UP Yoddha vs Tamil Thalaivas – Pro Kabaddi 2022 Tamil News: 12 அணிகள் பங்கேற்றுள்ள புரோ கபடி லீக் தொடர் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கிறது. இந்த தொடருக்கான லீக் சுற்று போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில், பிளேஆஃப் சுற்றுக்கு போட்டிகள் நடக்கவுள்ளன. அதன்படி, இந்த பிளேஆஃப் சுற்றுக்கு ஆறு அணிகள் தகுதிப் பெற்றுள்ளன. இதில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் மற்றும் புனேரி பல்டன் அணிகள், புள்ளிப் பட்டியலில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்ததன் மூலம், நேரடியாக அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது.
இதனால், அந்த அணிகள் எலிமினேட்டர் போட்டிகளில் விளையாட வேண்டியதில்லை. ஆனால், மற்ற 4 அணிகள் எலிமினேட்டர் சுற்றில் மொத வேண்டும். அவ்வகையில், பெங்களூரு புல்ஸ், உ.பி யோதாஸ், தமிழ் தலைவாஸ் மற்றும் தபாங் டெல்லி ஆகிய நான்கு அணிகள் எலிமினேட்டர் போட்டிகளை விளையாட உள்ளன. இதில் வெற்றி பெற்று அணிகள் அரையிறுதியில் மோதுவார்கள்.
இந்நிலையில், தமிழ் தலைவாஸ் அணி அதன் எலிமினேட்டர் சுற்றில் உ.பி யோதாஸ் அணியுடன் மல்லுக்கட்டுகிறது. இப்போட்டியானது நாளை செவ்வாய் கிழமை (டிசம்பர் 13 ஆம் தேதி) இரவு 8:30 மணிக்கு மும்பையில் உள்ள டோம், என்எஸ்சிஐ எஸ்விபி ஸ்டேடியத்தில் தொடங்குகிறது.
#Thunivu oda aduvom, eppavum pola!#UPvCHE | #IdhuNammaTeam | #GiveItAllMachi | #FantasticPanga pic.twitter.com/bjRsIpVn9Q
— Tamil Thalaivas (@tamilthalaivas) December 11, 2022
உ.பி யோதாஸ் vs தமிழ் தலைவாஸ்: இரு அணிகளின் பலம் – பலவீனம் என்ன?
நடப்பு சீசனில் 71 புள்ளிகளை குவித்த உ.பி யோதாஸ் அணி பட்டியலில் நான்காவது இடத்தைப் பிடித்த அணியாக பிளேஆஃப்க்கு முன்னேறியது. அதே நேரத்தில், தமிழ் தலைவாஸ் லீக் கட்டத்தின் முடிவில் 66 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தைப் பிடித்ததன் மூலம், தொடரில் முதல்முறையாக பிளேஆஃப் முன்னேறியுள்ளது. இரு அணிகளிலும் பர்தீப் நர்வால், நரேந்தர், அஜிங்க்யா பவார் மற்றும் ரோஹித் தோமர் போன்ற ரெய்டர்கள் நல்ல ஃபார்மில் உள்ளனர்.

தமிழ் தலைவாஸ் அணியில் பவன் செஹ்ராவத் இல்லாத நிலையில், நரேந்தர் ஹோஷியார் 21 போட்டிகளில் 220 ரெய்டு புள்ளிகளுடன் தலைவாஸிற்கான ரெய்டிங் பிரிவில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார். மறுபுறம், பர்தீப் நர்வால் 21 போட்டிகளில் 208 ரெய்டு புள்ளிகளுடன் பிகேஎல்லில் தனது நிலையான ஆட்டத்தை தொடர்ந்துள்ளார். இரண்டு நட்சத்திர ரைடர்களும் அதிக ரெய்டு புள்ளிகள் பட்டியலில் ஐந்தாவது மற்றும் ஆறாவது இடங்களை பிடித்துள்ளனர்.
இந்த இரு அணிகளிலும் ரெய்டிங் சிறப்பாக இருந்தாலும், டிஃபென்சில் கலவையாகத் தெரிகிறது. இருப்பினும், இந்த சீசனில் இவ்விரு அணிகள் மோதிய தொடக்க ஆட்டத்தில் டிஃபென்சில் கலக்கி இருந்தனர். தமிழ் தலைவாஸ் அணியில் சாஹில் குலியா, சாகர், மோஹித், எம் அபிஷேக், அர்பித் சரோஹா மற்றும் ஹிமான்ஷு ஆகியோர் உள்ளனர். உ.பி யோதாசுக்கு நித்தேஷ் குமார், சுமித் மற்றும் ஆஷு சிங் ஆகியோர் பக்கபலமாக உள்ளனர்.
கடந்த அக்டோபர் 23 ஆம் தேதி இவ்விரு அணிகள் மோதிய தொடக்க ஆட்டத்தில் உ.பி யோதாஸ் அணி 41-24 என்ற புள்ளிக் கணக்கில் தமிழ் தலைவாஸை வென்றது. அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், கடந்த புதன்கிழமை (டிசம்பர் 7 ஆம் தேதி) நடந்த 2வது சுற்று ஆட்டத்தில் 43-28 என்ற கணக்கில் உ.பி யோதாஸை வீழ்த்தியது தமிழ் தலைவாஸ்.
உ.பி யோதாஸ் vs தமிழ் தலைவாஸ்: நேருக்கு நேர்
புரோ கபடி லீக் தொடரில் உ.பி யோதாஸ் – தமிழ் தலைவாஸ் அணிகள் இதுவரை 12 நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில், உ.பி யோதாஸ் 5 முறையும், தமிழ் தலைவாஸ் 4 முறையும் வெற்றி பெற்றுள்ளன. மூன்று போட்டிகள் டையில் முடிவடைந்துள்ளன.
நாளை நடைபெறவிருக்கும் எலிமினேட்டருக்கு முன், கடந்த ஐந்து போட்டிகளில், உ.பி யோதாஸ் மூன்று வெற்றி மற்றும் இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. இதில் தமிழ் தலைவாஸுக்கு எதிரான தோல்வியும் அடங்கும். தமிழ் தலைவாஸ் அணி அதன் கடைசி 5 போட்டிகளில் மூன்று வெற்றி, ஒரு முறை தோல்வி மற்றும் ஒரு முறை டை ஆகியுள்ளது.
உ.பி யோதாஸ் vs தமிழ் தலைவாஸ்: இரு அணிகளின் உத்தேச வீரர்கள் பட்டியல்
உ.பி யோதாஸ்:
நிதேஷ் குமார், ரோஹித் தோமர், குர்தீப், பர்தீப் நர்வால், ஆஷு சிங், சந்தீப் நர்வால், சுமித்
தமிழ் தலைவாஸ்:
சாஹில் குலியா, ஹிமான்ஷு, அஜிங்கி பவார், மோஹித், நரேந்தர், எம் அபிஷேக், அர்பித் சரோஹா
உ.பி யோதாஸ் vs தமிழ் தலைவாஸ்: எலிமினேட்டர் விவரங்கள் – லைவ் ஸ்ட்ரீமிங்
போட்டி தொடங்கும் நேரம் மற்றும் தேதி: நாளை செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 13) இரவு 8:30 மணிக்கு
நேரலை சேனல்: ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 2 மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 2HD
லைவ் ஸ்ட்ரீமிங்: டிஸ்னி+ஹாட்ஸ்டார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil