Pro Kabaddi League: 10-வது புரோ கபடி லீக் திருவிழா கடந்த 2ம் தேதி தொடங்கி இந்தியாவில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தொடரில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி, குஜராத் ஜெயன்ட்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பால்டன், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா மற்றும் உ.பி. யோத்தாஸ் ஆகிய 12 அணிகள் களமாடி வருகின்றன.
இந்நிலையில் இந்த தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. அதில் டெல்லியில் உள்ள தியாகராஜ் உள்விளையாட்டு அரங்கத்தில் இரவு 8 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் உ.பி.யோத்தாஸ் - யு மும்பா அணிகள் மோத உள்ளன. இதையடுத்து, இரவு 9 மணிக்கு நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் தபாங் டெல்லி - தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோத உள்ளன.
யு மும்பாவை எளிதாக வென்ற யு.பி யோதாஸ்
இன்றைய முதல் போட்டியில் யு மும்பா மற்றும் யு.பி யோதாஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் தொடக்கம் முதலே யு.பி யோதாஸ் ஆதிக்கம் செலுத்தியது. யு மும்பா புள்ளிகளைக் குவிக்க திணறியது. இதனால் யு.பி யோதாஸ் 16 புள்ளிகள் வித்தியாசத்தில் யு மும்பாவை வீழ்த்தியது.
யு.பி யோதாஸ் 39 புள்ளிகளையும், யு மும்பா 23 புள்ளிகளையும் பெற்றன. யு.பி யோதாஸ் அணியில் அதிகபட்சமாக, சுமித் 7 புள்ளிகளையும் ககன் 6 புள்ளிகளையும் பெற்றனர். யு மும்பா அணியில் அதிகபட்சமாக சிவம் 5 புள்ளிகளை எடுத்தார்.
தெலுங்கு டைட்டன்ஸை வீழ்த்திய தபாங் டெல்லி
இன்றைய இரண்டாவது போட்டியில் தபாங் டெல்லி மற்றும் தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டி தொடக்கம் முதலே விறுவிறுப்பாகச் சென்றது. இரு அணிகளும் புள்ளிகளை எடுக்க கடுமையாக போராடினார். இருப்பினும் தபாங் டெல்லி சற்று ஆதிக்கம் செலுத்தியது. அஷூ மாலிக் சிறப்பாக விளையாடி புள்ளிகளைக் குவித்தார். இதனால் தபாங் டெல்லி 11 புள்ளிகள் வித்தியாசத்தில் தெலுங்கு டைட்டன்ஸை வீழ்த்தியது.
தபாங் டெல்லி 44 புள்ளிகளையும், தெலுங்கு டைட்டன்ஸ் 33 புள்ளிகளையும் பெற்றன. தபாங் டெல்லி அணியில் அதிகபட்சமாக, அஷூ மாலிக் 20 புள்ளிகளை எடுத்து அசத்தினார். தெலுங்கு டைட்டன்ஸ் அணியில் அதிகபட்சமாக பவன் 9 புள்ளிகளையும், ராபின் 8 புள்ளிகளையும் எடுத்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“