தொடர் தோல்வியால் வார்த்தைகளால் விளாசிய ப்ரீத்தி ஜிந்தா! பொறுப்பை உதறும் ஷேவாக்?

அவர் கிரிக்கெட்டில் தலையிடாமல் இருக்க நடவடிக்கை இருக்க வேண்டும்

நடப்பு ஐபிஎல்லில் வலிமை மிக்க அணியாக தொடரைத் தொடங்கிய ரவிச்சந்திரன் அஷ்வின் தலைமையிலான கிங்ஸ் XI பஞ்சாப் அணி, கடைசியாக விளையாடிய நான்கு போட்டியில் மூன்றில் தோற்று உள்ளது. அதிலும், சன் ரைசர்ஸ் அணிக்கு எதிராக 119 ரன்னில் சுருண்ட பஞ்சாப், கடைசியாக நடந்த ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 158 ரன்களை சேஸ் செய்ய முடியாமல் தோற்றது. குறிப்பாக, அன்றைய போட்டியில் பஞ்சாப் வீரர் லோகேஷ் ராகுல் இறுதிவரை நாட் அவுட்டாக இருந்து 95 ரன்கள் குவித்தும், 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்கள் மட்டும் எடுத்து தோற்றது. இது பஞ்சாப் ரசிகர்களை பெரிதும் ஏமாற்றத்திற்கு உள்ளாக்கியது. ரசிகர்களை மட்டுமல்ல, அணியின் உரிமையாளரும் நடிகையுமான ப்ரீத்தி ஜிந்தாவை ரொம்பவே அப்செட் ஆக்கியது. ஆனால், அதன் விளைவு, ப்ரீத்தி ஜிந்தாவிற்கும், அந்த அணியின் தலைமை ஆலோசகர் ஷேவாக்கிற்கும் மோதலை ஏற்படுத்தி இருக்கிறது.

இதுகுறித்து வெளியாகியுள்ள தகவலின் படி, கடந்த 8ம் தேதி ராஜஸ்தான் – பஞ்சாப் போட்டிக்கு பிறகு, ஷேவாக்கை சந்தித்த ப்ரீத்தி ஜிந்தா, அவரை கடுமையாக சாடியிருப்பதாக தெரிகிறது. அந்தப் போட்டியில் பயன்படுத்தப்பட்ட யுக்திகள் குறித்து ஷேவாக்கிடம் அவர் கேள்வி எழுப்பி, அதன்பிறகு, தனது அதிருப்திகளையும் ப்ரீத்தி வெளிப்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.

குறிப்பாக, அன்றைய போட்டியின் போது, கேப்டன் ரவிச்சந்திரன் அஷ்வின் மூன்றாவது வீரராக களமிறக்கப்பட்டார். ஆனால், ரன் ஏதும் எடுக்காமல் அவுட்டானார். இது முழுக்க ஷேவாக்கின் முடிவு என கூறப்படுகிறது. ‘ஏன் பேட்டிங் ஆர்டரில் தேவையில்லாமல் மாற்றங்களை கொண்டு வருகிறீர்கள்?’ என ஷேவாக்கிடம் அவர் கேள்வி எழுப்பி இருக்கிறார்.

இதுகுறித்து மற்ற உரிமையாளர்களிடம் பேசிய ஷேவாக், ப்ரீத்தியின் சினிமா நடிப்பை பற்றி நான் பேசுவதும் இல்லை. விமர்சனம் செய்வதுமில்லை. அதுபோல், அவர் கிரிக்கெட்டில், எனது பணியில் தலையிடாமல் இருக்க நடவடிக்கை இருக்க வேண்டும் கூறியிருப்பதாக தெரிகிறது. எனினும் தொடர்ந்து கோபத்தில் இருக்கும் ஷேவாக், தனது பதவியை ராஜினாமா செய்து, பஞ்சாப் அணியில் இருந்து விலக இருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

எது எப்படியோ, இப்போது வரைக்கும் புள்ளிப்பட்டியலில் பஞ்சாப் பாதுகாப்பான இடத்திலேயே உள்ளது. இதுவரை பத்து போட்டிகளில் ஆடியுள்ள பஞ்சாப் 6 வெற்றிகளுடன் 12 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. நிச்சயம், பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு மிக அதிகமாக உள்ளது. ஆகையால், பிரச்சனைகளை தூர வைத்து, அணியாக ஒருங்கிணைந்து ஆடி கோப்பையை வெல்வதில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

×Close
×Close