளன. இந்த வெற்றியின் மூலம், உ.பி யோத்தாஸ் 12 போட்டிகளில் 7 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.
கடைசியாக இவ்விரு அணிகள் மோதிய ஆட்டத்தில் உபி யோதாஸ் அணியை தபாங் டெல்லி கே.சி. 36-27 என்கிற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தியது.
கடந்த சீசனில் 22 போட்டிகளில் ஆடிய உபி யோதாஸ் அணி 4 வெற்றி, 17 தோல்வி, ஒரு ஆட்டம் டை என 31 புள்ளிகள் பெற்று புள்ளிகள் பட்டியலில் 11வது இடத்தை பிடித்தது. மறுபுறம், தபாங் டெல்லி கே.சி. 13 போட்டிகளில் வெற்றி, 6ல் தோல்வி, 3 டை என மொத்தம் 79 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்தது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“