Pro Kabaddi League: 10-வது புரோ கபடி லீக் திருவிழா கடந்த 2ம் தேதி தொடங்கி இந்தியாவில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தொடரில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி, குஜராத் ஜெயன்ட்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பால்டன், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா மற்றும் உ.பி. யோத்தாஸ் ஆகிய 12 அணிகள் களமாடி வருகின்றன.
இந்நிலையில் இந்த தொடரில் புதன்கிழமை (10.01.2024) 2 ஆட்டங்கள் நடைபெறுகிறது. இரவு 8 மணிக்கு மும்பையில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் உ.பி.யோத்தாஸ் - தமிழ் தலைவாஸ் அணிகள் மோதியது.
ஆட்டம் தொடங்கியதில் இருந்தே தமிழ் தலைவாஸ் அணி ஆதிக்கம் செலுத்தியது. ஆட்ட நேர முடிவில் தமிழ் தலைவாஸ் அணி ரெய்டு பாயின்ட்ஸ் 22, டேக்கிள் பாயிண்ட்ஸ் 18, ஆல் அவுட் பாயிண்ட்ஸ் 6 என 46 புள்ளிகள் எடுத்திருந்தது. எதிர் அணியான, உ.பி யோத்தாஸ் ரெய்டு பாயிண்ட்ஸ் 18, டேக்கிள் பாயிண்ட்ஸ் 9 என 27 புள்ளிகள் எடுத்திருந்தன. இதன் மூலம் 19 புள்ளிகள் அதிகமாக பெற்று, தமிழ் தலைவாஸ் அணி அபார வெற்றி பெற்றது.
இந்த புரோ கபடி லீக் தொடரில், தமிழ் தலைவாஸ் அணி 11 போட்டிகளில் விளையாடி 3 போட்டிகளில் வெற்றி பெற்று 11-வது இடத்தில் உள்ளது. தொடர்ந்து தோல்விகளைச் சந்தித்து வந்த தமிழ் தலைவாஸ் அணி, இந்த போட்டியில் உ.பி யோத்தாஸ் அணியை வீழ்த்தி ஆறுதல் வெற்றி பெற்றுள்ளது.
இதையடுத்து, புதன்கிழமை இரவு 9 மணிக்கு தொடங்கிய இரண்டாவது ஆட்டத்தில் யு மும்பா - அரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மோதியது.
ஆரம்பத்தில் இருந்தே இரு அணிகளும் மாறி மாறி புள்ளிகளை சரிசமமாக பெற்று வந்தன. ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் தலா 44 புள்ளிகளைப் பெற்றதால், யு மும்பா - அரியானா ஸ்டீலர்ஸ் 44 - 44 என்ற புள்ளிகள் கணக்கில் டையில் முடிந்தது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“